Published : 09 Aug 2020 08:50 PM
Last Updated : 09 Aug 2020 08:50 PM
நம்முடைய தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இது பொன்விழா ஆண்டு. இந்திய நாட்டுக்கென்று ஒரு தேசிய கீதம் இருப்பது போல், தமிழ்நாட்டுக்கென்று தமிழ் மொழிக்கென்று தனித் தன்மையோடு ஒரு பாடல் இருக்க வேண்டும் என்று தொலைநோக்கோடு சிந்தித்தவர் தமிழக முதல்வர் அண்ணா. அவரைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக முதல் முறையாக ஆட்சியில் அமர்ந்த உடனேயே அதைச் செயல்படுத்தியவர் கலைஞர் மு.கருணாநிதி.
கலைஞரின் எடிட்டிங்
தமிழ்த்தாய் வாழ்த்துக்கென பல பாடல்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளையின் `நீராரும் கடலுடுத்த’ எனத் தொடங்கும் பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதிலும் ஐந்து வரிகளை நீக்கிவிட்டு, 1970இல் தமிழ்நாடு அரசின் வாழ்த்துப் பாடலாக இதை அறிவித்ததுடன், பாடலுக்கு இசையமைப்பதற்காக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனையும் ஒருங்கிணைப்பாளர்களாக இயக்குநர்கள் கிருஷ்ணன் – பஞ்சு ஆகியோரையும் நியமித்தார் கலைஞர். எப்போதுமே அடுத்தவரின் துறையில் ஆதிக்கம் செலுத்தாதவரான கலைஞர், தமிழ்த்தாய் வாழ்த்து எப்படி வரவேண்டும் என்பதற்கு ஒரேயொரு கண்டிஷன்தான் போட்டார். “தேசிய அளவில் `ஜன கணமன’ எனத் தொடங்கும் தேசிய கீதம் எப்படி மதிக்கப்படுகிறதோ அப்படி மாநில அளவில் போற்றப்படுவதாக இந்தப் பாடலின் இசை அமைய வேண்டும்..” என்பதுதான் அந்த கண்டிஷன்.
21 மெட்டுகள்!
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசை அமைத்த தருணங்களை மெல்லிசை மன்னர் பதிவு செய்துள்ளார். “தமிழ்த்தாய் வாழ்த்துக்காக 21 மெட்டுகளைப் போட்டேன். அதிலிருந்து ஒரு மெட்டைத் தேர்ந்தெடுத்தார் கலைஞர். இன்று நாம் கேட்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒலிப்பது அந்த ட்யூனில்தான். 21 மெட்டுகளையும் பொறுமையோடு கேட்டுவிட்டு, கலைஞர் தேர்ந்தெடுத்தது நான் போட்ட முதல் மெட்டைத்தான்” என்றார் எம்.எஸ்.விஸ்வநாதன்.
மோகனம் எனும் ராகத்தில் அமைந்த தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை டி.எம்.சௌந்தரராஜனும் பி.சுசீலாவும் பாடினார்கள்.
இன்றைக்குத் தமிழ்நாட்டில் தேசிய கீதத்துக்குக் கொடுக்கப்படும் மரியாதையை நமது தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் கொடுக்க வேண்டும் என்னும் நிலையை உருவாக்கியவர் கலைஞர்.
`உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே’ என ஒவ்வொரு முறையும் நம்முடைய மொழியை வாழ்த்தும் வரிகளைப் பாடும்போதும், கூடவே இந்த வாழ்த்தை எழுதிய மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, பாடலைத் தெரிவு செய்த கலைஞர், இசையமைத்த எம்.எஸ்.வி., பாடிய டி.எம்.எஸ்., பி.சுசீலா ஆகியோரையும் வாழ்த்துவோம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT