Published : 04 Sep 2020 03:38 PM
Last Updated : 04 Sep 2020 03:38 PM

பெண்களுக்கு பாலியல் சுகாதாரம் குறித்த புரிதல் இல்லை! - சொல்கிறார் க்ளோரி டெபோரா

க்ளோரி டெபோரா

பால்வினை தொற்று நோய்கள் உலக அளவில் பொது சுகாதாரத்துக்குச் சவாலாக நிற்கின்றன. இது ஒரு தனி மனிதனின் உடல், மனம், மற்றும் சமூக நிலையைப் பொறுத்தது என்கிறது உலக சுகாதார நிறுவனம். பாலியல் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் பால்வினை நோய்ப் பரவல் உள்ளிட்டவற்றைத் தடுக்கும் நோக்கிலும் செப்டம்பர் 4-ம் தேதி சர்வதேச பாலியல் சுகாதார தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

பெரும்பாலும் ஆண்களை விட பெண்களே பாலியல் நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதற்குக் காரணம், பெண்களுக்குப் பாலியல் குறித்த சரியான புரிதலும் விழிப்புணர்வும் இல்லாததே. என்னதான் ஆண்களுக்குச் சமமாக பெண்களும் அனைத்துத் துறைகளிலும் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறினாலும் பாலியல் கல்வி என்று வரும்போது இந்தியப் பெண்கள் பல மைல் தூரம் பின்தங்கியே நிற்கிறார்கள். இதற்குக் காரணம், அவர்களது வாழ்வியல் சூழல்.

சராசரி பெண்கள் மத்தியில் பாலியல் சுகாதாரம் குறித்து உரிய விழிப்புணர்வை தருவதற்கு தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதேநேரம், பாலியலைத் தொழிலாகக் கொண்டிருக்கும் பெண்கள் மத்தியில் பாலியல் சுகாதாரம் குறித்தும் பாலியல் நோய்களில் இருந்து அவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும் தொடர்ந்து சேவையாற்றி வருகிறது 'தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம்'. இருப்பினும் இன்னும்கூட பெண்களுக்குப் பாலியல் சுகாதாரம் குறித்த சரியான புரிதல் இல்லை என்கிறார் க்ளோரி டெபோரா.

மதுரையில் 'நியூ கிரியேஷன்ஸ் டிரஸ்ட்' என்ற தன்னார்வ அமைப்பை நடத்தி வரும் சி.க்ளோரி டெபோரா மதுரை மாவட்டத்தில் பாலியல் தொழிலில் இருக்கும் பெண்களுக்குப் பாலியல் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வூட்டி வருகிறார். பாலியல் தொழிலில் இருக்கும் பெண்களை அதிலிருந்து மீட்டு அவர்களுக்கு புது வாழ்க்கை அமைத்துக் கொடுப்பது, ஹெச்ஐவி உள்ளிட்ட பாலியல் நோய்க்கு ஆளாகும் பெண்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார் க்ளோரி.

காப்பகத்தில் உள்ள பெண்ணுக்கு முடி திருத்தம் செய்யும் க்ளோரி டெபோரா

பெண்கள் மத்தியில் உள்ள பாலியல் சுகாதார விழிப்புணர்வு குறித்து நம்மிடம் பேசினார் க்ளோரி.

"மதுரை மாவட்டத்தில் மட்டும் 6,000 பெண்கள் பாலியல் தொழிலில் இருப்பதாக தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தில் பதிவு இருக்கிறது. பொதுவாக, ஹெச்ஐவி பாசிட்டிவ் ஆனவர்களுக்காக எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் பணி செய்கிறது. பாலியல் தொழிலில் ஈடுபட்டு அதனால் ஹெச்ஐவி நோய்க்கு ஆளாகி அதனால் மனநலம் பாதிக்கப்பட்ட, கைவிடப்பட்ட பெண்களுக்காக நாங்கள் பணி செய்கிறோம்.

இந்தக் கரோனா காலத்தில், பிழைப்புக்கு வேறு எந்த வழியும் இல்லாமல் பாலியல் தொழிலை மட்டுமே நம்பி இருந்த பலரும் தெருவுக்கு வந்துவிட்டார்கள். பொதுவாக, ஹெச்ஐவி பாதித்தவர்கள் பாலியல் தொழில் செய்யக்கூடாது என அரசும் எங்களைப் போன்ற தன்னார்வ அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதற்காக அவர்களது குடும்பத்துக்குத் தேவையான உதவிகள், ஊட்டச்சத்து உணவுகள், அவர்களது குழந்தைகளின் கல்விக்கான உதவி உள்ளிட்டவற்றைச் செய்கிறோம்.

இதுதான் நம்மால் அவர்களுக்குச் செய்ய முடியும். மற்றபடி கையில் காசைக் கொடுத்து அவர்களைக் கைதூக்கிவிட முடியாது. ஆனால், இந்தத் தொழிலில் இருக்கும் பெண்கள் தங்களது பாதையை மாற்றிக்கொள்ள நினைத்தாலும் அவர்களது வாடிக்கையாளர்கள் விடுவதில்லை. 'நீ என்ன பெரிய யோக்கியமா... இத்தனை வருசம் இப்படி இருந்துட்டு இப்ப மட்டும் என்ன வந்தது உனக்கு?' என்று நெருக்கடி கொடுக்கிறார்கள்.

பாலியல் தொழிலில் இருக்கும் பெண்களுக்கு ரெகுலர் பார்ட்னர் இருப்பார்கள், சிலருக்கு லிவிங் பார்ட்னர்கள் இருப்பார்கள். தனக்கு ஹெச்ஐவி இருக்கும் விஷயத்தைத் தங்களது பார்ட்னர்களுக்கோ வாடிக்கையாளர்களுக்கோ அநேகம் பெண்கள் சொல்வதில்லை. தனக்குள்ளே நோயை வைத்துக் கொண்டு மேலும் மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதால் பெண்கள் மனதாலும் உடலாலும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

அப்படி பாதிக்கப்பட்டு சமூகத்தால் ஒதுக்கப்பட்டு மனநோயாளியாக்கப்பட்ட பெண்கள் இப்போது எங்களது காப்பகத்தில் இருக்கிறார்கள். கரோனா காலத்தில் சொத்துப் பிரச்சினை, மனநலம் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஆண்களும் தெருவுக்குத் துரத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களையும் மீட்டு எங்கள் காப்பகத்தில் வைத்துப் பராமரித்து வருகிறோம். இவர்களில் 23 பேரை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து அவர்களைப் போதையிலிருந்து மீட்டோம். அதில் 7 பேர் எங்களது சமரச முயற்சியால் மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்துவிட்டார்கள். எஞ்சியவர்கள் புதுவாழ்க்கைக்குத் திரும்பி கிடைத்த வேலைக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். இன்னும் 24 ஆண்கள் எங்களது நியூ கிரியேஷன்ஸ் இல்லத்தில் இருக்கிறார்கள்.

உலக பாலியல் சுகாதார தினத்தில் பெண்கள் மத்தியில் உள்ள பாலியல் கல்வி குறித்து நிறையவே பேச வேண்டி இருக்கிறது. இந்தக் காலத்திலும் பல பெண்கள் இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்து குழந்தைகளைப் பெற்றுக் கொண்டே இருக்கிறார்கள். குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்வதற்குப் பெண்கள் தயாராக இல்லை. ஆனால், கருக்கலைப்பு பற்றிய புரிதல் இல்லாமலே அவர்களே அடிக்கடி கருக்கலைப்பு செய்து கொள்கிறார்கள். இதனால் பால்வினை நோய் வரவாய்ப்பிருக்கிறது. கர்ப்பப்பை புற்றுநோய் வரலாம். இது குறித்தெல்லாம் எங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து விழிப்புணர்வூட்டி வருகிறோம். ஆனால், இதுகுறித்தெல்லாம் பாலியல் தொழிலில் இருக்கும் பெண்களுக்குத் தெரிந்த அளவுகூட குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்குத் தெரியவில்லை.

பால்வினை நோய் என்பது ஒவ்வொரு பெண்ணும் தெரிந்திருக்க வேண்டிய விஷயம். ஆனால், அது கெட்ட வழியில் போகும் பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்று மற்ற பெண்கள் ஒதுக்கித் தள்ளிவிடுகிறார்கள். இதனால் பிறப்புறுப்பில் எதனால் சீழ் வடிகிறது என்ற புரிதல்கூட அவர்களுக்கு இருப்பதில்லை. அடிக்கடி கருக்கலைப்பு செய்தால் கர்ப்பப்பை புற்றுநோய் வரலாம். அதனால் பிறப்புறுப்பில் சீழ் வடிய வாய்பிருக்கிறது. பால்வினை நோய்கள் பற்றிய தெளிவு இருந்தால் மட்டுமே இதையெல்லாம் அறிந்து கொள்ள முடியும். ஆனால், மெத்தப் படித்து உத்தியோகத்துக்குப் போகும் பெண்கள்கூட பால்வினை நோய் என்று பேச்செடுத்தால் முகம் சுளிக்கிறார்கள். அந்தப் பேச்சையே அவர்கள் தவிர்க்கிறார்கள்.

இவர்கள் தங்களுக்கு பால்வினை நோய் இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுக மாட்டார்கள். பல பெண்களுக்கு அவர்களது கணவரும் அதற்குத் தடையாக இருப்பார்கள். காரணம், அவர்களுக்கு மனைவியைத் தவிர வேறு சில பார்ட்னர்களும் இருப்பார்கள். இது வெளியில் தெரிந்துவிடும் என நினைத்து, 'இப்படியெல்லாம் சொல்லி உன்னைக் குழப்பிவிடுவது யார்?' என மனைவியை அவர்கள் கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். இதனால் குடும்ப உறவில் விரிசல் ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில், அந்தப் பெண்கள் தங்களுக்கு இருக்கும் பால்வினை நோய் குறித்து வெளியில் பேசாமலும் அதற்கு உரிய சிகிச்சை எடுக்காமலும் விட்டுவிடுகிறார்கள்.

இதுகுறித்து ஓரளவுக்கு மட்டுமே நாம் பேசமுடியும். அதற்கு மேல் பேசினால் தனி மனித உரிமையில் தலையிடுவதாக ஆகிவிடும். அதனால் இந்த விஷயத்தில் எங்களைப் போன்ற ஆற்றுப்படுத்துநர்கள் ஒரு எல்லைக்கு மேல் தாண்ட முடியாது.

இந்தப் பிரச்சினையின் தாக்கத்தை இருபாலரும் உணர வேண்டுமானால் குழந்தைகளுக்கு 'நோ டச், பேட் டச்' என்று சொல்லிக் கொடுப்பதைப் போல் பாலியல் கல்வி குறித்தும் பள்ளி - கல்லூரிகளில் இரு பாலருக்கும் இன்னும் கூடுதலாகப் போதிக்க வேண்டிய அவசியமும் தேவையும் இருக்கிறது.

மதுரையைப் பொறுத்தவரை, பாலியல் தொழிலில் இருக்கும் பெண்களுக்கு மாற்றுத் தொழில்களை ஏற்பாடு செய்து தருகிறோம். அந்தப் பெண்களை சமையல் வேலைக்கு அனுப்புகிறோம். பூக்கட்டி விற்றல், காய்-கனிகள் விற்றல் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபடுத்தி அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதைக் குறைத்து வருகிறோம். இந்த வேலைகளுக்குப் போனாலும் அவ்வப்போது தங்கள் தேவைக்காக அவர்கள் பாலியல் தொழிலுக்கும் போய்க் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், முன்னைப் போல அதிக அளவில் இந்தத் தொழிலில் அவர்கள் ஈடுபடாததால் ஹெச்ஐவி பாதிப்பின் பக்கவிளைவுகளில் இருந்து அவர்களை ஓரளவுக்குக் காக்க முடிகிறது.

நாங்கள் நடத்திய கள ஆய்வின்படி மதுரைக்குள் பல பெண்கள் கந்துவட்டிக்குக் கடன் வாங்கி அதை திருப்பிச் செலுத்த வழி தெரியாமல்தான் பாலியல் தொழிலில் சிக்கி இருக்கிறார்கள். இப்படிச் சிக்கிக்கொண்ட சில பெண்களின் வாழ்க்கை முறையையே நாங்கள் மாற்றி சீர்வரிசையுடன் திருமணம் செய்து கொடுத்திருக்கிறோம்.

ஆனால், இதெல்லாம் ஒன்றிரண்டுதான். இந்தத் தொழிலில் இருக்கும் அனைத்துப் பெண்களின் வாழ்க்கையிலும் யாராலும் ஒட்டுமொத்தமாக மறுமலர்ச்சி ஏற்படுத்திவிட முடியாது. நான் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள 2,000 பெண்களுக்கு கவுன்சலிங் கொடுத்திருக்கிறேன். அதில் 5 பேரை மட்டும்தான் என்னால் மாற்று வழிக்குத் திருப்ப முடிந்தது. இன்னும் ஒரு 20 பேர் மோசமான உடல்நலப் பாதிப்பால் வேறு வழியே இல்லாமல் அந்தத் தொழிலை விட்டு விலகினார்கள்.

இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் ஒருபக்கம், பாலியல் தொழிலில் இருப்பவர்களை நல்வழிப்படுத்த நாம் முயன்று கொண்டிருக்கிறோம். இன்னொரு பக்கம், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இந்தத் தொழிலைத் தேடி கல்லூரி மாணவிகளும் புதிது புதிதாய் வந்துகொண்டே இருக்கிறார்கள்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x