Published : 10 Aug 2020 01:45 PM
Last Updated : 10 Aug 2020 01:45 PM
ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகியில் அமெரிக்கா அணுகுண்டு வீசியதில் லட்சக்கணக்கான மக்களைப் பலிகொண்டு நேற்றோடு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. உலகின் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டுகள் ஏற்படுத்திய தாக்கம் இன்றளவும் ஜப்பானியர்கள் மனத்தில் ஆறாத வடுவாகவே உள்ளது.
ஒரு நாட்டுக்கு எதிராக அணு ஆயுதங்கள், ராணுவப் படைகள் கொண்டு நடத்தப்படும் போர் நிச்சயம் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்காது. இந்த வகையான போர்களால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் ஏழைகள், பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், முதியவர்கள் ஆகியோர்தாம்.
பொதுவாகத் தன்னுடைய நாட்டை எதிர்க்கும் பிற நாடுகளை எதிரியாகச் சித்தரித்துக்கொள்வது மக்களின் இயல்பு. இதனால், அந்நாட்டு மக்கள் மீது பகையுணர்வும் விரோதப்போக்கும் திரைப்படங்கள், ஊடகங்கள் வாயிலாகக் குழந்தைகளுக்குக்கூடக் கடத்தப்படுகிறது.
அணுகுண்டுகள் அழிக்கப்படவேண்டும்
இந்நிலையில் உலக வரலாற்றில் போரின் பாதிப்பை உணர்த்திய ஜப்பான் மீதான அமெரிக்காவின் அணுகுண்டுத் தாக்குதல், இன்றைய ஜப்பானிய இளைஞர்கள் மத்தியில் அமெரிக்கா குறித்து என்ன மாதிரியான மனநிலையை உருவாக்கியுள்ளது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.
ஒவ்வோர் ஆண்டும் ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்ட ஹிரோஷிமா, நாகசாகியில் உள்ள நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் நினைவஞ்சலி செலுத்துகின்றனர். ஆனால், இந்நாளில் அமெரிக்காவுக்கு எதிரான பகையுணர்வைத் தூண்டும்விதமாக அரசியல்வாதிகளின் பேச்சோ செய்திகளோ வெளியிடப்படுவதில்லை. மாறாக, அணு ஆயுதங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்ற கருத்தைப் பரப்பும்விதமாகப் போரின் பாதிப்புகள் குறித்த ஒளிப்படக் கண்காட்சிகள் மட்டுமே நடத்தப்படுகின்றன.
சீனாவைப் பற்றிய அச்சம்
அமெரிக்கா தங்கள் மீது வீசிய அணுகுண்டு பாதிப்பு குறித்து 20 வயதான வணிகவியல் துறை மாணவர் ஹயத்தொ கூறுகையில், “அமெரிக்கா நடத்திய அணுகுண்டுத் தாக்குதலில் லட்சக்கணக்கான ஜப்பானியர்கள் உயிரிழந்தது மறக்க முடியாத வேதனை தரும் விஷயம்தான். ஆனால், 1945-ம் ஆண்டு அமெரிக்கா - ஜப்பான் இடையிலான போருக்கு இருநாட்டு அரசுகளுமேதான் காரணம். இந்தப் போரில் ஜப்பான் மீதும் தவறு உள்ளது. அமெரிக்கா குறித்த பார்வை ஜப்பானியர்கள் மத்தியில் முன்பு இருந்ததற்கும் தற்போது உள்ளதற்கும் பெரிய அளவில் வேறுபாடு உள்ளது. இன்றைக்கு ஜப்பானின் ராணுவத்தைக் கட்டுப்படுத்துவதே அமெரிக்காதான். இதனால், இன்றைய ஜப்பானிய இளைஞர்கள் மத்தியில் அமெரிக்கா குறித்த பார்வை மாற்றப்பட்டுள்ளது. தற்போது நாங்கள் யோசிப்பது எல்லாம் சீனாவைப் பற்றித்தான்.
75 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியதுபோல் சீனா - அமெரிக்காவுக்கு இடையே போர் நடைபெற்றால் சீனா மீது அமெரிக்கா அணுகுண்டு வீசுமோ என்று அச்சமாக உள்ளது” என்றார்.
இருநாட்டு மக்களும் இணைவதே முக்கியம்
அதேபோல் சமூகவியல் துறையைச் சேர்ந்த 21 வயது மாணவி யூகி கூறுகையில், “ஹிரோஷிமாவில் அணுகுண்டால் உயிரிழந்தவர்களுக்காக நிறுவப்பட்டுள்ள நினைவஞ்சலித் தூணைப் பார்க்க நான் ஒருமுறை சென்றிருந்தேன். சாதாரணப் பொதுமக்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்கள் மிகவும் வேதனை தருபவை. ஜப்பான் அரசு பேர்ல் ஹார்பர் மீது நடத்திய தாக்குதல், அமெரிக்கா எங்கள் மீது நடத்திய அணுகுண்டுத் தாக்குதல் ஆகிய இரண்டிலும் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண ஏழைமக்கள்தான்.
இதுபோன்ற நிகழ்வுகள் இனி எப்போதும் நடக்கவே கூடாது என நினைக்கிறேன். ஆனால், பாதிப்புகளுக்குப் பிறகும் போர்கள் நடைபெறுவது வேதனையாக உள்ளது. எங்கள் மீது அணுகுண்டு வீசியதற்காக தற்போதை அமெரிக்கர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல் நாங்களும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக இல்லை. எதிர்காலத்தில் இன்றைய இருநாட்டு இளைஞர்களும் இணைந்து வாழ்வதே முக்கியம் என்று நினைக்கிறேன்” என்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT