Published : 13 Aug 2020 03:46 PM
Last Updated : 13 Aug 2020 03:46 PM
‘இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் நாம் கரோனாவை விரட்டலாம். அப்படி வாழ்பவர்கள் மூலம் கரோனா தொற்று பரவவும் வாய்ப்பில்லை!’ எனச் சொல்லி அதன்படியே வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஒரு மனிதர். எல்லோரும் கரோனாவுக்காகக் கபசுரக் குடிநீர் குடித்துக் கொண்டிருக்க, இவர் அன்றாடம் மூலிகை வடிநீரையே குடிநீராகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ‘இதைக் கரோனாவுக்காகக் குடிக்கவில்லை. அந்த நோய்த்தொற்று வருவதற்கு முன்பிருந்தே நான் இதைத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்!’ என்று அதிரடி கிளப்புகிறார்.
அந்த மனிதர் சட்டையில்லா சாமியப்பன் என்ற பெயரில் ஏற்கெனவே அறிமுகமானவர்தான்.
'மனித ஆடம்பர வாழ்வே துன்பத்திற்குக் காரணம். அதை ஒழித்தாலன்றி இயற்கையையும், பல்லுயிர்களையும் காப்பாற்ற முடியாது!'- இப்படிச் சொல்லி 25 ஆண்டுகளாக மேல்சட்டை அணிவதை நிறுத்தியவர். நவீன ஆடைகள் என்பதும், அதில் சாயம் என்பதும் இயற்கைக்கு எதிரானது என்று சொல்லித் தேர்தல்களின்போது வாக்குச்சாவடிக்கு கோவணத்துடன் சென்று ஓட்டுப் போட்டவர்.
பியுசி படித்து விட்டுத் தன் தோட்டத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டிருந்தவர், நொய்யலாறு வறண்டு சாயக்கழிவாக மாறியதைக் கண்டும், தன் நிலமெல்லாம் மலடானது பார்த்தும் கொதித்துப் போய் பாரம்பரிய விவசாயத்திற்குத் திரும்பியவர். பின்னர் பல்லுயிர்ப் பெருக்கக் காடுகள் அமைக்கவும், அதைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டவும் தமிழகமெங்கும் செல்கிறார்.
'தாய் வனம்' என்ற சூழல் அமைப்பை நிறுவி, இன்றைக்கு நூற்றுக்கணக்கான கிராமங்களில் இயற்கை பண்ணைக் காடுகள், மூலிகைப் பண்ணைகள் அமைத்திருக்கிறார். தற்போது கரோனா காலத்தில் மர நாற்றுகள் எடுப்பதில், ஊர், ஊராகக் கொண்டு செல்வதில் சிரமம் இருப்பதால் பெருமாநல்லூரில் உள்ள அவரின் பண்ணையிலேயே தங்கியிருக்கிறார். அவ்வப்போது உள்ளூர் நண்பர்கள் அழைப்பின் பேரில் அவர்களின் பண்ணைகளுக்குச் சென்று ஆலோசனை வழங்கி வருகிறார்.
அவரைச் சந்தித்துப் பேசினேன்.
‘‘நான் 2004-ல் கோவணத்தை கட்டிக்கிட்டு ஓட்டுப் போடப் போனப்பவே ஒரு அறிக்கை தந்தேன். ‘அடிமைகளாய் அல்லல்பட்டோம் என்றபோது கூட அள்ளிக்குடிக்கத் தெள்ளிய நீர்நிலைகள், நிலத்தின் மேல் பாட்டனுக்கும், பாட்டிக்கும் இருந்தன. சுதந்திரம் கிடைத்ததென்று சொல்லி மகிழ்ந்தபோது கைக்கு எட்டிய கிணற்று நீர் என் தாய்க்கும், தந்தைக்கும் கிடைத்தது. குடியாட்சி நடக்கிறது எனக் களித்திருக்க ஆயிரம் அடிக்கும் கீழ் அதலபாதாளத்தில் ஆழ்குழாய்க் கிணற்று விஷம் இந்தத் தலைமுறைக்கு வருகிறது. இனி எதிர்காலத் தலைமுறைக்கு என்ன வைத்திருக்கிறோம்? தண்ணீர்ச் சுதந்திரம் தட்டிப் பறிக்கப்பட்டது. மூச்சுக்காற்று சுதந்திரம் முடிவுக்கு வரப்போகுது!’ன்னு சொல்லியிருந்தேன்.
அதுமட்டுமில்ல, ‘தங்க நாற்கரச்சாலை, தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, புறவழிச்சாலை, நகர்புற வளையச்சாலை, கிராமச்சாலையென வகை வகையாய் சாலைகள் அமைப்பவர்களுக்கு ஏன் தங்க நாற்கரச் சோலை, தேசிய நெடுஞ்சோலை, மாநில நெடுஞ்சோலை, புறவழிச்சோலை, நகர்புற வளையச் சோலை, கிராமச்சோலை என்றெல்லாம் சோலைகள் அமைக்க முடியாதா? மாதம் மும்மாரியும், வருடம் ஒரு கல்மாரியும் பெய்த இந்த தேசத்திலே, மழைநீர் சேகரிப்பு குழி வெட்டச் சொல்லி ஆணையிடுகிறது அரசு. மழைக்கு எப்போது ஆணையிடும்?’ என்றும் குறிப்பிட்டிருந்தேன். இயற்கை வளம் முன்னேறினாத்தான் முன்னேற்றம்.
ஆனா, இப்ப எல்லாம் இயற்கை அழிச்சுட்டு உருவாகறதுலதான் முன்னேற முடியும்னுதான் சொல்லிட்டு இருக்கறாங்க. அதனால இப்ப படற அல்லல் ஒண்ணும் இல்லீங்க. இந்த கரோனா வைரஸ் இல்லீங்கோ, இன்னும் எத்தனையோ வைரஸ் வரப் போகுது பாருங்க. அப்ப என்ன பண்ணப் போறாங்களோ நம்ம ஜனங்க. இதுல, நான் என் குரலா சொல்றது...மனித இனம் இப்படியே போயிட்டிருந்ததுன்னா 2050க்கு மேல வாழவே முடியாது; அந்த வாழ்க்கை சித்ரவதைப்பட்டதா இருக்கும்.
இங்கே எத்தனையோ உயிரனங்கள் வாழ்ந்துட்டுத்தான் இருக்கு. அது எல்லாம் நவீனமாகவா வாழுது. இயற்கை சூழலை எது ஒண்ணாவது நாசம் பண்ணுதா? இல்லியே. அதுக வாழ்ந்துட்டுதான் இருக்குதுக. மனிதன் மட்டும் வாழமுடியலைன்னா என்ன காரணம்? நொய்யலாத்துல வெள்ளம் போகுதுன்னா நுரையா போகுதுங்க. இவங்க பண்ணின அட்டூழியம்தானே? அனாவசிய ஆடம்பர நுகர்வுதானே? இன்னைக்கு மாஸ்க் போட்டுக்கறதுக்கும், சோப்புத் தண்ணி விட்டு கைகழுவறதுக்கும் காரணம் இயற்கையோடு நாம் சேந்து வாழாததுதானே?’’ என்றெல்லாம் நிறையப் பேசினவர், தான் தினம் பயன்படுத்தும் மூலிகை வடிநீர் விஷயத்திற்குள் வந்தார்.
‘‘நான் இயற்கையோட சேர்ந்து வாழறதுக்கு முக்கிய உதாரணம் இந்த மூலிகை வடிநீர்தான். இதைத்தான் நான் தினமும் குடிநீராவே பயன்படுத்தறேன். சின்னதா ஒரு தொட்டியில வெட்டிவேர், வல்லாரை, மஞ்சள், கல்வாழை, இஞ்சி, இன்சுலின் தாவரம், சர்ப்பகந்தா, தொட்டாச்சுருங்கி, விலாங்குச்சி வேர், சீரகத்துளசி, ரணகள்ளி, எலிகாது இலை, நெல்லிக்கட்டை, நாவல்கட்டை, சந்தனக்கட்டைன்னு ஒரு பெரிய தொட்டியில போட்டு வளர்த்தி, அதில் ஊறி, ஊறி இறங்கும் நீரைத்தான் நான் எப்பவும் குடிக்கவே உபயோகிக்கிறேன். இங்கே வர்ற நண்பர்களுக்கும் அதுதான் குடிநீர்.
நீங்க கரோனாவுக்குச் சொல்ற கபசுரக் குடிநீரை விட பல மடங்கு இதுக்கு பவர் அதிகம். இதை இன்னமும் பெரிய அளவுல பெரிய பெரிய பண்ணைகள்ல செய்ய திட்டங்கள் வச்சிருக்கேன். இதைப் பார்த்துட்டு நிறையப் பேர் அதை அவங்க தோட்டத்தில நிர்மாணிக்கத் திட்டமும் போட்டிருந்தாங்க. அதுக்குள்ளே இந்த கரோனா ஊரடங்கு வந்துருச்சு. அதனால எங்கேயும் நினைச்ச இடத்துக்குப் போக முடியறதில்லை. அது முடியட்டும்னு இருக்கோம்!’’ என்றார்.
''யாரையும் இந்த மூலிகை வடிநீரைக் குடிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தலை. நம் நாட்டில் எத்தனையோ லட்சக்கணக்கான மூலிகைத் தாவரங்கள் இருக்கு. அதுக்கெல்லாம் மருத்துவக் குணங்களும் இருக்கு. அதையெல்லாம் பயன்படுத்தி இப்படியொரு ஏற்பாட்டைச் செய்து இயற்கையோடு சேர்ந்து வாழ்ந்தோம்னா நமக்குக் கரோனா இல்லை, வேற எந்த வைரஸ் கிருமியும் அண்டாது!’’ எனக் கைகூப்பி விடை கொடுத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT