Last Updated : 01 Aug, 2020 02:02 PM

 

Published : 01 Aug 2020 02:02 PM
Last Updated : 01 Aug 2020 02:02 PM

சர்வதேச தரத்தில் வயலின் உருவாக்கும் இந்தியர்கள்!

ஜெர்மனி, இத்தாலியில் மட்டுமே விளையும் மேப்பில் மரங்களிலிருந்து தயாரிக்கப்படும் ஜெர்மானிய வயலின்கள் உலகத்தரம் வாய்ந்தவை. இதன் தரத்தைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சிம்பொனி இசையை வாசிக்கும் உலகின் தலைசிறந்த பத்து குழுக்களில் இருக்கும் கலைஞர்கள் வாசிப்பது இந்த ரகத்தில் அமைந்த வயலின்களைத்தான்!

இப்படிப்பட்ட வயலின்களுக்கு இணையான தரத்தில் இந்தியாவிலேயே வயலினைத் தயாரித்து அதைவிடக் குறைந்த விலைக்கு உலக நாடுகளுக்கு ஏற்றுமதியே செய்ய முடியும். அதற்காக, லால்குடி அறக்கட்டளை, உலகின் தலைசிறந்த வயலின் உருவாக்கும் கலைஞர்களில் ஒருவரான ஜேம்ஸ் விம்மரைக் கொண்டே, பயிற்சிப் பட்டறைகளை ஐந்து ஆண்டுகளாக நடத்தியது. “இதில் தேர்வான கலைஞர்களின்மூலம் தரமான வயலினை உருவாக்கும் கலைஞர்களை கணிசமாக உருவாக்கி, நாட்டுக்குக் கணிசமான அளவுக்கு அந்நியச் செலாவணியையும் கொண்டுவர முடியும். இதற்கு அரசாங்கம், இந்தக் கலைஞர்களுக்கு வட்டியில்லா கடன் உதவி அளிக்க வேண்டும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்காமல் இருப்பது போன்றவற்றைச் செய்யலாம். தரமான வயலின் தயாரிப்புகளால் உலக அரங்கில் இந்தியாவின் புகழ் பரவும்” என்கிறார் லால்குடி கிருஷ்ணன்.

பாரம்பரியமான ஜெர்மானிய கைவினைக் கலையோடு வயலின் உருவாக்கும் கலைஞர்கள் நம்மிடம் பேசியதன் தொகுப்பு:

சத்தியநாராயணன்

(இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான் இசைப் பள்ளியில் இசைப் பயிற்றுநர்)

எங்கள் குடும்பத்தில் பலரும் இசைத் துறையில் இருக்கின்றனர். என் தந்தை அப்பாராவ், ஷெனாய் வாத்தியக் கலைஞர். திரைத் துறையில் ஐம்பது ஆண்டுகளாக பல முன்னணி இசையமைப்பாளர்களிடம் ஷெனாய் வாசித்திருப்பவர். எனக்குத் திரைத் துறையில் 35 ஆண்டு அனுபவம் உண்டு. என் அனுபவத்தில் இசைத் துறையில் ஒரு புரட்சி என்றே லால்குடி அறக்கட்டளையின் இந்தப் பயிற்சிப் பட்டறையைச் சொல்லலாம்.

எதிர்காலத்தில் தரமான வயலினை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக அதே தரத்தில் வயலினை ஏற்றுமதியே செய்யலாம். எங்களிடம் இருக்கும் வயலின் பழுது நீக்கும் கருவிகளை இந்தியாவில் எங்குமே பார்க்க முடியாது. இந்த ‘டூல் கிட்’டையும் எங்களுக்கு அளித்திருக்கிறது லால்குடி அறக்கட்டளை.

அங்கியுடன் முரளி, வினய்

முரளி

எனக்கு வயலினைப் பழுது பார்ப்பதிலும் செய்வதிலும் 40 ஆண்டு அனுபவம் இருக்கிறது. 1982-லேயே ஜெர்மன், அமெரிக்காவிலிருந்து வெளிவந்த புத்தகங்களின் வழியாக வயலின் குறித்த அறிவை வளர்த்துக்கொண்டேன். ஜேம்ஸ் விம்மரின் நுட்பங்களுடன் கூடிய பயிற்சி முறை, இன்னமும் தொழில் நேர்த்தியுடன் அந்தக் கலையை அணுகும் உக்தியை எனக்குக் கற்றுத் தந்திருக்கிறது. லால்குடி அறக்கட்டளைக்கு இசை உலகமே கடமைப்பட்டிருக்கிறது.

வினய்

நான் எட்டாம் வகுப்புப் படித்தபோதே வயலின் செய்யத் தொடங்கிவிட்டேன். நான் இத்தனை காலம் வயலின் செய்துவந்த விதத்தோடு, விம்மரின் ஜெர்மானிய கலை நுட்பமும் சேர்ந்திருக்கிறது. ஜெர்மானிய கைவினைக் கலைஞர்களால் உண்டாக்கப்படும் வயலின்களுக்குத் தரத்தில் சற்றும் குறைவில்லாத வயலின்களை நம்மாலும் உண்டாக்க முடியும் என்பது எவ்வளவு பெரிய வளம். தற்போது நாங்கள் கேரளத்தில் இந்தப் பாரம்பரியத்தைப் பரப்பிவருகிறோம். இசைத் துறையில் லால்குடி அறக்கட்டளை நிகழ்த்தியிருக்கும் மகத்தான சாதனை இது.

ரெஞ்சித்

தச்சுப் பணி செய்துவந்தேன். அதோடு வயலின் கொஞ்சம் வாசிப்பேன். நான் ஒரு வயலினை உருவாக்கியிருந்தேன். அதன் படத்தை லால்குடி கிருஷ்ணனுக்கு அனுப்பியிருந்தேன். அப்போது செம்பை திருவிழாவில் கச்சேரி நடத்துவதற்கு லால்குடி கிருஷ்ணன் வந்திருந்தார். நான் செய்திருந்த வயலினை அவரிடம் காண்பித்தேன். உடனே, அவர் லால்குடி அறக்கட்டளை நடத்தும் வயலின் பழுதுபார்க்கும் மற்றும் ஜெர்மானிய கைவினைத் திறத்துடன் வயலினை உருவாக்கும் பயிற்சிப் பட்டறையில் பங்கெடுக்கும் வாய்ப்பை எனக்கு அளித்தார். என்னைப் பொறுத்தவரையில் இந்த வாய்ப்பும் ஜேம்ஸ் விம்மரின் பயிற்சியும் இந்திய வயலின் இசை மரபிலேயே ஒரு புதிய பாதை என்றுதான் சொல்வேன். அதில் நான் பயணம் செய்துகொண்டிருப்பதை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x