Published : 08 Sep 2020 06:18 PM
Last Updated : 08 Sep 2020 06:18 PM
கச்சேரியில்... மேடையில்... அரை வட்டமாக இருந்துகொண்டு ஒவ்வொரு வாத்தியக்காரர்களும் வாத்தியங்களை இசைப்பார்கள். நடுவே பாடகர் அமர்ந்திருப்பார். அவரின் ஆலாபனைகளுக்குத் தக்கப்படி, ஸ்வர சஞ்சாரத்துக்கு ஏற்றபடி, வாத்தியங்கள் சேர்ந்து இனிதான இசையை, நமக்குள் சங்கமிக்கவைக்கும். ஆனால், அவரின் கச்சேரியில் நடுவே அமர்ந்துகொண்டு, வயலின் பாடும். அழும். ஆறுதல் சொல்லும். சிரிக்கும். கேலிபண்ணும். ‘இதென்ன வயலின் சத்தமா? இல்ல... வயலினுக்கு வாய் வந்து பேசுதா? பாடுதா?’ என்றெல்லாம் வியந்து, மேடையில் வயலினையே, அந்தக் கம்பியின் கபடியாட்டத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பார்கள். அப்படி வயலினை பாடவும் ஆடவும் பேசவும் சிரிக்கவும் வைத்த மாயவித்தைக்காரர்... குன்னக்குடி வைத்தியநாதன்.
காரைக்குடிக்கு அருகில் உள்ள குன்றக்குடிதான் பூர்வீகம். இசைக்கலைஞர்களிடம் உள்ள பழக்கங்களில் ஊர்ப்பெயரை தன் பெயருக்கு முன்னதாக இணைத்து, ஊருக்கும் உலகுக்கும் பெருமை சேர்த்துக்கொள்வதும் ஒன்று. அப்படித்தான் வைத்தியநாதன், குன்றக்குடி வைத்தியநாதன் என்று பேரெடுத்தார்.
குடும்பமே சங்கீதக் குடும்பம். அப்பா ராமசாமி சாஸ்திரிகள், மிகச்சிறந்த கர்நாடக இசைக்கலைஞர். புல்லாங்குழல் வாசிப்பார். மிருதங்கம் இசைப்பார். வயலின் வாசிப்பார். கிதார் இசையிலும் விற்பன்னர். அப்பாவிடம் முதலில் பாட்டுதான் கற்றுக்கொண்டார் வைத்தியநாதன்.
ஒருபக்கம் சம்ஸ்கிருதம்... இன்னொரு பக்கம்... பாட்டு. சகோதரிகளும் பாடுவார்கள். அண்ணா மிருதங்கம் இசைப்பார். வீடு முழுக்க இசை நிரவியிருக்க, வாத்தியக்கருவிகள் நிரம்பி வழிய... குன்னக்குடி வைத்தியநாதன் வயலினை எடுத்துக்கொண்டதற்கு காரணம் இருந்தது.
அப்பாவின் கச்சேரி ஒன்று. வழக்கமாக வயலின் வாசிப்பவருக்கு ஏனோ கோபம். வரவில்லை. அதுகுறித்த பேச்சுவார்த்தை வாக்குவாதமானது. ‘ஏன் உம்மை கடேசிப்புள்ளையை வயலின் வித்வான் ஆக்கிடுங்கோளேன். என் தயவு தேவைப்படாமலே போயிருமே!’ என்று கேலியும் கிண்டலுமாகச் சொன்னார். இவரின் அப்பாவுக்கு ஆத்திரமான ஆத்திரம். அன்றைக்கு சாயந்திரமே, சிறுவன் வைத்தியநாதன் கையில் வயலினைக் கொடுத்தார் அப்பா. அப்போது அவருக்கு வயது எட்டு. விளையாடுகிற வயதில் வயலினை ஏந்திய குன்னக்குடி வைத்தியநாதன், பிறகு வயலினில் விளையாடினார். அந்த எட்டு வயதில் வயலினைப் பிடித்தவர், மரணிக்கும் வரை வயலினை இறக்கிவைக்கவே இல்லை. ஆறாவது விரலாக வயலினும் ஏழாவது விரலாக வயலின் கம்பியுமாகவே வாழ்ந்தார் குன்னக்குடி வைத்தியநாதன்.
எட்டு வயதில் வயலின் கற்றுக்கொண்டவர், 12வது வயதில் அரங்கேற்றம் செய்தார். இசையுலக ஜாம்பவான்கள் என்று புகழப்படுகிற, போற்றப்படுகிற செம்மங்குடி சீனிவாச ஐயர், சூலமங்கலம் சகோதரிகள், மகாராஜபுரம் சந்தானம், சீர்காழி கோவிந்தராஜன் உள்ளிட்ட மிகப்பெரிய கலைஞர்களுடன் இணைந்து கச்சேரிகளில் அசத்திய குன்னக்குடி வைத்தியநாதன், 76ம் ஆண்டில் இருந்து தனியே இசைக்கத் தொடங்கினார். அதாவது, கச்சேரிகளில் வயலினை பிரதானமாகக் கொண்டு, இவர் நிகழ்த்தியதெல்லாம் ஆகப்பெருஞ்சாதனை.
குன்னக்குடி வைத்தியநாதன் கச்சேரி பண்ணுவதற்கு மேடையில் வந்துவிட்டால்... மூன்று விஷயங்களை ரசிகர்கள் கவனித்து சிலாகிப்பார்கள். முதலாவது... அவர் நெற்றியில் இட்டுக்கொண்டிருக்கும் பெரிய வட்டவடிவிலான குங்குமம். இரண்டாவது குன்னக்குடியாரின் கையில் இருக்கும் கம்பியானது வயலினை எப்படியெல்லாம் முத்தமிடுகிறது என்று வியப்பும் மலைப்புமாகப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். மூன்றாவது... வயலினை இசைக்கும் போது, குன்னக்குடியாரின் முகத்தைப் பார்ப்பதற்கென்றே, அவரின் பாவனைகளையும் சிரிப்பையும் ரசிப்பதற்கென்றே மிகப்பெரிய கூட்டம் வரும். அதாவது, குன்னக்குடியாரின் முகம் ரியாக்ஷன் பண்ணும். அதற்குத் தக்கபடி வயலின் பேசும். பாடும். கோபப்படும். அழும். ஆனந்தப்படும். இதனாலேயே, குன்னக்குடி வைத்தியநாதன் கச்சேரி என்றாலே, ஊரே திரண்டிருக்கும். பக்கத்து ஊர்களும் படையெடுத்தது போல் வந்து நிற்கும்.
திருவையாறு தியாக பிரம்மத்தின் திருச்சமாதியில், ஆண்டாண்டு காலமாக திருவையாறு ஆராதனை விழா மிகப்பிரமாண்டமாக நடைபெறும். இந்த விழாச் சபையின் செயலாளராக 28 வருடங்களாக செயலாற்றினார் குன்னக்குடி வைத்தியநாதன்.
கர்நாடக சங்கீதத்தையும் திரை இசைப் பாடல்களையும் கலந்துகட்டிக் கொடுத்ததுதான் குன்னக்குடி வைத்தியநாதனின் முக்கியமான ஸ்பெஷல். இதனால் எல்லா தரப்பில் இருந்தும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கூட்டம் இருந்தது.
தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றத் தலைவராகப் பணியாற்றினார். ராகா ஆராய்ச்சி மையம் என்றொரு அமைப்பை நிறுவி ராக ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இசையின் நுட்பங்களையும் மகோன்னதங்களையும் இசையால் நோயை குணப்படுத்துவது குறித்தும் மிகப்பெரிய ஆய்வை மேற்கொண்டார்.
’வா ராஜா வா’, ‘தேவரின் தெய்வம்’, ‘அகத்தியர்’, ‘தேவரின் திருவருள்’ முதலான 20 படங்களுக்கு இசையமைத்தார். ‘திருமலை தென்குமரி’க்காக இசையமைத்ததற்காக தமிழக அரசின் விருதைப் பெற்றார். இவருக்குக் கொடுக்காத பட்டங்களில்லை. புகழாத வார்த்தைகளில்லை.
‘கொட்டாம்பட்டி ரோட்டிலே குட்டி போற ஷோக்கிலே’ என்ற மிகப்பெரிய ஹிட் பாடலான ‘தோடி ராகம்’ படத்துக்கும் இவர்தான் இசையமைத்தார். இதில் ஹீரோவாக நடித்தவர்... இசைக்கலைனர் டி.என்.சேஷகோபாலன். உலகமே போற்றிவியக்கும் ராஜராஜ சோழனையும் பெரியகோயிலையும் சிவாஜி நடித்த ‘ராஜராஜ சோழன்’ படத்தையும் எவராலும் மறக்கமுடியாது. அதில், ‘ஏடு தந்தானடி தில்லையிலே’, ‘தஞ்சை பெரியகோயில் பல்லாண்டு வாழ்கவே’ என்ற பாடல்கள், காலம் கடந்தும் போற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
1935ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி பிறந்து, 8வது வயதில் வயலினை ஏந்தியவர்... வயலினுடன் உறவாடியவர்... வயலினே வாழ்க்கை என இரண்டறக் கலந்தவர்... 2008ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி காலமானார்.
அன்றைக்கும் சரி... ஒவ்வொரு செப்டம்பர் 8ம் தேதியும் சரி... குன்னக்குடி வைத்தியநாதனின் கைகளிலும் விரல்களிலும் தோள்களிலும் ஒட்டி உறவாடிய வயலின்... அவரின் ஸ்பரிசத்துக்காக, அவருடன் விளையாடலுக்காக ஏங்கிக்கொண்டே இருக்கும்.
இன்று செப்டம்பர் 8ம் தேதி குன்னக்குடி வைத்தியநாதன் நினைவுநாள்.
வயலின் ராஜா... குன்னக்குடி வைத்தியநாதனைப் போற்றுவோம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT