Published : 24 Sep 2015 10:05 AM
Last Updated : 24 Sep 2015 10:05 AM
தாழ்த்தப்பட்ட மக்களும் பழங்குடியினரும் முன்னேற, முதலில் கல்வி பெற வேண்டும் என 19-ம் நூற்றாண்டிலேயே பறைசாற்றியவர் மகாத்மா ஜோதிராவ் பூலே. ஆனால், சாதிய ஏற்றத்தாழ்வுகளை அவ்வளவு எளிதாக மாற்ற முடியாது என்று உணர்ந்தார். ஆகவே, தன்னைப் பின்தொடர்ந்தவர்களிடம், “போராட்டம் இன்றி நீங்கள் இழந்த உரிமையை வெல்ல முடியாது” என்றார்.
ஏழ்மையை அகற்றவும் சமூக அநீதிகளை ஒழிக்கவும் ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைத்தார். 1873 செப்டம்பர் 24-ல் ‘சத்ய ஷோதக் சமாஜ்’ (உண்மையைத் தேடுபவர்களின் சங்கம்) எனும் அமைப்பை மகாராஷ்டிரத்தில் நிறுவினார். இந்தியாவின் முதல் பெண் ஆசிரியையான அவரது மனைவி சாவித்திரி பூலேவும் இயக்க வேலைகளில் தீவிரமாகச் செயல்பட்டார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இருவரும் இணைந்து பகுத்தறிவைக் கற்பித்தனர்.
தங்கள் அமைப்பில் 90 பெண் உறுப்பினர்களைத் திரட்டி அவர்களுக்குத் தலைவியாக வழி நடத்தினார் சாவித்ரி. 1890-ல் ஜோதிராவ் பூலே மரணமடைந்தார். இருந்தாலும் மனோ திடத்துடன் மகாராஷ்டிராவின் பட்டிதொட்டி எங்கும் சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் சாவித்ரி. பல ஒடுக்கப்பட்ட மக்களின் வேதனைகளைப் போக்கும் சக்தியாக உருவெடுத்தது ‘சத்ய ஷோதக் சமாஜ்’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT