Published : 21 Sep 2015 10:24 AM
Last Updated : 21 Sep 2015 10:24 AM

ஹெச்.ஜி.வெல்ஸ் 10

வரலாறு, அரசியல், சமூகம் ஆகிய அனைத்து களங்களிலும் தனது படைப்புகளால் தனிமுத்திரை பதித்த ஹெச்.ஜி.வெல்ஸ் (H.G.Wells) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 21). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே உள்ள ப்ரூம்ளி நகரில் (1866) பிறந்தார். முழு பெயர் ஹெர்பர்ட் ஜார்ஜ் வெல்ஸ். கிரிக்கெட் வீரரான தந்தை ஹார்ட்வேர் கடையும் நடத்தி வந்தார்.

l ஏழு வயதில் விபத்தில் சிக்கிய வெல்ஸ் பல மாதம் படுக்கையில் இருக்க நேர்ந்தது. அப்போது தந்தை வாங்கித் தந்த பிரபலமானவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்தார். அம்மாவின் முதலாளி நடத்திய நூலகத்தில் இருந்தும் பல புத்தகங்களைப் படித்தார்.

l அப்பாவின் தொழில் நஷ்டம் அடைந்ததால், படிப்பை நிறுத்திவிட்டு ஜவுளிக் கடை வேலைக்கு சென்றார். வேலை பிடிக்காததால் வெளியேறினார். பிறகு, ஆசிரியர் வேலை கிடைத்தது.

l மேற்கொண்டு படிக்க தீவிர முயற்சி எடுத்தார். நார்மல் ஸ்கூல் ஆஃப் சயின்ஸ் கல்வி நிறுவனத்தில் உதவித் தொகை பெற்று இயற்பியல், வேதியியல், வானியல், உயிரியல் கற்றார்.

l கல்லூரி நாட்களில் ‘தி க்ரோனிக் ஆர்கோநாட்ஸ்’ என்ற காலப்பயணம் குறித்த சிறுகதை எழுதினார். இவரது முதல் நாவலான ‘தி டைம் மெஷின்’ 1895-ல் வெளிவந்து, மகத்தான வெற்றி பெற்று, இலக்கிய உலகில் பரபரப்பாக பேசப்படும் எழுத்தாளர் ஆனார்.

l தொடர்ந்து அறிவியல் புனைகதைகள் எழுதி வந்தார். 1920-ல் வெளிவந்த ‘அவுட்லைன் ஆஃப் தி வேர்ல்டு’ புத்தகம் விற்பனையில் சாதனை படைத்தது. ‘தி ஐலண்ட் ஆஃப் டாக்டர் மாரோ’, ‘தி இன்விசிபிள் மேன்’, ‘தி வார் ஆஃப் தி வேர்ல்ட்ஸ்’, ‘தி ஷேப் ஆஃப் திங்ஸ் டு கம்’ ஆகிய நூல்கள் இவருக்கு பெயரையும் புகழையும் ஈட்டித் தந்தன.

l ஏராளமான கட்டுரைகள், விமர்சனங்களும் எழுதினார். ‘சாட்டர்டே ரெவ்யூ’ என்ற இதழில் புத்தக விமர்சகராக பல ஆண்டுகள் பணியாற்றினார். சமூக விமர்சனங்கள், அரசியல் கருத்துகள், நடுத்தர வர்க்கம், பெண்ணுரிமைப் போராளிகள் குறித்த கருத்துக்கள் இவரது பிற்கால நூல்களில் அதிகம் இடம்பெற்றன.

l காலப்பயணம், வேற்றுகிரகவாசிகள் பூமியைத் தாக்குவது, அணு ஆயுதப் போர் ஆகியவற்றின் அடிப்படையில் இவர் எழுதிய அறிபுனை நாவல்கள் இந்த பாணியை இலக்கிய உலகத்துக்கு அறிமுகப்படுத்தின. திரைப்படங்கள், வானொலி நிகழ்ச்சிகளாக இவரது பல படைப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஓவியம் வரைவதிலும் மிகுந்த நாட்டம் கொண்டவர்.

l ‘அவுட்லைன் ஆஃப் ஹிஸ்டரி’ என்ற நூலில் மனித வரலாறு குறித்த தனது சோஷலிச கண்ணோட்டங்களை வெளிப்படுத்தினார். கடவுள் பற்றிய தனது கண்ணோட்டத்தை வெளிப்படுத்திய இவரது ‘காட் தி இன்விசிபிள் கிங்’ என்ற நூல் மிகவும் பிரசித்தம்.

l வாழ்நாளில் சுமார் 50 ஆண்டு காலம் எழுத்துக்கே அர்ப்பணித்தவர். தொலைநோக்கு எழுத்தாளர் எனப் போற்றப்பட்ட ஹெச்.ஜி.வெல்ஸ் 80-வது வயதில் (1946) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x