Published : 07 Aug 2020 04:40 PM
Last Updated : 07 Aug 2020 04:40 PM
சமூக இடைவெளி, தனிமனித சுத்தம், வீட்டைவிட்டு வெளியே போகும்போது முகக் கவசம் அணிவது, வெளியே சென்றுவிட்டு வந்தால் கை, கால்களை சோப்பு போட்டு 20 நொடிகளுக்குக் குறைவில்லாமல் கழுவுவது இவையெல்லாம் ஏறக்குறைய குழந்தைகளுக்குக் கூடப் பழகிவிட்டது. இந்த 100-க்கும் மேற்பட்ட நாள்களில் கரோனா நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் பாடங்கள் இவை.
இவை எல்லாம் நோய் வராமல் நம்மைக் காத்துக்கொள்ள உதவும். ஒருவேளை நமக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டுவிட்டால், அதிலிருந்து நம்மைப் பூரணமாகக் குணப்படுத்துவதற்கு மருந்துகளின் உதவியோடு நம் மனத்தின் ஒத்துழைப்பும் அவசியம் என்கிறார் ‘நீ நர்ட்சரிங் இன்ஸ்டிடியூட்’ மூலமாக செம்மையான வாழ்க்கை முறைக்கான யோசனைகளை அளித்துவரும் திவ்யா கண்ணன்.
நோய்த்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள மருந்துகளைச் சாப்பிடும் அதே நேரத்தில் ஐந்து விதமான செயல்களை நாம் கடைப்பிடிப்பதன் மூலம் கரோனா நோய் என்றில்லை, எவ்விதமான நோயின் பிடியிலிருந்தும் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள
முடியும் என்று சொல்லும் திவ்யா, அதை யூடியூபின் வழியாகவும் பரப்பிவருகிறார்.
1. இந்த மருந்து என்னைக் குணப்படுத்தும் என்ற நம்பிக்கையோடு மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
2. நன்றாகத் தூங்க வேண்டும். தூக்கப் பிரச்சினையால் நிறையப் பேர் தவிக்கின்றனர். மனம் நிம்மதியாக இருந்தால்தான் ஆழ்ந்த உறக்கம் வரும். ஆழ்ந்த உறக்கம்தான், நம் உடலைப் பாதித்துள்ள நோயைக் குணமாக்கும் அருமருந்து. இதுவரை உழைத்தோம், இதோ இப்போது தற்காலிக ஓய்வில் இருக்கிறோம், நோய் பாதித்த நம்மை நம்முடைய குடும்பத்தினர் நன்றாக கவனித்துக் கொள்கின்றனரே… நமக்கு உதவும் குடும்பத்தினர், இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு உதவிய அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். மனதார நாம் அவர்களுக்கு நன்றி சொல்லும்போது, மனம் அமைதி அடையும். மனம் அமைதியடையும்போது, ஆழ்ந்த உறக்கம் வரும். நோய் விரைவாகக் குணமாகும்.
3. குடும்பத்தில், சமூகத்தில் உங்களின் இருப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உங்களுக்கு நீங்களே புரியவைக்க வேண்டும். நீங்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினராக இருக்கலாம். அல்லது, பள்ளி ஆசிரியராக இருக்கலாம்.
உங்களை நம்பி வாழும் குடும்பத்துக்கு, உங்களை நம்பிப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு நீங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் உணர்ந்து, இந்த நோயிலிருந்து மீண்டு வருவேன் என்னும் உறுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் வாழ்வதற்கான கடமையை, நோக்கத்தை அடிக்கடி உங்களுக்கு நீங்களே உணர்த்திக்கொள்ள வேண்டும். உங்களுக்கு இருக்கும் பொறுப்புகளே உங்களை நோயின் பிடியிலிருந்து விடுவிக்கும்.
4. நேர்மறை சிந்தனை என்றைக்குமே வெற்றியைத்தான் தரும். நோய்க்கு எதிராக மருந்துகள் போராடுவதோடு, நம் நேர்மறையான சிந்தனையும் சேர்ந்தால் நோயிலிருந்து எளிதில் மீண்டு வரலாம். நடக்கும் விஷயங்களில் எதுவெல்லாம் உங்களுக்குச் சாதகமாக இருக்கிறது என்பதைப் பார்த்து அதைப் பாராட்டுவது, அதற்குக் காரணமாக இருந்தவர்களை வாழ்த்துவது, நன்றி சொல்வது என்று உங்களின் சிந்தனையைக் கூர்மையாக்கும்போது, நோய் எளிதில் குணமாகும்.
5. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது பழமொழி மட்டும் அல்ல, அறிவியல்பூர்வமான உண்மையும் கூட. நீங்கள் ஒருமுறை சிரித்தால் அதன் பலன் 24 மணிநேரத்துக்கு உங்கள் உடம்புக்கு கிடைக்கும் என்பது மருத்துவ உண்மை. அதனால், சிரிப்புக்கு மீறிய வைத்தியம் இல்லை.
கரோனா பயத்தைப் போக்கும் காணொலியைக் காண: https://youtu.be/rCqodeCW1wA
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT