Last Updated : 12 Aug, 2020 05:13 PM

1  

Published : 12 Aug 2020 05:13 PM
Last Updated : 12 Aug 2020 05:13 PM

அரசு வேலையில் இருந்து ஓய்வுபெற்ற பூனை; மீதிக்காலத்தை கிராமத்தில் கழிக்கத் திட்டம்

இங்கிலாந்து

இங்கிலாந்து வெளியுறவுத் துறை மற்றும் காமன்வெல்த் அலுவலகத்தில் எலி பிடிக்கும் பணியில் ஈடுபட்டுவந்த பாமர்ஸ்டன் எனப் பெயரிடப்பட்ட தலைமைப் பூனை தன்னுடைய பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளது.

கறுப்பு வெள்ளை நிறத்திலிருக்கும் பாமர்ஸ்டன் பூனையை பாட்டர்ஸியா பகுதியில் உள்ள நாய்கள், பூனைகள் காப்பகத்திலிருந்து 2016-ம் ஆண்டு எலி பிடிக்கும் பணிக்காக இங்கிலாந்து அரசு தத்தெடுத்தது.

இங்கிலாந்து வெளியுறவுத் துறை கொள்கையில் அதிக ஆதிக்கம் செலுத்திய மறைந்த முன்னாள் பிரதமர் லார்டு பாமர்ஸ்டனின் பெயர் இந்தப் பூனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

வெளியுறவுத் துறை அலுவலகத்தில் உள்ள எலிகளைத் திறமையாகப் பிடிக்கும் பணியில் பாமர்ஸ்டன் பூனை ஈடுபட்டு வந்தது. நான்கு வருடங்களாக இங்கிலாந்து அரசுப் பணியில் ஈடுபட்டுவந்த இந்தப் பூனை தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது.

ஓய்வுக் காலத்தை உல்லாசமாகக் கழிப்பேன்

இதுகுறித்து அந்தப் பூனையின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இனி நான் வெளியுறவுத் துறை அலுவலகத்துக்கு வரும் வெளிநாட்டுப் பிரமுகர்களின் பேச்சைக் கேட்க வேண்டியதில்லை. வெள்ளைச் சுவர்களுக்கு மத்தியில் சுற்றிக் கொண்டிருக்கத் தேவையில்லை. என்னுடைய ஓய்வுக் காலத்தை மரங்களின் மீது ஏறி உல்லாசமாகச் செலவழிக்கத் திட்டமிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளது.

ஒரு லட்சம் ரசிகர்கள்

பாமர்ஸ்டன் பூனையை ட்விட்டரில் மட்டும் 1,05,000 பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். பாமர்ஸ்டன் செய்யும் குறும்புகளும் ஒளிப்படங்களும் ட்விட்டரில் பதிவிடப்பட்டு வந்தன. இந்நிலையில் பணியிலிருந்து ஓய்வுபெற்றுள்ள பாமர்ஸ்டன், கிராமப் புறத்தில் தன்னுடைய ஓய்வுக் காலத்தைக் கழிக்கத் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய வெளியுறவுத் துறை அலுவலகச் செயலர் சைமன் மெக்டொனால்ட், “கரோனா ஊரடங்கு காலத்தில் மற்ற அலுவலக ஊழியர்களைப் போல் பாமர்ஸ்டனும் வெளியுறவுத் துறை அலுவலக ஊழியர்களுடைய வீட்டிலிருந்து தன் பணியை மேற்கொண்டு வந்தது. தற்போது பாமர்ஸ்டனுக்கு வயதாகிவிட்டதால் பணியிலிருந்து ஓய்வு அளிக்கப்படுகிறது.

ஆனால், பாமர்ஸ்டன் பூனைக்கு ஓய்வூதியம் வழங்கப்படுமா எனத் தெரியவில்லை. ஆனால், பாமர்ஸ்டன் இங்கிலாந்து அரசுப் பணியில் உள்ள நாய்கள், பூனைகளின் தூதராகத் தொடர்ந்து இருப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.

பாமர்ஸ்டன் பூனைக்கு அடுத்து அந்தப் பதவியில் எந்தப் பூனை நியமிக்கப்படும் என்பது தெரிவிக்கப்படவில்லை. பாமர்ஸ்டன் பூனையின் பணி ஓய்வு, சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x