Published : 14 Sep 2015 10:40 AM
Last Updated : 14 Sep 2015 10:40 AM

ஜி.பி.சிப்பி 10

பழம்பெரும் இந்தி திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஜி.பி.சிப்பி (G.P.Sippy) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l பாகிஸ்தானின் சிந்து மாகாணம் ஹைதராபாத் நகரில் வசதியான சிந்தி குடும்பத்தில் (1914) பிறந்தார். முழு பெயர் கோபால்தாஸ் பரமானந்த் சிப்பி. கராச்சியில் கல்வி பயின்று சட்டத்தில் பட்டம் பெற்றார். வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கினார்.

l இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை அடுத்து, சொத்து சுகங்களை பாகிஸ்தானில் பறிகொடுத்துவிட்டு பம்பாயில் தஞ்சம் அடைந்தது குடும்பம். தரைவிரிப்பு விற்பனை, ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டவர் பிறகு கட்டுமானத் தொழிலைத் தொடங்கினார். பம்பாயில் முதல்முறையாக அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டியவர்களில் இவரும் ஒருவர்.

l இந்தி நடிகை நர்கிஸ் தத்துக்கு வீடு கட்டிக்கொடுத்த நேரத்தில் சினிமாவில் நடிக்கும் ஆசை ஏற்பட்டது. சில படங்களில் தலைகாட்டினார். தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, 1951-ல் முதல் முறையாக ‘சஸா’ படத்தை தயாரித்தார்.

l தொடர்ந்து பல திரைப்படங்களைத் தயாரித்தார். தான் தயாரிக்கும் திரைப்படங்களை இவரே இயக்கினார். 1955-ல் இவர் தயாரித்து இயக்கிய ‘மரைன் டிரைவ்’ வெற்றிப் படமாக அமைந்தது. அதே ஆண்டில் அடில்-இ-ஜஹாங்கீர் திரைப்படத்தைத் தயாரித்தார். ஸ்ரீமதி 420, சந்திரகாந்த், லைட் ஹவுஸ், அந்தாஸ் ஆகியவை இவர் இயக்கிய சிறந்த திரைப்படங்கள். சாகர், ஷான், மேரே சனம், பந்தன், த்ருஷ்ணா, ஹமேஷா ஆகியவை இவர் தயாரித்த பிரபல திரைப்படங்கள்.

l சில படங்கள் தோல்வியைத் தழுவி, நிதிப் பிரச்சினையை எதிர்கொண்டபோது, ‘திரை உலகை விட்டுவிட்டு லண்டனில் ஹோட்டலை கவனித்துக்கொண்டு செட்டில் ஆகிவிடலாம்’ என்றுகூட இவர் நினைத்தது உண்டு. சூப்பர்ஹிட் படங்கள் தந்த நம்பிக்கையால், திரைத்துறையில் தொடர்ந்து சாதனை படைத்தார்.

l இவரது அழைப்பை ஏற்று, லண்டனில் படித்த மகன் ரமேஷ் சிப்பி, படிப்பை விட்டுவிட்டு இவரோடு திரைப்படத் தயாரிப்பு வேலைகளில் இறங்கினார். 1972-ல் மகன் ரமேஷ் இயக்கத்தில் இவர் தயாரித்த ‘சீதா அவுர் கீதா’ திரைப்படம் வெற்றி பெற்றது.

l இதே கூட்டணியில் 1975-ல் வெளியான ‘ஷோலே’ திரைப்படம் தொடர்ந்து 286 வாரங்கள் ஓடி சாதனை படைத்தது. இந்தியாவில் அதுவரையிலான வர்த்தகத் திரைப்படங்களின் அனைத்து சாதனைகளையும் இப்படம் முறியடித்தது.

l இதில் நடித்த அமிதாப்பச்சன், தர்மேந்திரா, சஞ்சீவ் குமார், அம்ஜத்கான், ஹேமமாலினி அனைவரையும் மிகப் பெரிய ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தியது. இந்தியாவில் அதிக நாள் ஓடிய படம் என்ற சாதனையை பல ஆண்டுகளுக்கு ‘ஷோலே’ தக்கவைத்திருந்தது.

l மும்பையில் 2000-ல் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார். பிலிம்பேர் விருதுகளை பலமுறை பெற்றுள்ளார். திரைப்பட, தொலைக்காட்சித் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக 4 முறை பதவி வகித்துள்ளார்.

l அரை நூற்றாண்டு காலமாக பாலிவுட்டின் முடிசூடா மன்னனாக கோலோச்சிய ஜி.பி.சிப்பி 93-வது வயதில் (2007) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x