Published : 02 Sep 2020 06:57 PM
Last Updated : 02 Sep 2020 06:57 PM
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே விவசாயி ஒருவர் பசுஞ்சாணத்தில் இயற்கை முறையில் விபூதி தயாரித்து வருகிறார்.
கல்லல் அருகே சொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் சம்பத் (66). இவர் நடத்தி வரும் மாட்டுப் பண்ணையில் காங்கேயம், வெச்சூர், மலைநாடு கிடா (கேரளா), நாகூரி (ராஜஸ்தான்), தர்பார்க்கர், சாகிவால் (வட மாநிலம்), காங்கிராஜ், கிர் (குஜராத்) உள்ளிட்ட நாட்டு இன மாடுகளை வளர்த்து வருகிறார். இவரிடம் மொத்தம் பசுக்கள், கன்றுகள் என, 50 மாடுகள் வரை உள்ளன. இப்பண்ணையில் 10 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
தினமும் பசுக்களின் சாணத்தை சேகரித்து உருண்டையாக்கி காய வைக்கின்றனர். காயந்ததும் புற்று மண்ணால் தயாரித்த சூளைக்குள் சாண உருண்டையை வைத்து புகை மூட்டம் போடுகின்றனர். இவை பக்குவமாக எரிந்து விபூதியாகிறது.
மாதம் 400 கிலோ விபூதி தயாரிக்கின்றனர். இங்கு தயாரிக்கப்படும் விபூதி ராமேஸ்வரம், திருச்செந்துார், வடபழனி உள்ளிட்ட முக்கிய கோயில்களுக்கு அனுப்பப்படுகின்றன.
இதுகுறித்து சம்பத் கூறியதாவது: ஒரு மாடு மூலம் 10 கிலோ சாணம் கிடைக்கும். அதை காய வைத்து சூளையில் வைத்தால் விபூதி தயாராகிவிடும். எந்த கலப்படமும் இல்லாமல் முற்றிலும் இயற்கை முறையில் தயாரிக்கிறோம்.
ஆன்மிக நாட்டத்தால் விபூதி தயாரிப்பில் ஈடுபட்டேன். இதில் செலவும், வருவாயும் சமமாக இருந்தாலும், பூஜை பொருளாக பயன்படுவதால், மனதிருப்தி உள்ளது.
தற்போது விபூதி கிலோ ரூ.500, பஞ்சகாவ்யம் லிட்டர் ரூ.150 முதல் ரூ.250 வரை, பசுவின் கோமியம் லிட்டர் ரூ.30 முதல் ரூ.100-க்கு விற்கிறோம். பசுக்களுக்கு தீவனத்திற்காக 4 ஏக்கரில் கோ- 4 ரக பசுந்தீவனம் வளர்க்கிறோம், என்று கூறினார்.
தொடர்புக்கு 73389 39369.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT