Published : 26 Sep 2015 09:56 AM
Last Updated : 26 Sep 2015 09:56 AM

பாபநாசம் சிவன் 10

கர்னாடக இசை மேதை, திரைப்படப் பாடல் ஆசிரியர், இசையமைப்பாளர் என்று பன்முகத் திறன் கொண்ட பாபநாசம் சிவன் (Papanasam Sivan) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l அன்றைய தஞ்சை மாவட்டம் போலகம் கிராமத்தில் (1890) பிறந்தார். இயற்பெயர் ராமசர்மா. 7 வயதில் தந்தையை இழந்தார். இதையடுத்து, பிள்ளைகளுடன் திருவனந்தபுரத்தில் குடியேறினார் தாய். மஹாராஜாவின் ஏற்பாட்டால் இலவச உணவுடன், கல்வியும் கிடைத்தது.

l மலையாளம், சமஸ்கிருதமும் பயின்றார். இளம் வயதிலேயே இசையில் ஆர்வமும் திறமையும் கொண்டிருந்தார். மஹாராஜா சமஸ்கிருதக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார்.

l தாய் மறைவுக்குப் பிறகு, அண்ணனுடன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வந்தார். நெற்றி நிறைய திருநீறு பூசியபடி சிவன் கோயில் முன்பு மனமுருகிப் பாடுவார். பரமசிவனே பாடுவதாக கருதிய மக்கள் ‘பாபநாசம் சிவன்’ என்றனர். அதுவே பெயராக நிலைத்தது.

l வித்வான் நூரணி மகாதேவ ஐயர், சாம்ப பாகவதரிடம் முறைப்படி இசை பயின்றார். கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயரிடம் மாணவனாகச் சேர்ந்தார். 7 ஆண்டுகள் அவருடன் தங்கி, பல இசை நிகழ்ச்சிகளுக்குச் சென்றார். திருவையாறு தியாகராஜர் ஆராதனையில் 1918-ல் இவரது முதல் கச்சேரி நடைபெற்றது. தொடர்ந்து பல இடங்களில் கச்சேரிகள் நடத்தினார்.

l கிருதி, வர்ணம், பதம், ஜாவளி என பல இசை வடிவங்களை இயற்றியுள்ளார். ‘என்ன தவம் செய்தனை’, ‘கற்பகமே கண் பாராய்’, ‘நான் ஒரு விளையாட்டு பொம்மையா’ போன்றவை இவரது புகழ்பெற்ற கீர்த்தனைகள். இசைக் கலைஞர்களால் ‘தமிழ் தியாகய்யர்’ என்று போற்றப்பட்டார்.

l வீணை எஸ்.பாலச்சந்தரின் தந்தை சுந்தரம் மூலம், 1934-ல் ‘சீதா கல்யாணம்’ என்ற திரைப்படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பும் கிடைத்தது. தொடர்ந்து அசோக்குமார், சாவித்திரி, நந்தனார், சிவகவி, ஜகதலப்பிரதாபன், அம்பிகாபதி உள்ளிட்ட பல திரைப்படங்களில் பாடல்கள் எழுதினார்.

l காலத்தால் அழியாத பாடல்களான ‘மன்மத லீலையை’, ‘ராதே உனக்கு’, ‘அம்பா மனங்கனிந்து’ ஆகியவை இவர் இயற்றியவை. பாடல் எழுதும்போதே மெட்டும் அமைத்துவிடும் திறன் பெற்றவர்.

l ‘பக்த குசேலா’, ‘அம்பிகாபதி’ உட்பட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். பல படங்களில் பாடி நடித்துள்ளார். 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்காக 800 பாடல்களை எழுதியுள்ளார். 100 கிருதிகளைக் கொண்ட இவரது முதல் நூலான ‘கீர்த்தன மாலை’ 1934-ல் வெளிவந்தது.

l 10 ஆண்டுகள் பாடுபட்டு 1952-ல் ‘சமஸ்கிருத பாஷா ஷப்த சமுத்ரா’ என்ற நூலை எழுதினார். ராமாயணத்தை சுருக்கி, 24 ராகங்களில் 24 பாடல்களாக ‘ராமசரித கீதம்’ என்னும் நூலை படைத்தார். 75 வயதிலும் மார்கழி மாதக் குளிரில் அதிகாலை நேரத்தில் வீதிகளில் பஜனை பாடிச் செல்வார். மிக எளிமையானவர். இவரது சகோதரர் ராஜகோபால் ஐயரின் மகள்தான் எம்ஜிஆரின் மனைவி வி.என்.ஜானகி.

l பத்மபூஷண், சங்கீத கலாநிதி, இசைப் பேரறிஞர், சங்கீத சாகித்ய கலா சிகாமணி, சிவபுண்ய கானமணி, சங்கீத கலாரசிகமணி என பல்வேறு விருதுகளைப் பெற்ற பாபநாசம் சிவன் 83-வது வயதில் (1973) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x