Published : 03 Sep 2020 09:02 PM
Last Updated : 03 Sep 2020 09:02 PM
'மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் நடிகர் லாரன்ஸுடன் இணைந்து நடனம் ஆடியதில் புகழ்பெற்றவர் திருநங்கை வைஷு. சின்னச் சின்ன வேடங்களில் நடிப்பதற்கு வந்த வாய்ப்புகளும் கரோனா ஊரடங்கால் தள்ளிப்போய்க் கொண்டிருக்க, என்ன செய்வது என்ற கேள்விக்கான பதிலைப் புத்திசாலித்தனமாக எதிர்கொண்டிருக்கிறார் வைஷு.
''கரோனா ஊரடங்கால் எல்லோருமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலும், திருநங்கைகள் உள்ளிட்ட மாற்றுப் பாலினத்தவருக்குக் கூடுதல் பிரச்சினைகள் ஏறுபடுகின்றன. இதுவரை நன்றாகப் பேசியவர்கள், உதவியவர்கள்கூட இந்தக் கரோனா காலத்தில் தங்களின் செயல்பாடுகளில் வித்தியாசத்தைக் காட்டத் தொடங்கினர். வாடகைக்கு வீடு கிடைப்பதில் தொடங்கி ஏகப்பட்ட பிரச்சினைகளை அன்றாடம் எங்கள் சமூகத்தினர் எதிர்கொள்கின்றனர்.
நடிப்பதற்கான வாய்ப்புகள் தள்ளிப்போன நிலையில், மாடலிங் செய்து வந்தேன். அந்த மாடலிங் வாய்ப்புகளும் கரோனா காலத்தில் கிடைக்காமல் போகவே ரொம்பவே சிரமப்பட்டேன். எல்லாத் திருநங்கைகளைப் போலவே நானும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருமானத்துக்கு வழியில்லாத நிலையில் இருந்தபோதுதான், மாடலிங்குக்காக என் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் வெளியிட்டிருந்த என் ஒளிப்படங்களைப் பார்த்து, என்னைத் தொடர்புகொண்டார் என் நீண்ட நாள் நண்பரான நாஞ்சில் விஜயன்.
என் நிலைமையை அவரிடம் விளக்கினேன். 'ஒரு வாய்ப்புக் கொடுத்தால் செய்வீர்களா?' என்று கேட்ட அவர், எனக்கு வழங்கியதுதான் அவரின் 'மாடர்ன் மங்கிஸ்' யூடியூப் சேனலில் மக்களின் கருத்துகளைக் கேட்கும் வீடியோ ஜாக்கி பணி. ‘மாடர்ன் மங்கிஸ்’ சார்பாகச் சமூகத்தில் பரவலாகப் பேசப்படும் ஒரு பிரச்சினை அல்லது சர்ச்சையை ஒட்டி பொதுமக்களின் கருத்தைக் கேட்டு அதைச் சரியான முறையில் தொகுத்துத் தரும் பணியைச் செய்யும் முதல் திருநங்கை என்ற பெருமையும் எனக்கு இந்தப் பணியின் மீது ஈடுபாட்டை அதிகரித்தது.
இந்த அடிப்படையில் கரோனா காலத்தில் அரசு நிர்ணயித்த மின்சாரக் கட்டணத்தைக் கட்ட முடியாமல் தவித்த மக்களின் எண்ணங்களைப் பதிவு செய்தோம். பள்ளிகள் இயங்க முடியாத நிலையில் மாணவர்களுக்கு இணையவழிப் படிப்பு கட்டாயமாகியிருக்கிறது. அதுகுறித்த கருத்துகளைப் பொதுமக்களிடமும் மாணவர்களிடமும் கேட்டுப் பதிவு செய்தது புதிய அனுபவமாக இருந்தது.
இதைத் தொடர்ந்து கரோனா காலத்தில் இதுவரை மூடியிருந்த டாஸ்மாக் கடைகளைத் திறந்ததற்கு மக்களின் எதிர்ப்பைப் பதிவுசெய்ததும் மறக்கமுடியாத அனுபவம். தற்போது இந்த வீடியோ ஜாக்கி பணிக்குத் தற்காலிகமாக ஓய்வு கொடுத்துவிட்டு, கரோனா ஊரடங்குக்குப் பின் தொடங்கியிருக்கும் மாடலிங் துறை சார்ந்த பணிகளில் கவனம் செலுத்தி வருகிறேன்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT