Published : 20 Aug 2020 06:39 AM
Last Updated : 20 Aug 2020 06:39 AM
நகரா, உருமி, பம்பை, உடுக்கை என நாற்பதுக்கும் அதிகமான தோல் வாத்தியங்களைச் சேகரித்து வைத்திருப்பதோடு அவற்றை வாசிக்கவும் செய்கிறார் மணிகண்டன். தமிழ்நாடு எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியில் ஒலிப் பொறியாளர் துறையில் படித்துவருகிறார். வாத்தியக் கருவிகளைக் கேள்வி ஞானத்தோடு வாசிக்கும் திறனைப் பெற்றிருக்கிறார் மணிகண்டன்.
கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கு இவர் பறை வாத்தியத்தை சொல்லித்தரும் நேர்த்தியை, அருகிலிருந்த அந்தோணி என்ற இலங்கைத் தமிழர் இவரிடம் ஆர்வத்துடன் பறை வாசிக்கக் கற்றுக்கொண்டதோடு, இவருக்கு பிரான்சில் நடக்கும் விழாவில் பறை வாசிப்பதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்திருக்கிறார். ஒலிப் பொறியாளர் துறையில் படிப்பதாலும் பறை போன்ற வாத்தியங்களை இசைப்பதாலும் நண்பர்கள் இவரை ‘சவுண்டு’ மணி என்று அழைக்கத் தொடங்கினர். அதனால், அதே பெயரிலேயே தனது முகநூல், யூடியூப் கணக்குகளை மணிகண்டன் வைத்திருக்கிறார்.
சாதாரண மணி, ‘சவுண்டு’ மணியான கதையை அவரிடம் கேட்டோம்:
கேள்வி ஞானத்தால் கிடைத்த அங்கீகாரம்
“2015ல் பள்ளியில் படித்த காலத்திலேயே வீட்டுக்கு அருகிலிருக்கும் கோயில் திருவிழாக்களில் பறை வாசிக்கும் கலைஞர்களைப் பார்த்து என் ரசனையை வளர்த்துக்கொண்டேன். பறை எனும் வாத்தியத்துக்கு சாதிச் சாயம் பூசிப் பார்க்கும் வழக்கம் எங்கள் ஊரிலும் இருந்ததால், அந்த வயதில் அந்த வாத்தியத்தைத் தொடுவதற்கோ வாசிப்பதற்கோ என்னை அனுமதிக்காத சூழல் இருந்தது. அதன்பின் எங்கள் ஊரிலிருக்கும் ஓர் அமைப்பில் பல கலைகளையும் கற்றுத்தரும் பயிற்சிப் பட்டறை நடந்தது. அங்கே நான் சிலம்பம் கற்றுக்கொண்டேன். அங்கேயே ஞெகிழியால் செய்யப்பட்ட பறையும் இருந்தது. அதை எடுத்து நான் வாசிப்பதைப் பார்த்து அவர்கள் வியந்தனர். கேள்வி ஞானத்தால் வாசிக்கிறேன் என்றவுடன், ஆச்சரியப்பட்ட அவர்கள் நிகழ்ச்சிகளுக்கும் என்னை கூட்டிச் செல்லத் தொடங்கினர். அந்தக் கலைஞர்கள் என்னை அங்கீகரித்ததே எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி.
கல்லூரி முதல்வரின் ஊக்கம்
தற்போது சென்னை, தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியில் ஒலிப்பதிவு பொறியாளருக்கான பிரிவில் படித்துவருகிறேன். கல்லூரியில் நான் மாணவர்களுக்கு இலவசமாகவே பறை வாசிக்கக் கற்றுக்கொடுத்தேன். என்னுடைய இந்த முயற்சிக்குக் கல்லூரி முதல்வரின் ஆதரவும் இருந்தது. கல்லூரி கலை விழாவிலும் பறை வாத்தியத்தை வாசிக்கும் வாய்ப்பை எனக்குக் கல்லூரி முதல்வர் வழங்கினார்.
பழங்கால வாத்தியங்கள் சேகரிப்பு
2017-ல் நிமிர்வு பறை கலைக் குழுவுடன் இணைந்து நிகழ்ச்சிகளுக்குச் செல்வது, பறை வாசிப்பதற்குப் பயிற்சியளிப்பது போன்றவற்றைச் செய்தேன். அதைத் தொடர்ந்து மய்யம் கலைக் குழு, இன்ஃபினிட் ஆர்ட் டூ ஆர்ட், தடம் போன்ற சென்னை மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 20 கலைக் குழுக்களோடு இணைந்து பணியாற்றத் தொடங்கினேன். இதுதவிர ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் செயல்படும் தம்பட்டை குழு போன்றவற்றோடும் இணைந்து பணியாற்றியிருக்கிறேன்.
அதன்பிறகு எனக்கு ஒரு யோசனை தோன்றியது. பறை வாத்தியத்தைப் பலரும் வாசித்துவருவதால், நம் மண்ணின் பழங்கால வாத்தியங்களை வாசிப்போமே என்று தோன்றியது. உடனே பழங்கால வாத்தியங்களை ஊர் ஊராகத் தேடித் தேடி வாங்கத் தொடங்கினேன். என்னுடைய இந்தப் பயணத்தில் எனக்குப் பெரும் ஒத்துழைப்பையும் நேரத்தையும் பணத்தையும் உழைப்பையும் செலுத்தி வருபவர் என் நண்பர் மனோ” என்றார் மணிகண்டன்.
ஐந்து நாட்டு மாணவர்கள்
ஏழு பேருக்குப் பறையை இணையவழி சொல்லிக் கொடுக்கத் தொடங்கிய மணி, இன்றைக்கு 150-க்கும் மேற்பட்டவர்களுக்குப் பறை வாத்தியம் வாசிப்பதற்கு இணையவழியில் சொல்லித்தருகிறார். இவரிடம் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கலிபோர்னியா, துபாய், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருப்பவர்கள் பயிற்சி பெறுகின்றனர். மலைவாழ் மக்களுக்கும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் பறை வாசிப்பதற்கு இலவசமாகச் சொல்லிக்கொடுக்கிறார்.
“எனக்கு 20 ஆட்டக் கலைகள் தெரியும். 40 வாத்தியங்களை வாசிக்கத் தெரியும். ஆஸ்திரேலியா தமிழ் ஆர்ட்ஸைச் சேர்ந்த முத்தரசன், இன்ஃபினிட் குருநாதன் ஆகியோர் எனக்குப் பக்கபலமாக இருக்கின்றனர். சில்லுக்கருப்பட்டி, ஜிப்ஸி படங்களில் தாளவாத்தியங்களை வாசித்திருக்கிறேன். பல குறும்படங்கள், பாடல்களுக்கும் என்னுடைய இசையை அளித்திருக்கிறேன். அறிவு, ரோஜா ஆதித்யா ஆகியோரோடு இணைந்து ராப்புக்கு உடுக்கை ஒலி கொடுக்கும் இசை முயற்சியிலும், ஒப்பாரிக்கும் மேற்கத்திய சங்கீதத்துக்கும் ஒப்பீடு செய்யும் ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளேன். அப்துல்கலாம் அறக்கட்டளை விருது, கலைப் பேரரசு உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறேன்” என்கிறார் பழங்கால அரிய வாத்தியத்தில் ஒலியை எழுப்பியபடி ‘சவுண்டு’ மணி!
இவர் பலவித தோல்வாத்தியக் கருவிகளையும் வாசிக்கும் ‘நம்ம பேட்ட’ காணொலி:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT