Published : 23 Sep 2015 11:01 AM
Last Updated : 23 Sep 2015 11:01 AM
டம்மீஸ் நாடகக் குழுவின் வி.வஸ்தன் எழுதியிருக்கும் 25-வது நாடகம் ‘பிரதிபிம்பம்’. இந்த நாடகம் மேடையிலும் சில்வர் ஜூப்ளி தாண்டி, பொன்விழா கடந்து, 100 தடவை நடிக்கப்படும் என்கிற நம்பிக்கை தருகிறது. அந்த அளவு கதையும், காட்சி அமைப்பும், பாத்திரம் ஏற்பவர்களின் நடிப்பும் ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கிறது!
இது ஓர் அரசியல் த்ரில்லர். ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா மாதிரியானவர்களின் அந்த நாள் பாக்கெட் நாவல்களில் காணக் கிடைத்த பரபரப்பும், விறுவிறுப்பும் இந்த மேடை நாடகத்திலும் உண்டு!
சீன பயணத்துக்குத் தயாராகிறார் பிரதமர் ரவீந்திரா. ஏற்பாடுகள் குறித்து பி.எம்.ஓ. அலுவலகத்தில் தனது நம்பிக் கைக்கு உரிய நிவேதிதா மற்றும் ஹரீஷ் பாரிவேந்தருடன் ஆலோசிக்கிறார். சீனாவில் இந்தியத் தூதரான பிரேமா சதாசிவமும் கலந்துகொண்டு ‘இன்புட்’ கொடுக்கிறார். முன்பு சீனாவை எதிர்த்துப் போரிட்டு வெல்லக் காரணமான மேஜர் ராம், இந்தப் பயணத்தில் ஸ்பெஷலாக சேர்த்துக் கொள்ளப்படுகிறார்.
அங்கே சீனாவில்…
அச்சு அசலாக ரவீந்திரா தோற்றம் கொண்ட ஒருவரைக் கண்டுபிடித்து, 8 மாதங்கள் அவருக்குத் தீவிரப் பயிற்சிக் கொடுத்து, டூப்ளிகேட் பிரதமராகவே தயார் செய்துவிடுகிறது சீன ராணுவம். அதே உடல்மொழி, அதே பேசும்மொழி என்று அனைத்தும். பிரதமர் விஜயத்தின் இரண்டாவது நாள் ஒரு சதித் திட்டம் நிகழ்த்தி, டூப்ளிகேட்டை பிரதமராக ‘சம்மிட்’ கூட்டத்தில் உட்கார வைக்கவும், இடைப்பட்ட காலத்தில் ஒரிஜினலை சிறைப்படுத்தி வைத்து, இந்தியா திரும்ப விமானம் ஏறும் சமயம் நிஜத்தை அனுப்பி வைக்கவும் திட்டம் தயாராகிறது.
ஆள் மாறாட்டம் திட்டமிட்டபடி வெற்றி கரமாக நடந்ததா? சீன ராணுவம் நினைத்தது நிறைவேறியதா என்பதை ‘பக் பக்’ திருப்பங்களுடன் தெரிவிக்கிறார் நாடகாசிரியர் இயக்குநர் வி.வஸ்தன்.
‘நாடகத்தில் வரும் கதாபாத்திரங்கள் யாரையும் குறிப்பிடுபவை அல்ல’ என்று ஆரம்பத்தில் அறிவிக்கப்படும் ‘டிஸ்க்ளைமர்’, சும்மா நாம்கே வாஸ்தே! முழுக்க முழுக்க பிரதமரை மனதில் கொண்டு எழுதப்பட்டதுதான் ரவீந்திராவின் பாத்திரம் என்பதை பிறந்த குழந்தைக்கூட சொல்லிவிடும்!
முதல் காட்சியில் சீனாவில் பயிற்சி பெறும் பிரதிபிம்பம், மோடியின் சுதந்திர தின காஸ்ட்யூமில் (தலைப் பாகை உண்டு) உரை நிகழ்த்தும்போதும், இடது கையை மேலே தூக்கி சிரித்துக்கொண்டே அசைக்கும்போதும், பையில் இருந்து பூனை வெளியே வந்துவிடுகிறது!
தொடரும் ஒவ்வொரு காட்சியிலும் ரவீந்திராவின் ஒவ்வோர் அசைவுகளிலும் ‘உள்ளேன் ஐயா’ என்கிறார் மோடி! (பக்கத்தில் மொழிபெயர்ப்பாளர் ஒரு வரை உட்கார வைத்துக் கொண்டு இந்த நாடகத்தை மோடி பார்க்க நேரிட்டால் நிச்சயம் ரசிக்கவே செய்வார்!)
ட்ரிம் செய்யப்பட்ட அதே வெண்தாடி, அதே நடை, உடை, பாவனை, பேச்சு என்று ஒவ்வோர் அசைவிலும் நரேந்திராவை நினைவூட்டுகிறார் ரவீந் திராவாக வரும் ‘டம்மீஸ்’ தர்!
இவரை தலைநகரில் உட்கார வைத்துவிட்டு பிரதமர் பத்து, பதினைந்து நாட்களுக்கு ஃபாரின் டூர் போய்விட்டு வரலாம் போலிருக்கிறது.
நித்யா கெளசிக் (நிவேதிதா), மணி கிருஷ்ணன் (ஹரீஷ் பாரிவேந்தர்), பிர சன்னா (சீனத்து கர்னல்) பிரேமா சதாசிவம் என்று ஒவ்வொருவரும் ஏற்ற பாத்திரத் துக்கு மெருகேற்றுகிறார்கள். மேஜர் ராம் வேடமேற்கும் வி.வஸ்தன் வழக்கப்படி கம்பீரம். குறிப்பாக, சீனா வில் சம்திங் ராங் என்பதை ஆரம்பத்தில் இருந்து சந்தேகித்து, அந்த டாக்டரை பொறியில் சிக்கவைத்து மிரட்டி உருட்டி ஒரிஜினலை இவர் மீட்பது... அழுத்தம், திருத்தம்!
கவுரவமான காட்சி அமைப்புகள், நாடகத்துக்கு இன்னொரு பிளஸ். இதுவும் சீனாவில் இருதரப்பு பேச்சு வார்த்தைக்கு இந்த கோடிக்கு அந்தக் கோடி நீ...ளமான மேஜையை மேடையில் போட்டு அத்தனை பேரும் துல்லியமாக சூப் குடிப்பது ஜோர் ஜோர்! (கதையில், முக்கியமான பாத்திரத்தில் சூப்! மேடை யில் கண்டு ருசிக்க.) கிளைமாக்ஸ் காட்சி யில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டிய கட்டத்தில், பிரதிபிம்பத்தை கூர்மதியால் ரெஸ்ட் ரூமுக்கு அனுப்பி, ஒரிஜினலை உட்கார வைக்கும் போது அரங்கம் கைதட்டி ஆனந்தப் படுகிறது.
காமெடி வேண்டும் என்பதற்காக ஆரம் பத்தில் டெல்லியில் பிரதமர் ஆலோசனை நடத்துவதை கொச்சைப்படுத்திவிட்டார் கள். ஏதோ அரசு அலுவலகத்தில் மேனேஜர் தனது இரண்டு சகாக்களுடன் அரட்டை அடிப்பது மாதிரி இந்தக் காட்சியை அமைத்திருக்க வேண்டுமா?
சீனாவில் அந்த இரண்டு ராணுவ அதி காரிகளும் சுமார் 20 நிமிடங்களுக்கு சதித் திட்டத்தைப் பற்றி விவாதித்துக்கொண்டே இருப்பது அலுப்பு. அருணாசலப் பிர தேசம், எக்ஸைஸ் டியூட்டி என்று என்னவோ சொல்கிறார்கள். உண்மையில் எதற்காக இந்த ஆள் மாறாட்டம் என்பது யாருக்கும் புரியவே இல்லை. சுருங்கச் சொல்லி விளங்க வைத்திருக்கலாம்.
நல்லவேளையாக தொடரும் காட்சி களில் டிராமா வேகமெடுத்து, குதிரைப் பாய்ச்சலில் சென்று, ஆரம்ப மெத்தனத்தை மறக்கடிக்க செய்து விடுகிறது.
தமிழ் நாடக மேடையை இன்னொரு தளத்துக்கு எடுத்து செல்ல இப்போது நிறையப் பேர் முண்டியடித்து முயற்சித்து வருகிறார்கள். இந்த வரிசையில் பிரதிபிம்பத்துக்கு முதலிடம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT