Published : 13 Sep 2020 12:31 PM
Last Updated : 13 Sep 2020 12:31 PM
கர்னாடக இசைக் கலைஞர்கள் பாம்பே ஜெயஸ்ரீ, அபிஷேக் ரகுராம், லால்குடி ஜி.ஜே.ஆர். கிருஷ்ணன், லால்குடி விஜயலட்சுமி, அமிர்தா முரளி, அஸ்வத் நாராயணன் ஆகியோர் இணையவழியில் இசை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். கல்விக்கான இந்தக் கலைஞர்களின் கலைச்சேவை கடந்த ஆகஸ்ட் 22 தொடங்கி அக்டோபர் 12 வரை நடைபெறுகிறது.
இந்த நிதி திரட்டும் நிகழ்ச்சிகளைத் தமது முகநூல் வழியாக நடத்தும் 'மிலாப்', இதைக் காணும் எவரும் அவரவர் விருப்பப்பட்ட தொகையை வழங்கலாம், இதற்கு எந்த வரையறையும் இல்லை என தெரிவித்துள்ளது. மேலும், இதற்காக 'மிலாப்' எந்தக் கட்டணமும் விதிக்கவில்லை. திரட்டப்படும் நிதி 100 சதவீதம் ஒற்றை ஆசிரியர் பள்ளிகளுக்கே செல்லும் என்பது இந்த நிகழ்ச்சிகளின் சிறப்பு.
தானத்தில் சிறந்த தானம்
"எல்லாவிதமான தானங்களைவிடவும் கல்வி தானம் உயர்ந்தது. எல்லாவிதப் பந்தங்களையும் விட ஆசிரியர் - மாணவன் பந்தம் மிகவும் உன்னதமானது. இந்த ஓராசிரியர் பள்ளிகளைப் பொறுத்தவரை இதில் ஈடுபட்டிருப்பவர்கள் பிரதிபலனே எதிர்பார்க்காமல் இந்த நாட்டின் குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்துவருகின்றனர். போக்குவரத்து வசதியில்லாத கிராமங்கள் முதல் பாதைகள் இல்லாத மலைக்கிராமங்கள்வரை பல இடங்களிலும் மாலைநேர வகுப்புகளின் மூலம் கல்வியைக் கொண்டு சேர்க்கின்றனர்.
மகத்தான இந்தப் பணியில் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைச் செலுத்துவதன்மூலம் தேசத்தின் கல்லாமையை ஒழிப்பதற்கான இந்த சேவையில் நாமும் முழு மனதோடு ஈடுபடுவோம்" என்கிறார், வீணை கலைஞர் ஜெயந்தி குமரேஷ்.
ஓராசிரியர் பள்ளிகளின் தொடக்கம்
தமிழ்நாட்டின் தொலைதூர கிராமங்களில் சாலை, பேருந்து, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத இடங்களிலும் அந்தப் பகுதியில் இருக்கும் படித்த பெண்களை அடையாளம் கண்டு அவர்களின் மூலமாக அந்தப் பகுதியில் குழந்தைகளின் கல்வியை வளர்ப்பதுதான் ஓராசிரியர் பள்ளிகளின் நோக்கம். ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்தலை எளிதாக்க, 'ஓராசிரியர் பள்ளி' எனும் திட்டத்தை சுவாமி விவேகானந்தா ஊரக வளர்ச்சி சங்கம் கடந்த 2006-ல் தொடங்கியது.
திருவண்ணாமலை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி ஆகிய 10 மாவட்டங்களில் 1,057-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 31 ஆயிரம் குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கப்படுகிறது.
கல்வியோடு சுகாதாரம்
"மகளிர் மேம்பாட்டின் ஒரு பகுதியாக, கிராமங்களில் உள்ள தகுதியான பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆசிரியர் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களே ஆசிரியர்களாக இருந்து மாணவர்களுக்குக் கற்பிக்கின்றனர். பள்ளிகளில் கரும்பலகைகள், பாய்கள், சோலார் விளக்குகள் மற்றும் முதலுதவி பெட்டிகள் பொருத்தப்படுவதோடு, குழந்தைகளுக்குப் புத்தகங்கள், எழுதுபொருள் மற்றும் மருத்துவ முகாம்கள் இலவசமாகk நடத்தப்படுகின்றன" என்றார், ஓராசிரியர் பள்ளிகள் திட்டத்தின் துணை தலைவர் அகிலா சீனிவாசன்.
பிரிக்கமுடியாத ஓராசிரியர் பந்தம்
ஓராசிரியர் பள்ளிகளின் கவுரவ செயலாளரும் சமூக சேவகருமான ஆர்.பி. கிருஷ்ணமாச்சாரி, "14 ஆண்டுகளுக்கு முன்பு 50 ஓராசிரியர் பள்ளிகளோடு இந்தத் திட்டத்தைத் தொடங்கினோம். இன்றைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓராசிரியர் பள்ளிகள் 10 மாவட்டங்களில் செயல்படுகின்றது. 1,100 பெண் ஆசிரியர்கள் இருக்கின்றனர்.
பத்து நாட்களுக்கு ஒருமுறை அந்த ஆசிரியர்கள் 200 பேருக்கு சுழற்சி முறையில் பல துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்டு அவர்களுக்கு தொடர் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதற்காகவே ஸ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள உலுந்தை எனும் கிராமத்தில் பயிற்சி நிலையம் செயல்படுகிறது.
கிராமத்திலேயே வசிக்கும் பெண்களுக்கு அந்தக் கிராமத்திலேயே இருக்கும் குழந்தைகளோடு ஒரு நெருக்கமான பிணைப்பு ஏற்பட்டுவிடும். சில ஆசிரியர்கள் ஓராசிரியர் பள்ளியிலேயே படித்து இப்போது ஆசிரியர்களாக இருப்பவர்களும் இருக்கிறார்கள்.
கல்வியோடு, ஆடல், பாடல், நாட்டுப்பற்று, பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துதல், ஒழுக்கம் போன்றவற்றையும் குழந்தைகளின் மனத்தில் பசுமரத்தாணியாய் பதியவைக்கின்றனர் இந்த ஆசிரியர்கள்.
ஓராசிரியர் பள்ளிகளின் செயல்பாட்டை கவனிப்பதற்கு எங்களுடைய கண்காணிப்பாளர்கள் குழுவும் இருக்கிறது. இதற்கென்றே ஒரு செயலியையும் வைத்திருக்கிறோம். அதன் மூலம் பள்ளிகளுக்கான தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகின்றன" என்றார்.
அடுத்த ஒரு வருடத்தில், தமிழ்நாட்டுக் கிராமங்களில் கூடுதலாக 1,000 ஓராசிரியர் பள்ளிகளை அமைப்பதற்காக, தெற்காசியாவின் மிகப்பெரிய கூட்டு நிதித் தளமான 'மிலாப்' மூலம் நிதி திரட்டப்படுகிறது. இதன்மூலம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் மக்களிடமிருந்து ஆதரவைப் பெற்று, ரூபாய் 1 கோடி நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாகத்தான் கல்வியைக் கலையின் மூலமாக வளர்க்கும் இத்தகைய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
நிகழ்ச்சியைக் காண்பதற்கு: https://www.facebook.com/events/3438708582860227/
நிதி உதவி செய்வதற்கு: milaap.org/sts
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT