Published : 10 Aug 2020 08:23 PM
Last Updated : 10 Aug 2020 08:23 PM
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர் ஒருவர், 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண வடிவ கேரம் போர்டை தயாரித்துள்ளார்.
கரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வீடுகளில் தாயக்கட்டை, பல்லாங்குழி, செஸ், கேரம்போர்டு உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி பொழுதை கழித்து வருகின்றனர்.
கேரம்போர்டில் 4 பேர் மட்டுமே விளையாட முடியும். ஒரே சமயத்தில் ஆறு பேர் விளையாடும் வகையில் அறுங்கோண வடிவில் கேரம் போர்டை தயாரித்து அசத்தியுள்ளார் சிங்கம்புணரியில் விளையாட்டு பொருட்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர் பாபு.
இந்த அறுங்கோண வடிவ கேரம்போர்டை சிவகங்கை மாவட்ட மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். மேலும் இந்த கேரம்போர்டை கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வருகிறார்.
இதுகுறித்து பாபு கூறுகையில், ‘ஊரடங்கில் பொழுதுபோக்கிற்காக மக்கள் அதிக அளவில் கேரம்போர்டு, செஸ்போர்டு வாங்கி செல்கின்றனர். இதில் குறிப்பாக கேரம்போர்டு விற்பனை அதிகமாக உள்ளது.
கேரம்போர்டை 4 பேர் மட்டுமே விளையாட முடியும். சில குடும்பங்களில் 4 உறுப்பினர்களுக்கு மேல் உள்ளனர்.
அவர்களும் ஒரே சமயத்தில் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம்போர்டு தயாரித்தேன். இதில் ஆறு பேர் விளையாடலாம். 4 பேர் விளையாடும் கேரம்போர்டுக்கு மொத்தம் தலா 9 வெள்ளை, கருப்பு காயின்கள், ஒரு சிவப்பு காயின் என, 19 காயின்கள் தேவைப்படும். 6 பேர் விளையாடும் கேரம்போர்டுக்கு தலா 11 வெள்ளை, கருப்பு காயின்கள், ஒரு சிவப்பு காயின் என 23 காயின்கள் இருந்தாலே போதும், என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT