Published : 14 Aug 2020 05:29 PM
Last Updated : 14 Aug 2020 05:29 PM

பேசப்படாத உள்ளூர் 'காந்தி'கள்

காந்தி நாராயணன்

74-வது சுதந்திர நாளை ஒட்டி என் மகனுடைய பள்ளியில் விடுதலைப் போராட்ட வீரர்களை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். ஒவ்வொரு குழந்தையையும் ஒரு விடுதலைப் போராட்ட வீரரைக் குறித்துப் பேசவும் சொல்லியிருக்கிறார்கள். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பாலகங்காதரத் திலகர் எனப் பலரையும் பற்றி அவனுடைய பள்ளியில் பேசிக்கொண்டிருந்தார்கள்.

இது குறித்து அவனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, "உன்னுடைய கொள்ளுத்தாத்தா ஒருவர் காந்தியுடன் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர். தமிழ்நாட்டுக்கு காந்தி வந்தபோது, அந்தத் தாத்தாவை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார். அவர் பெயர் 'காந்தி நாராயணன்' என்ற தகவலையெல்லாம் மகனிடம் கூறினேன். இரண்டாம் வகுப்பு படித்துவரும், அவன் இதைக் கேட்டு ஆச்சரியத்தில் வாய் பிளந்துவிட்டான்.

விடுதலைப் போராட்டத்தில் பெரும்தலைவர்கள் ஈடுபட்டது, நம் அனைவருக்கும் தெரியும். அவர்களைப் போற்றவும் செய்கிறோம். அதேநேரம் ஒவ்வொரு ஊரிலும் சிறிதும் பெரிதுமாகப் பல தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். விடுதலைப் போராட்டம் எனும் பெருந்தேரை அவர்கள் ஒன்றுகூடி இழுத்துவந்து, விடுதலை பெற்ற நாடு என்ற நிலையில் கொண்டுவந்து வெற்றிகரமாக நிறுத்தியிருக்கிறார்கள். இதுபோல் நம் ரத்த உறவுகளில், நம்மைச் சுற்றியுள்ள வீடுகளில், நம் பகுதியில் இருந்த விடுதலைப் போராட்ட வீரர், வீராங்கனைகள் இருந்திருப்பார்கள். அவர்களைப் பற்றி நாம் அறிந்திருக்கிறோமா? இந்த நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய பங்கை உணர்ந்திருக்கிறோமா?

காந்தியின் பெயரைத் தாங்கியவர்

'காந்தி' நாராயணனைப் பற்றி மேலும் அறிவதற்காக அவருடைய மகன் நா.சுந்தரமூர்த்தி, பேரன் சு.திருநாராயணன் ஆகிய இருவரையும் தொடர்புகொண்டேன். அவர்கள் பகிர்ந்துகொண்டதிலிருந்து:

"இன்றைய சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த நாராயணன் காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டிருந்தார். அதன்காரணமாக 'காந்தி' நாரயணன் அல்லது 'காந்தி நாவன்னா' என்றே நண்பர்களாலும் ஊர் மக்களாலும் அழைக்கப்பட்டார். அப்படி அழைக்கப்படும் அளவுக்கு காந்தியக் கொள்கைகளை தீவிரமாக அவர் பின்பற்றிவந்தார். தானே நூல் நூற்று, கதராடை அணியும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.

1920-களுக்குப் பிறகு தமிழகத்தின் பல ஊர்களுக்கும் காந்தி பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணங்களின்போது 1921, 1927, 1934 ஆகிய ஆண்டுகளில் தேவகோட்டைக்கும் காந்தி வந்துள்ளார். காந்தி நாராயணனின் வாழ்க்கையில் 1934 மிகவும் முக்கியமான ஆண்டு. ஜனவரி மாதம் 27, 28 ஆகிய நாள்களில் காந்தி தேவகோட்டைக்கு வந்திருந்தார். காரைக்குடியில் இருந்து வந்த காந்திக்கு தேவகோட்டையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 'காந்தி வரவேற்புக் குழு' தலைவராகச் செயல்பட்ட நாராயணன், அன்றைய மதிப்பில் ரூ.2,600 ரூபாய் (இன்று லட்சக்கணக்கில் இருக்கும்) பண முடிப்பை காந்தியிடம் வழங்கினார்.

தேவகோட்டை முனியய்யா கோயில் பொட்டலுக்கு அருகே 'காந்தி' நாரயணனின் தோட்டம் இருந்தது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காந்தி பேசினார். பிறகு 'காந்தி' நாராயணனின் மூத்த மகளுக்கு சாவித்திரி என்று பெயர் சூட்டினார். அது மட்டுமல்லாமல், அந்தப் பெண்ணின் ஒளிப்படத்தில் கையெழுத்திட்டும் கொடுத்தார். அதற்கு மரியாதை செய்யும் வகையில் நாராயணனின் மனைவி சிவகாமி, காந்திக்கு ஒரு வெள்ளித் தட்டையும் ஒரு பவுன் தங்கத்தையும் வழங்கினார். அடுத்த நாள் ராம் நகருக்குச் சென்ற காந்தி, தலித் குழந்தைகளுக்கான பள்ளிக்கு அடிக்கல் நாட்டினார்.

பம்பாய் காங்கிரஸ் மாநாடு

காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி வந்த 'காந்தி' நாராயணன், காங்கிரஸ் கட்சி சார்ந்த செயல்பாடுகளிலும் தீவிரமாக ஈடுபட்டுவந்தார். தேவகோட்டை, அன்றைய ராமநாதபுரம் மாவட்டம் சார்ந்த பல்வேறு விடுதலைப் போராட்டங்களில் பங்கெடுத்துள்ளார். 1934 அக்டோபர் 24-28 ஆகிய நாள்களில் அன்றைய பம்பாயில் காங்கிரஸ் கட்சியின் 48-வது மாநாடு ராஜேந்திர பிரசாத் தலைமையில் நடைபெற்றது. அந்த மாநாட்டுக்குச் சென்றிருந்த 'காந்தி' நாராயணன் கதர் உடை, கதர் தொப்பி ஆகியவற்றை அணிந்துகொண்டு பம்பாயின் வோர்லி பகுதியில் படமெடுத்துக்கொண்டுள்ளார்.

விடுதலைப் போராட்ட காலத்தில் காந்தியவாதிகளான கைத்தான் தம்பதிகள், இவருடன் இணைந்து பணிகளில் ஈடுபட்டுவந்தனர். ராட்டையில் தான் நூல் நூற்ற சிட்டங்களை காந்தியடிகளிடம் கொடுக்கும்படி கைத்தான் தம்பதிகளிடம் 'காந்தி' நாராயணன் 1937இல் கொடுத்து அனுப்பினார். ஹரிஜன நிதிக்காக அதைப் பயன்படுத்திக்கொள்வதாகக் கூறிய காந்தி, நாராயணனைப் பாராட்டும் வகையில் தன் கைப்படக் கடிதம் எழுதி, தமிழில் மோ.க. காந்தி என்று கையெழுத்திட்டு அனுப்பியுள்ளார். கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதியிருந்தாலும், தமிழ் மக்களுக்கு கடிதம் அனுப்பும்போது தமிழில் கையெழுத்திடுவதை காந்தி வழக்கமாக வைத்திருந்தார். தென்னாப்பிரிக்காவில் இருந்த காலத்திலேயே காந்தி, தமிழ் கற்றிருந்தார். காந்தி நாரயணனுக்கு காந்தி அனுப்பிய அந்தக் கடிதம், மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

காந்தி நாரயணனுக்கு காந்தி அனுப்பிய கடிதம்,

காந்தி குடிலில்...

காந்தி சுடப்பட்ட பிறகு, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தேவகோட்டையில் ஒரு ஊர்வலத்தை 'காந்தி' நாராயணன் ஏற்பாடு செய்திருந்தார். பிறகு, தேவகோட்டையின் முக்கிய வீதிக்கு காந்தி தெரு என்று பெயரும் இட்டார். பிற்காலத்தில் தேவகோட்டை ஊராட்சியின் முதல் தலைவராக பதவியேற்று, ஊருக்கு பல நற்பணிகளை மேற்கொண்டார். மதுரை காந்தி நிலையக் குழுத் தலைவர் க.அருணாச்சலத்துடன் இணைந்து செட்டிநாட்டு பகுதிகளில் காந்தி ஏலம் விட்ட, பயன்படுத்திய பொருள்களை மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு சேகரித்துகொடுத்தார்.

காரைக்குடி சொ.முருகப்பாவுடன் இணைந்து 'ஊழியன்' இதழின் இயக்குநராக 'காந்தி' நாராயணன் செயல்பட்டுள்ளார். இந்த இதழுக்கு 'தமிழ் கடல்' இராய.சொக்கலிங்கம் (இராய.சொ.) தலைமை ஆசிரியராகவும், எழுத்துலக முன்னோடிகளான வ.ரா., தி.ஜ.ர., புதுமைப்பித்தன் ஆகியோர் துணை ஆசிரியர்களாகவும் செயல்பட்டுள்ளனர். இந்த மாத இதழில் தேசப் பற்று, காந்திய சிந்தனைகள் குறித்து நிறைய கட்டுரைகள் வெளியாகியுள்ளன. தேவகோட்டை ரயில் நிலையத்துக்கு அருகே 'ஆதி நிலையம் ஆதாரப் பள்ளி' என்ற காந்தியவழி பள்ளியை 1950-களில் நிறுவி நடத்திவந்தார்.

1969 இல் காந்தி நூற்றாண்டு விழா நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு விழாக் குழு ஒருங்கிணைப்பாளராக இருந்த கல்லுப்பட்டியைச் சேர்ந்த மீ. விநாயகம், காந்தி வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்தில் காந்தி வாழ்ந்த அதே குடிலில் தங்கவைக்க சிலரைத் தேர்ந்தெடுத்திருந்தார். அவர்களில் 'காந்தி' நாராயணனும் ஒருவர் என்பதைவிட வேறென்ன சிறப்பு வேண்டும்?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x