Published : 29 Aug 2020 05:30 PM
Last Updated : 29 Aug 2020 05:30 PM
பெருமாள் என்பவரின் வருத்தம் வித்தியாசமாய் இருந்தது. ''6 மணி நேரத்திற்குள் கண்களை எடுக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியாமல் போச்சே! முன்னரே தெரிந்திருந்தால் சரியான நேரத்தில் இறந்துபோன சித்தப்பாவின் கண்களைத் தானமாகக் கொடுத்திருக்கலாமே! பார்வை இல்லாதவர்களுக்குப் பார்வையாவது கிடைத்திருக்குமே. சித்தப்பாவின் கண்கள் யாருக்கும் பயனில்லாமல் இப்படி எரிந்து சாம்பலாகிவிட்டதே!'' கண் தானத்தில் ஆர்வம் இருந்தும் முழுமையான தகவல் தெரியாததால், இறந்துபோன சித்தப்பாவின் கண்களை உரிய நேரத்தில் தானமாக அளிக்க முடியவில்லை என்பதுதான் பெருமாளின் வருத்தம்.
பெருமாளின் வருத்தம் இப்படியென்றால் நெல்லை மாவட்டத்தின் கடைக்கோடியில் இருக்கும் ஒரு கிராம மக்களுக்கு வேறு மாதிரியான பிரச்சினை. அந்த ஊரில் முக்கியமான பெரியவர் ஒருவர் இறந்துபோய்விட்டார். அவருடைய கண்களைத் தானம் செய்ய அவரின் குடும்பத்தார் முன்வந்தார்கள். ஆனால், இறப்பதற்கு முன் அவர் கண் தானம் செய்ய விருப்பம் தெரிவித்து, பெயரினைப் பதிவு செய்து வைக்கவில்லை என்று யாரோ சொன்னதால் குழப்பமாகிவிட்டது. இதனால் கண்களைத் தானமாகக் கொடுக்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் கிராமத்தினருக்கு ஏற்பட்டுவிட்டது.
அந்த ஊரில் இதற்கு முன்னர் யாரும் கண் தானம் செய்ததில்லை. கண் தானம் பற்றி அண்மையில் கேள்விப்பட்டதிலிருந்து, ஊரில் இனிமேல் யார் இறந்தாலும் கண் தானம் செய்துவிட வேண்டும் என்று பேசி முடிவெடுத்து இருந்தார்கள். இதுதான் அவர்களது முதல் கண் தானம். எனவே பெயர் பதிவு செய்வது குறித்து அவர்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. ஊருக்கு அருகில் உள்ள மாவட்டக் கண் வங்கிக்கு போன் செய்ததில், பதிவு செய்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று சொல்லிவிட்டார்கள். ஒருவர் இறந்த பிறகு அவருடைய நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் சம்மதம் தெரிவித்தாலே போதும், கண்களைத் தானமாகக் கொடுக்கலாம் என்று சொன்னது கிராமத்தினருக்குச் சற்று ஆறுதலாக இருந்தது.
மருத்துவக் குழுவினர் வரும் வரையிலும் இறந்தவரின் உடல் வைக்கப்பட்டுள்ள அறையின் மின்விசிறியை நிறுத்தச் சொல்லிவிட்டார்கள். அறையில் குளிர்சாதன வசதி இருந்தால் போட்டுவிடச் சொன்னார்கள். அவர்கள் சொல்லியபடி இறந்தவரின் கண்களை மூடி, மூடிய இமையின் மேல் ஈரப் பஞ்சினையும் வைத்தார்கள்.
வீட்டு முகவரியினை முக்கிய அடையாளங்களுடன் ( land mark) சொல்லி இருந்ததால் மருத்துவக் குழுவினர் தாமதியாது விரைந்து வந்து கண்களை எடுத்துச் சென்றார்கள். கண்களை எடுத்த பிறகு முகத்தில் எந்தவித மாறுபாடும் தெரியவில்லை. சொல்லப் போனால் கண்களை எடுத்ததற்கான அடையாளமே தெரியவில்லை. கண்களை எடுத்த பிறகு ஊர் மக்களுக்கு ஒரே மகிழ்ச்சி. நினைத்தபடி தானம் முழுமை அடைந்துவிட்டதல்லவா!
நானும் கண்தானம் செய்திருக்கிறேன்!
ரத்த தானத்தைப் போன்றது கிடையாது கண் தானம். கண் தானத்தில் ஒருவர் இறந்தபிறகே கண்கள் அகற்றப்படும். உயிருடன் இருப்பவர்களிடமிருந்து கண்கள் தானமாகப் பெறப்படுவதில்லை. எனவே, உயிருடன் இருப்பவர் ‘நானும் கண் தானம் செஞ்சிருக்கேன்’ என்று சொல்லிக் கொள்வதில் பயனில்லை.
உண்மையிலேயே கண் தானத்தில் ஆர்வம் இருந்தால், நமது உறவினர்கள் வீட்டிலோ அல்லது நண்பர்கள் வட்டாரத்திலோ, நாம் வசிக்கும் வீட்டுக்கு அருகிலோ யாராவது இறந்துபோனால் தொடர்புடைய வீட்டாரினை அணுகிக் கண் தானத்தின் அவசியத்தை எடுத்துச் சொல்லி, தானம் செய்யச் சம்மதிக்க வைக்கலாம். இதுதான் நேரடி, உடனடிப் பலன்.
ஆர்வம் உள்ளவர்கள் வீட்டின் வரவேற்பறையில் ‘கண் தானம் செய்ய விருப்பம் உள்ள குடும்பம்’ என்று எழுதி வைக்கலாம். இப்படிச் செய்வதன் மூலம், ஒரு வேளை அந்த வீட்டில் யாரேனும் இறந்து போனால் அப்போது உறவினர்களாலோ அல்லது நண்பர்களாலோ நினைவு கூரப்பட்டு இறந்தவுடன் கண் வங்கிக்குத் தகவல் தந்து, கண்களை உரிய நேரத்தில் எடுக்க உதவியாக இருக்கும். மேலும் அதனைப் பார்க்கும் பிறரையும் கண் தானம் செய்ய ஊக்குவிக்கும்.
கண் தானம் குறித்த தவறான நினைப்புகள்
கண் தானம் மூலம் பார்வை இல்லாதவர்கள் எல்லோருக்குமே பார்வை கொடுக்க முடியாது. கருவிழியில் ( Cornea) ஏற்படும் காயங்களினாலோ அல்லது வேறு சில நோய்களினாலோ ஏற்படும் கருவிழி பார்வையிழப்புக்கு மட்டுமே கண் தானம் மூலம் பார்வை கொடுக்க முடியும்.
பலரும் நினைத்துக் கொண்டிருப்பதுபோல முழுக்கண்ணையும் அப்படியே மாற்றுவது கிடையாது. பாதிக்கப்பட்ட- ஒளி ஊடுருவும் தன்மையினை இழந்த கருவிழி மட்டுமே மாற்றப்படுகிறது. அதாவது பாதிப்புக்குள்ளான கெட்டுப்போன கருவிழியினை அகற்றிவிட்டு இறந்தவரிடமிருந்து தானமாகப் பெற்ற கண்ணின் கருவிழி, அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படுகிறது. (கருவிழி மாற்று அறுவை சிகிச்சை- Corneal Transplantation)
கண் தான இயக்கம்
இயற்கையான மரணத்தாலும், விபத்துகளினாலும் நாள்தோறும் மரணங்கள் நிகழ்ந்த விதமாக இருக்கின்றன. இறந்தவர்களின் கண்கள் அனைத்தும் மண்ணோடு மண்ணாக யாருக்கும் பயனில்லாமல்தான் போய்க்கொண்டு இருக்கின்றன. இப்போதைக்குக் கண்களைத் தானமாக, நாமாகத் தந்தால்தான் உண்டு. கண் தானத்தை ஊக்குவிக்க தானம் தருபவர்களின் குடும்பத்துக்கு அரசின் அனைத்துத் திட்டங்களிலும் சிறப்புச் சலுகைகள் கிடைக்க வழிவகை செய்யலாம். இதன் மூலம் உடல் உறுப்பு தானத்தில் முன்னோடியாக உள்ள தமிழகம் கண் தானத்திலும் முன்னோடியாகத் திகழ முடியும்.
- மு.வீராசாமி, கட்டுரையாளர், மதுரை அரசு கண் மருத்துவ உதவியாளர்
தொடர்புக்கு: veera.opt@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT