Published : 10 Sep 2020 04:09 PM
Last Updated : 10 Sep 2020 04:09 PM
தொலைக்காட்சிகளில் சித்திரப் படங்களைப் பார்ப்பது என்றால் குழந்தைகளுக்கு அலாதி ப்ரியம்தான். சோட்டாபீம், டோரா, மோட்டு பட்டுலு, சிவா, மாயாஜால ருத்ரா எனக் குழந்தைகள் பார்த்துப் பழகிய கற்பனை கதாபாத்திரங்களுக்கு மத்தியில், தங்கள் இரண்டு வயது மகன் வியனைச் சித்திரப் படைப்பு வடிவில் கொண்டுவந்து குழந்தைகளுக்கான படைப்புகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர் நெல்லையைச் சேர்ந்த ஒரு தம்பதி.
வியனின் தாயான கஸ்தூரி வெங்கட்ராமன் இதுகுறித்து 'இந்து தமிழ்' இணையதளத்திடம் பேசினார்.
''பொதுவாகவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் செல்போனிலேயே நேர விரயம் செய்கிறார்கள் என்ற மனநிலையில் இருக்கின்றனர். ஆனாலும் பலர் தங்களது அன்றாடப் பணிக்கு நெருக்கடி இல்லாமல் இருக்கட்டுமே எனக் குழந்தைகள் கையில் செல்போனைக் கொடுக்கத்தான் செய்கிறார்கள். இன்று, குழந்தைகளிடத்தில் செல்போன் கொடுப்பது தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது. அதிலும், இப்போது கல்வியே கரோனாவால் செல்போனுக்குள் வந்துவிட்டது.
தாத்தா, பாட்டி சொல்லிக்கொடுக்கும் கதைகள் முதல், நீதிநெறி விஷயங்கள் வரை அனைத்தும் இன்று செல்போனிலும் கிடைக்கிறது. இதையெல்லாம் பார்க்கும் எங்கள் குழந்தை வியனுக்கு, அதில் அவனையே ஹீரோவாகப் பார்த்தால் எப்படி இருக்கும் என யோசித்தோம். அதன் வெளிப்பாடுதான் வியனைக் கதை நாயகனாக்கி அறிவுரை சொல்லும் சித்திரக்கதைகளை எடுக்க ஆரம்பித்தோம். அதற்கும் முன்பே சில வித்தியாசமான முயற்சிகளைச் செய்திருந்தோம்.
வியனுக்கு நானும், என் கணவரும் சேர்ந்துதான் தாலாட்டுப் பாடல் எழுதினோம். அதை வீடியோவாகவும் வெளியிட்டோம். இதேபோல் வியனின் ஒரு வயதுப் பிறந்த நாளுக்காக பிரத்யேகமாகத் தமிழில் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் எழுதி வீடியோவாக வெளியிட்டோம். அதற்கு முன்பு கவிஞர் அறிவுமதி எழுதிய பிறந்த நாள் வாழ்த்துப் பாடலைத் தாண்டி தமிழில் யாருமே முயற்சிக்காத தளம் அது.
அதன் அடுத்த முயற்சியாக எங்கள் செல்ல மகன் வியனின் இரண்டாவது பிறந்த நாளுக்கு மூன்று பாடல்களை எழுதி, சித்திரப்படத் தொகுப்பாக வெளியிட்டு இருக்கிறோம். இதில் நல்ல ஆரோக்கியமான உணவின் முக்கியத்துவத்தை வியன் சொல்வது, விலங்குகளைத் துன்புறுத்தக்கூடாது, அவற்றை நேசிக்கவேண்டும் எனச் சொல்வது, குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய சாலை விதிகள் என ஒவ்வொன்றும் குழந்தைகளுக்கு அறிவூட்டும். இன்னொன்று இவை அனைத்துமே கரோனா பொதுமுடக்கக் காலத்தில் எடுக்கப்பட்டவை. இதனால் யாருமே ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளாமலே அவரவரிடம் இருக்கும் தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்திச் செய்திருக்கிறோம்.
வியனைக் கதைநாயகனாக வைத்து இதைத் தொடர்ந்து செய்ய இருக்கிறோம். அன்பு, ஒழுக்கம் என அனைத்தையும் தானே போதிப்பதைப் பார்த்து வளரும் பருவத்தில் ஆச்சர்யப்படுவான் அல்லவா? ஒவ்வொரு பெற்றோரும் இப்படி முயற்சித்தால் அவரவர் குழந்தைகளே எதிர்காலத்தில் ரோல் மாடல் ஆவார்கள். கற்பனைப் பாத்திரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு இப்போது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் செல்போனை மட்டுமே கொண்டு இதைச் சாத்தியமாக்குவதும் எளிதுதான்.
வியனைக் கதாபாத்திரமாக சக்தி என்பவர் ஓவியம் வரைந்து கொடுத்தார். நாசரேத்தை சேர்ந்த ஈஸ்டர் நிர்மல் இசையமைத்தார். 2டி அனிமேஷனை சுப்பிரமணியன் உருவாக்கினார். எங்கள் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் பாடினார்கள். இவ்வளவையும் ஒருவருக்கொருவர் சந்திக்காமலேயே சாத்தியப்படுத்தினோம். இந்தப் பாடலைப் பார்த்துவிட்டு கல்வித்துறை அதிகாரிகள் சிலர் பேசினார்கள்.
அதில் நல்ல ஆரோக்கியமான உணவு குறித்து செய்திருந்த வீடியோவை மூன்றாம் வகுப்பு அறிவியல் பாடத்தை விளக்கப் பயன்படுத்த இருப்பதாகவும், பாடத்திட்டத்தை விளக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் எனவும் தெரிவித்திருக்கிறார்கள். அந்த நாளுக்காகக் குடும்பத்தோடு காத்திருக்கிறோம்'' என்கிறார் கஸ்தூரி வெங்கட்ராமன்.
கற்பனைப் பாத்திரங்களுக்கு மத்தியில் தங்கள் மகனையே நாயகனாக்கி சித்திரப்படம் செய்த இந்தத் தம்பதியின் புதுமுயற்சிக்கு வாழ்த்துகள் குவிகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT