Last Updated : 09 Aug, 2020 12:49 PM

1  

Published : 09 Aug 2020 12:49 PM
Last Updated : 09 Aug 2020 12:49 PM

ஊரடங்கில் இசைத் திருவிழா!

மியூசிக் கார்னிவல் நடத்தும் குழுவினர்

மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி, கர்நாடக இசைப் பாடகியின் யோசனையில் உருவான 'மியூசிக் கார்னிவல்' நிகழ்ச்சியை ஆகஸ்ட் 7 அன்று மாலை 6 மணிக்கு இணையத்தின் வழியாக தொடங்கி வைத்தார். ஆகஸ்ட் 9 வரை நடக்கும் இந்த இசைத் திருவிழாவில் இடம்பெறும் முக்கியமான நிகழ்வுகளைக் குறித்து நம்மிடையே பகிர்ந்து கொண்டார் கர்நாடக இசைப் பாடகி எஸ்.சௌம்யா.

"மியூசிக் கார்னிவலை கடந்த ஆண்டு தொடங்கினோம். பல்வேறு விதமான விளையாட்டுகளின் மூலமாக இசையை அணுகும் முயற்சிதான் இது. ஊரடங்கில் இந்தாண்டு எப்படி நடத்துவது என்று யோசித்த போது, இளைஞர்களின் முயற்சியால் இணையத்தின் வழியாக அது சாத்தியமானது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, எகிப்து, பிரான்ஸ், மலேசியா என உலகின் பல நாடுகளிலிருந்து இசை ஆர்வலர்கள் இந்த இசைத் திருவிழாவில் பங்கெடுத்து எங்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கின்றனர்.

இந்த விழாவை இணையத்தின் வழியாக வடிவமைத்ததில் குறிப்பாக எல்.ராமகிருஷ்ணன், பரத்சுந்தர், வித்யா கல்யாணராமன், அஸ்வத் நாராயணன், கே.காயத்ரி, பவ்யா ஹரி, பிருந்தா மாணிக்கவாசகன், சுபக்ஷி, ப்ரீத்தி ஆகியோரின் பங்களிப்பு அதிகம். அவர்களின் கூட்டு முயற்சியால்தான் இதை என்னால் செய்ய முடிந்தது.

இசை விளையாட்டுகள்

'கிராஸ்வேர்ட்' புதிர்களைப் போன்ற விளையாட்டுகள் நிறைய இதில் உண்டு. இசை குறித்த பல விவரங்களை இன்றைய இளைய தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் கவனத்தோடு இந்த விளையாட்டுகளை உருவாக்கி இருக்கிறோம். அதுதான் இந்த 'மியூசிக் கார்னிவலி'ன் சிறப்பு. மிகச் சிறந்த சாகித்யகர்த்தாக்களைப் பற்றிய தகவல்கள், அவர்களின் வரலாற்றுப் பின்னணி, ஒவ்வொரு விளையாட்டுகளையும் எப்படி விளையாட வேண்டும் போன்ற தகவல்களையும் எங்களின் இணைய முகவரியில் அளித்திருக்கிறோம்.

வரிசையாய்ப் பாடுவோம்

சரளி வரிசை, ஜண்டை வரிசை எல்லாமே நாம் ஸ்வரமாகத்தானே சொல்லிக் கொடுக்கிறோம்? இதற்கு ஓர் உருவம் கொடுக்கும் முயற்சியாக 18-ம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்தில் ஒருவர் பாடலாகவே எழுதி வைத்திருக்கிறார். நாங்கள் தமிழுக்குப் பொருந்தும் வகையில் ஸ்வரங்களுக்கு ஏற்ற வார்த்தைகளை போட்டு வைத்திருக்கிறோம். இதில் விலங்குகளைப் பற்றி, வடிவங்களைப் பற்றி எல்லாம் பாடல்களாக எழுதி குழந்தைகளைப் பாட வைத்திருக்கிறோம். இது குழந்தைகளுக்கு மட்டுமேயான நிகழ்ச்சி.

இசைத் தொடர்

தம்புரா ஸ்ருதியை மட்டுமே மையமாகக் கொண்டு பாடும் நிகழ்ச்சியை இளைஞர்களுக்காக ஏற்படுத்தி இருக்கிறோம். சில நிகழ்ச்சிகளை மட்டும் நேரடியாக இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் வகையில் அளிக்க உள்ளோம். அதில் ஒன்று, ஆகஸ்ட் 8 இரவு 8 மணிக்கு எங்களின் முகநூல் பக்கத்தில் நேரடியாக நடக்கவிருக்கும் அந்தாக்க்ஷரி நிகழ்ச்சி.

சீட்டுக்கட்டு விளையாட்டு

சீட்டுக்கட்டில் செட் சேர்ப்பது போல், இந்த விளையாட்டுக்கென்று பிரத்யேகமாக நாங்கள் கார்ட்களை டிசைன் செய்திருக்கிறோம். கார்ட் கேமில் செட் சேர்ப்பதை 'மெல்ட்' என்பார்கள். இந்த விளையாட்டை என் மகனோடு பொறியியல் படிக்கும் அவனுடைய நண்பர்கள் சேர்ந்து உருவாக்கியிருக்கின்றனர். கர்நாடக இசை நிகழ்ச்சிகளில் பரவலாக பாடப்படும் பாடல்களின் பெயர்கள், அந்தப் பாடல்களை எழுதியவர்களின் பெயர்கள், அந்தப் பாடல் அமைந்த ராகத்தின் பெயர்கள், தாளத்தின் பெயர்கள் ஒவ்வொரு சீட்டிலும் எழுதப்பட்டிருக்கும். சீட்டு விளையாட்டு போன்றே இதிலும் 'செட்' சேர்க்க வேண்டும். ஆனால், பொருத்தமான இசைச் சீட்டுகளைக் கொண்டு 'செட்' சேர்க்க வேண்டும். இது முழுக்க முழுக்கக் கணினி தொழில்நுட்பத்துடன் கூடிய மெய்நிகர் விளையாட்டு.

அமேஸ்

பல கதவுகளுடன் கூடிய சிறையில் நீங்கள் மாட்டிக் கொள்கிறீர்கள். ஒவ்வொரு கதவையும் திறப்பதற்கு இசை தொடர்பான ஒரு கேள்வி கேட்கப்படும். அதற்கு சரியான பதிலை சொன்னால்தான் அந்தக் கதவு திறக்கும். இப்படியொரு புதிர் விளையாட்டும் இசை ஆர்வலர்களுக்கு உண்டு.

போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசுகளும் காத்திருக்கின்றன. இறுதி நாள் நிகழ்ச்சியில் சுதா ரகுநாதனும் நித்யஸ்ரீ மகாதேவனும் பங்கெடுத்து சிறப்பிக்கின்றனர்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

'மியூசிக் கார்னிவல்' நிகழ்ச்சிகளை இந்த இணைய முகவரியில் காணலாம்: www.sukrtamcarnival.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x