Published : 25 Sep 2015 09:54 AM
Last Updated : 25 Sep 2015 09:54 AM
அமெரிக்காவின் 28-வது ஜனாதிபதி உட்ரோ வில்சன். ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தையும் உலக அமைதிக்கான தேவையையும் பறைசாற்றியவர். இருப்பினும், அவர் ஆட்சிக் காலத்தில்தான் முதலாம் உலகப்போர் நிகழ்ந்தது.
1856-ல் வர்ஜீனியாவில் பிறந்தார். குழந்தைப் பருவம் முதலே ஆபிரகாம் லிங்கன் பற்றியும் போரின் அபாயம் குறித்தும் ஆர்வத்தோடு படித்துவந்தார். ஆனால், டிஸ்லெக்சியா என்னும் மனவளர்ச்சிக் குறைபாட்டால் பள்ளிப் படிப்பில் தடுமாறினார். பின்னாளில் மிகச் சிறப்பாகப் படித்துக் கல்லூரிப் பேராசிரியர் ஆனார். அரசியல் ஆர்வத்தால் தொடர்ந்து நல்ல அரசாட்சி குறித்துக் கட்டுரைகள் எழுதினார். 1911-ல் நியூஜெர்சியின் ஆளுநரானார். 1913-ல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு அதிபரானார். தான் கற்ற அரசியல் சித்தாந்தங்களை ஆட்சியில் அமல்படுத்தினார். செல்லமாக ‘பள்ளிக்கூட வாத்தியார்’ என அழைக்கப்பட்டார். ஆனால், அவர் அதிபரான ஒரு வருடத்தில் முதலாம் உலகப் போர் வெடித்தது.
1918-ல் போர் நிறுத்தம் வேண்டி அவர் ஆற்றிய உரை இன்றும் பேசப்படுகிறது. அதன் விளைவாக 1919-ல் லீக் ஆஃப் நேஷன்ஸ் என்னும் சமாதான உடன்படிக்கை முதன்முதலாக உருவெடுத்தது. அதே ஆண்டு 25 செப்டம்பரில் அமெரிக்க மக்களை நேரில் சந்தித்து அமைதியின் முக்கியத்துவத்தைப் பேச வேண்டி ரயிலில் பயணித்தபோது, திடீரெனப் பக்கவாதம் ஏற்பட்டுச் செயலிழந்தார். 1920-ல் அமைதிக்கான நோபல் பரிசு அளித்துக் கவுரவிக்கப்படார். இன்றும் மக்கள் மனதிலும் ஒரு லட்சத்துக்கான அமெரிக்க டாலர் நோட்டிலும் அவர் முகம் பதிந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT