Last Updated : 24 Aug, 2020 11:11 AM

 

Published : 24 Aug 2020 11:11 AM
Last Updated : 24 Aug 2020 11:11 AM

நாதமும் தாளமும்!

'தபேலா' வெங்கட், ஷியாம் பெஞ்சமின்.

பாடல் எனும் நாணயத்தின் இரு பக்கங்கள் நாதமும் தாளமும். தொலைக்காட்சிகளில் நடக்கும் இசைப் போட்டிகள் தொடங்கி திரை இசை வரையிலும் தங்களின் பங்களிப்பைச் செலுத்திக் கொண்டிருக்கும் கலைஞர்கள் ஷியாம் பெஞ்சமின், வெங்கட். அவர்களின் இசைப் பயணத்திலிருந்து சில நினைவுகளை இங்கே தருகிறோம்.

ஷியாம் பெஞ்சமின்

கீபோர்ட், பியானோ, கீகிடார் போன்ற வாத்தியங்களின் மீது எனக்கு அலாதியான காதல் உண்டு. என் பூர்விகம் திருநெல்வேலியாக இருந்தாலும் நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னைதான். என் குடும்பத்தில் நான்தான் முதல் தலைமுறைக் கலைஞன். இளையராஜா தொடங்கி பலருக்கும் குருவான தன்ராஜ் மாஸ்டரின் சீடரான ஜெகதீசன் என்பவரிடம் இரண்டு ஆண்டுகள் இசை பயின்றேன். அதன்பின் டி.எஸ்.கோவிந்தன் என்பவரிடம் ஹார்மோனியம் கற்றுக்கொண்டேன். இந்த நேரத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையைக் கேட்டதும் எனக்குள் இன்னொரு வாசல் திறந்தது. வீட்டில் அழுது அடம்பிடித்து சின்னதாக ஒரு கீபோர்டை வாங்கினேன். ஹார்மோனியத்திலிருந்து கீபோர்டில் வாசிக்கப் பழகினேன்.

ஒவ்வொரு நாளும் பாடங்கள் முடிந்தவுடன், ஏதாவது ஒரு திரைப்பாடலை கோவிந்தன் சார் வாசிக்கக் கற்றுத்தருவார். அவர் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைச் செய்துகொண்டிருந்தார். அப்போதெல்லாம் தூர்தர்ஷனில் நேரடியாக நாடகங்கள் நடக்கும். அதற்கான இசையையையும் நேரடியாகவே வாசிப்பார்கள். அந்த நேரத்தில் சில ஸ்பெஷல் எஃபெக்ட்களை கீபோர்ட் வழியாக பொருத்தமான இடங்களில் வழங்க ஆரம்பித்தேன்.

அதன்பின் மெதுவாக சில இசைக் குழுக்களிலும் வாசிக்கத் தொடங்கினேன். ஆனால், நான் நிறைய வாசித்தது கல்லூரிகளில் நடக்கும் இசைப் போட்டிகளில்தான். அப்படி வாசித்தபோது கிடைத்த ஒருவரின் அறிமுகத்தால் இசைக் குழு ஒன்றில் கீபோர்ட் வாசித்தேன்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை தொடர்ந்து .என்னை ஈர்த்துவந்தது. ஒருமுறை ஸ்டார் தொலைக்காட்சியில் யானியின் இசை நிகழ்ச்சியைப் பார்த்தேன். அவரின் இசை என்னை என்னவோ செய்தது. தொடர்ந்து பியானோவின் பக்கம் என் கவனம் குவிந்தது. மேற்கத்திய பாப் வகை இசைகளையும் அந்த இசையையும் கவனிக்க ஆரம்பித்தேன். சந்தியா என்பவரிடம் மேற்கத்திய இசையையும் கற்றுக்கொண்டேன். அதன்பின் மேற்கத்திய செவ்வியல் இசையையும் கற்றுக்கொண்டேன். லெஸ்லி என்னும் பியானிஸ்டோடு இணைந்து ஓர் இசை ஆல்பத்தை வெளியிட்டேன். அதைத் தொடர்ந்து காஸ்பல், பாப் என இசையின் பல வடிவங்களிலும் என் பயணம் தொடர்ந்தது.

‘தர்புகா’ சிவாவுடன் இணைந்து ஐஐடியில் நடந்த ஓர் இசைப் போட்டியில் வாசித்து முதல் பரிசை வென்றோம். ‘லீ மெரிடியன்’ போன்ற ஹோட்டல்களில் நான் வாசித்துவந்தேன். அப்படி ஒரு ஹோட்டலில் வாசித்து முடித்தவுடன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் என்னைப் பாராட்டிப் பேசினார். நான் வாசித்திருந்த 'சினி ஜுவலஸ்' ஆல்பத்தின் சிடியை அவரிடம் கொடுத்தேன். அதைக் கேட்டவுடன் அவரது படங்களில் வாசிக்க வாய்ப்புக் கொடுத்தார். ‘வாராயோ வாராயோ..’ பாடலில் வரும் பியானோ இசையை நான் வாசித்தேன். அதன்பின் ‘அயன்’ முதல் ‘மாற்றான்’ வரை ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த பல படங்களில் பின்னணி இசை சேர்ப்பில் வாசித்திருக்கிறேன். ‘தர்புகா’ சிவா, ஜஸ்டின் பிரபாகரன் போன்ற மற்ற இசை அமைப்பாளர்களிடமும் வாசித்துவருகிறேன்.

‘கனவு வாரியம்’, ‘களவு தொழிற்சாலை’ போன்ற திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராகப் பணிபுரிந்திருக்கிறேன். வார்னர் பிரதர்ஸ்தான் ‘கனவு வாரியம்’ படத்தை வெளியிட்டனர். இப்படியாக என் இசைப் பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

‘தபேலா’ வெங்கட்

மதுரை திருமங்கலம் நான் பிறந்த ஊர். என் தாத்தா சங்கரநாராயணன் மிருதங்க வித்வான். தந்தை பெயர் மணி, தாயின் பெயர் பாக்கியலட்சுமி. அப்பா பள்ளி ஆசிரியராக இருந்தார். அப்பாவுக்குக் கேள்வி ஞானத்தில் தபேலா வாசிக்கத் தெரியும். அதனால், எனக்கு முறையாக இசை கற்றுக்கொடுக்க விரும்பினார். சின்னமனூர் தியாகராஜன் என்பவரிடம் முதலில் இசையின் பாலபாடங்களைக் கற்றுக்கொண்டேன். அதன்பின் முழுக்க முழுக்க எனக்கு இசை குறித்த நுட்பங்களைக் கற்றுக்கொடுத்தவர் திருநாவலூர் ஜானகிராம அய்யர்.

சோழவந்தான் பக்கத்திலிருக்கும் திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் படித்தேன். மதுரை மெஜிரா கல்லூரியில் மேற்படிப்பை முடித்தேன். 1995-ல் சென்னைக்கு வந்தேன். இசையமைப்பாளர் மகேஷுக்கு ஒரு ஆல்பம் வாசித்தேன். தொடர்ந்து இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட பலருக்கும் பலவிதமான தாள வாத்தியங்களை வாசித்துவருகிறேன்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியான அபூர்வ ராகங்கள் தொடங்கி ராகமாலிகா இணையவழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வரை சுபஸ்ரீ தணிகாசலத்தின் இசை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்களித்து வருகிறேன். விஜய் தொலைக்காட்சியில் இடம்பெறும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் மணி இசைக் குழுவில் பங்கெடுத்துத் தாள வாத்தியங்களை வாசிக்கிறேன்.

முழுக்க முழுக்க தாள வாத்தியக் கருவிகளை மட்டுமே கொண்ட ஒரு நிகழ்ச்சியை ‘கடம்’ கார்த்திக் நடத்தினார். அதில் தபேலா, மிருதங்கம், பேஸ் டோலக், டோலக், பக்வாஜ், டோல்கீ, தாண்டியா, நாடக டோலக்கு என்று சொல்லப்படும் டோவிலங்கம் (டோலக், தவில், மிருதங்கம்) சேர்ந்த ஓசையை வழங்கக் கூடிய வாத்தியம் போன்றவற்றைக் கொண்டு ஒரு ‘தாளமாலிகா’ நிகழ்ச்சியை வழங்கியிருக்கிறோம். இது அந்நாளில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது.

இசைத் துறையில் தோல் வாத்தியக் கருவிகளின் இடத்தை எலக்ட்ரானிக் கருவிகள் ஆக்கிரமித்துவிட்டதைப் போல் தோன்றினாலும், அவற்றால் தோல் வாத்தியக் கருவிகளுக்கு ஈடுகொடுக்கவே முடியாது. ஒரு சப்போர்ட்டுக்கு வைத்துக்கொள்ளலாமே தவிர, தோல் வாத்தியக் கருவிகளுக்கு ஒருபோதும் எலக்ட்ரானிக் கருவிகள் இணையாக முடியாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x