Published : 21 Aug 2020 11:57 AM
Last Updated : 21 Aug 2020 11:57 AM
கடந்த மார்கழி மாதத்தில் ஓர் இசை நிகழ்ச்சி. அதில் பாடப்பட்ட பாடல்கள் அத்தனையும் நம் தேசிய கவியான பாரதியாருடையவை. நிகழ்ச்சியை நடத்தியவர் ஹைதராபாதிலிருந்து வந்திருந்த ரஞ்ஜனி சிவகுமார். நிகழ்ச்சியில் அவர் வெறுமே பாடல்களை மட்டும் பாடிச் செல்லவில்லை. பாரதியாரின் கற்பனையில் அத்தகைய பாடல்கள் உருக்கொண்டதற்குப் புராணங்களும், பாரதிக்கு முன்பிருந்த படைப்பாளிகளின் படைப்புகளும் எத்தகைய செல்வாக்கைச் செலுத்தியிருக்கும் என்பதையும் விவரித்து, ஓர் இசை நிகழ்ச்சியைக் கருத்தரங்கத்தின் அடர்த்தியோடு வழங்கினார்.
தற்போது கரோனா ஊரடங்கால் உலகமே பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், தன் வீட்டு பால்கனியிலேயே தினமும் தம்புராவின் ஸ்ருதியோடும் விதவிதமான சப்தமிடும் பறவைகளின் ஒலிகளோடு இணைந்து பாடி, அதை யூடியூபில் பதிவேற்றிவருகிறார். அத்தனையும் தமிழ்த்தேன் பாயும் பாடல்கள்.
காவடிச் சிந்தும் திருப்புகழும்
பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை, திருத்தணி போன்ற இடங்களில் குடிகொண்டிருக்கும் முருகனுக்குப் பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, மச்சக் காவடி போன்றவற்றை வேண்டுதலாக எடுத்துவருவர். அப்படிக் காவடி எடுத்துவரும் பக்தர்கள் பாடும் பாடல்கள் காவடிச் சிந்து. பலரும் காவடிச் சிந்து பாடல்களை எழுதியிருந்தாலும் சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் அருளிய காவடிச் சிந்து மிகவும் புகழ் பெற்றது. அதில், முருகனின் பெருமையைத் தலைவி, பாங்கியை நோக்கி உரைக்கும் பாடல் இது:
“மஞ்சு நிகர் குந்தள மின்னே
சத தளங்கள் விக சிதம் செய்
வாரிசாதனத்தில் வாழ் பொன்னே! செய்ய
வன்னமே ஒளிர் சொன்னமே! நடை
அன்னமே! இடை பின்னமே பெற
வந்ததன பார வஞ்சியே!
அதி விருப்பத்துட னுரைக்கும்
வார்த்தையைக்கேள் ஆசை மிஞ்சியே..”
காலை நேரத்தில் செஞ்சுருட்டி ராகத்தில் அமைந்த இந்தக் காவடிச் சிந்தை ரஞ்ஜனி பாடுவதைக் கேட்கும்போது, மனக்கவலைகளை எல்லாம் சுருட்டி ஓரமாக வைத்துவிட்டு, ‘அடுத்து என்ன செய்யலாம்?’ என்கிற உற்சாகம் ஏற்படுகிறது.
ஒரு நாளுக்குக் காவடிச் சிந்து என்றால், இன்னொரு நாள், அருணகிரிநாதரின் திருப்புகழிலிருந்து ‘துள்ளு மதவேள்’ பாடி நாளின் புத்துணர்ச்சிக்கு வழி ஏற்படுத்துகிறார். இந்தக் காலை நேர கீதங்களைத் தன்னுடைய குரு சீதா நாராயணன், டாக்டர் பந்துல ரமா, என்.எஸ்.சீனிவாசன், சேடலபட்டி பாலு ஆகியோருக்கு அர்ப்பணிக்கிறேன் என்கிறார் ரஞ்ஜனி நெகிழ்ச்சியோடு.
மஞ்சு நிகர் காவடிச் சிந்து காணொலியைக் காண:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT