Published : 31 Jul 2020 11:54 AM
Last Updated : 31 Jul 2020 11:54 AM

கொங்கு தேன்- 12: சினிமா ‘கொட்டாயி’

சினிமாங்கற மூணெழுத்து எம் மூளையில எப்ப பதிவாச்சுன்னு யோசிச்சா, எங்க ஊர்ல பொன்னுசாமிக்கவுண்டர்னு ஒருத்தர் கோயமுத்தூர், சிங்காநல்லூர்னு பல ஊர்கள்ல ஓடினதுக்கப்புறம் ‘தேர்டு ரன்’ படங்களை வாங்கியாந்து சூலூர் மாதிரி ஊர்கள்ல திரையிடக் குடுப்பாரு.

எனக்கு அப்ப 8 வயசு இருக்கும். ஊருக்கு நடுவால இருக்கற அவரு வீட்டுக்குப் போவேன். ஆசாரத்தையொட்டிய அட்டாலிப் பலகைகள்ளே ‘ராமராஜ்யம்’, ‘சந்திரஹாரம்’,‘மாயக்குதிரை’ன்னு படங்களோட போஸ்டரை ஒட்டி வச்சிருப்பாரு.

அந்த போஸ்டர்ல இருக்கிற நடிகர், நடிகைகள் தேவலோகத்தில இருப்பாங்கன்னு நினைக்கிற அளவுக்கு, ராஜ உடைகள், அழகு தோற்றம், அப்படியே மனசில அப்பிக்கும்.

எங்க அத்தை மக பேச்சியம்மாளை பக்கத்து ஊர் காங்கயம்பாளையத்துக்கு கண்ணாலம் (கல்யாணம்) கட்டிக் குடுத்திருந்தது. மாப்பிள்ளை பேரு சின்னையன். பொண்ணு மாப்பிள்ளைய ஒரு நாள் எங்க வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டிருந்தோம். ஆச்சு. வந்தாங்க. சாப்பிட்டு முடிச்சாச்சு.

‘‘ஏங்கண்ணு! சினிமாவுக்கு போலாமா?’’ சின்னையன் கேட்டாரு.

அப்படி அதுக்கு முன்னால யாரும் எங்கிட்ட கேட்டதுமில்லே. சினிமா பாக்க போலாம்னு நெனைப்பும் வந்ததில்லை.

உடம்புக்குள்ள ‘குபீர்’ன்னு புது ரத்தம் பாஞ்ச மாதிரி ஒரு சிலிர்ப்பு. வண்டி பூட்டி, பொண்ணு, மாப்பிள்ளை - எங்கக்கா, நான் எல்லோரும் சூலூர் தியேட்டர் ராத்திரி 2-வது ஆட்டத்துக்கு (செகண்ட் ஷோ) போனோம்.

மாட்டு வண்டி, சைக்கிள்ல் படம் பாக்க யாரு வந்தாலும் ‘க்யூ’வில நின்னு டிக்கெட் வாங்க வேண்டியதில்லை. மெயின்கேட்டை திறந்து உட்ருவாங்க. உள்ளே போனா டிக்கெட் குடுத்திருவாங்க.

சூலூர் ஷண்முக தியேட்டர்

கொட்டாயிக்குள்ளே நல்ல கூட்டம். திரையிலிருந்து 10 அடி தூரத்தில இரும்புப்‘படல்’ (Fence) ஒண்ணை நட்டு வச்சிருந்தாங்க. சனங்க அந்த வேலிய தாண்டிப் போனா திரைப்படத்தைப் பாக்க முடியாது. எனக்கு அந்தப் ‘படல்’ ஓரந்தான் எடம் கிடைச்சுது. அங்கே உக்காந்து அண்ணாந்துதான் படத்தை பாக்க முடிஞ்சுது.

படம் ஆரம்பிச்சாங்க. முதல் சீன்ல ஏழெட்டு கருப்புக் குதிரைங்க. ஆக்ரோஷமா எங்களைப் பார்த்து வந்திட்டிருந்தது. பாய்ஞ்சு வந்த குதிரைங்க எங்கே எம்மேல குதிச்சிருமோன்னு ‘அய்யோ’ன்னு கத்தீட்டு குப்புறப்படுத்திட்டேன். குதிரைங்க என்னை முதிக்கலே. எப்படி என்னை தாண்டிப் போச்சுன்னு தெரியலே.

‘சந்திரலேகா’ -படத்தின் முதல் காட்சிய முதன்முதலா திரையில் பார்த்த அனுபவம் இது.

70 வருஷத்துக்கு முன்னாடி, ‘பீடி புடிக்கிறது, சாராயங்குடிக்கறது, சீட்டாடறது எல்லாம் ‘தொருசுக’தான் (கெட்ட பசங்க) செய்யும்; அது எல்லாம் என்னிக்கும் உருப்படாது’ங்கறது சனங்களோட நம்பிக்கை. இப்ப அதோட சினிமாவையும் சேர்த்துக்கலாம். ‘சினிமா பார்த்தா புள்ளைங்க கெட்டுப் போகும்!’ங்கறது எல்லார் மனசிலயும் ஆழமா பதிஞ்சிருக்கற விஷயம்.

பக்கத்து வீட்டு சுப்பையா அண்ணன் பல தடவை ‘ஹரிதாஸ்’ படம் பார்த்துட்டு வந்து தியாகராஜ பாகவதரோட அழகையும், அவர் பாட்டுப்பாடற விதத்தையும் கதை, கதையா சொல்லுவாரு. பாகவதர் கிராப், சலூன்ல போய் ‘எக்ஸ்ட்ரா’ காசு குடுத்து வெட்டிக்குவாங்க.

சில்க் ஜிப்பா போட்டு, விசிறி மடிப்பு அங்கவஸ்திரம் தோள்ள மடிச்சுப் போட்டு, ‘போட்டோ’ எடுத்தாந்த்து வீட்ல மாட்டிக்குவாங்க.

பாகவதர் ரசிகர்கள் (கிராப்)

எப்பவாச்சும் ஒரு வாட்டி மாட்டு வண்டில, மத்தாளம் கொட்டீட்டு ரெண்டு பக்கமும் போஸ்டர் ஒட்டின ஒத்தை மாட்டு வண்டி ஊருக்குள்ள ஒரு ரவுண்ட் வரும். அதில இருக்கிற ஆள், ரோஸ்கலர், பச்சைக்கலர், மஞ்சக்கலர்ல பராசக்தி, கூண்டுக்கிளி, தேவதாஸ் படங்களோட ‘பிட் நோட்டீசை’ கோயில்ல சுண்டல் குடுக்கற மாதிரி பசங்க, புள்ளைங்களுக்கு குடுப்பாரு. முண்டியடிச்சுட்டு முதல்ல போய் நோட்டீஸ் வாங்கறது ஒரு கெத்து.

முண்டச்சி பெத்தது மூணு காசுக்கு ஆகாம போச்சுன்னு ஊர் பேசக்கூடாதுங்கறதுக்காக, எங்கம்மா என்னை பொத்திப் பொத்தி வளர்த்தாங்க. சினிமாவுக்கு ஒரு வாட்டி போயே ஆகோணும்னு நான் கொடைஞ்சு எடுத்ததனால, தீபாவளி, பொங்கல் 2 நாளு மாட்னி காட்சி பார்த்திட்டு பொழுது உழுகறதுக்குள்ளே ஊடு வந்து சேந்தரோணும்ங்கிற கண்டீஷன்ல ஒத்துக்கிட்டாங்க.

சினிமா பாக்க உட்டதே பெரிய விஷயம். அதுக்கு காசு கேட்டா அம்மா திட்டுவாங்கன்னு - அந்தக் காலத்தில ‘வொயிட் லகான்’ கோழிங்க கண்டுபிடிச்சிருந்தாங்க. அடை காக்காம தினம் முட்டை வச்சுட்டே இருக்கற சாதி. ஒரு சேவல், 2 கோழி வாங்கியாந்து பொடக்காளில கூடு கட்டி வளர்த்தேன். வாரக் கடைசியில 14 முட்டைகளை மஞ்சப்பைல மணல் ரொப்பி, முட்டைகளை அதுல அலுங்காம வச்சு, சூலூர் பாய் பிரியாணி கடைல கொண்டு போய் முட்டை 4 அணாவுக்கு வித்து காசு சேர்த்து வச்சிருப்பேன்.

ஏ.பி.என் விழாவில்

சூலூர் ஷண்முகதேவி தியேட்டர் 1940-களிலேயே ‘பர்மனண்ட்’டா’ கட்டப்பட்டது. டிசைன் போட்ட இரும்பு ‘கேட்’டு, அதை ஒட்டி தூண்கள்ளே ‘டூம்’ லைட் இருக்கும். மெயின் கேட்லருந்து தியேட்டர் தள்ளி இருக்கும். விசாலமா இருக்கற இடைவெளியில 10, 20 மாட்டு வண்டிக, 100க்கும் மேல மோட்டார் சைக்கிள்க நிறுத்தலாம். சைக்கிள் ஸ்டேண்ட் ஒட்டி கழிப்பறை. ஒண்ணுக்கு ஒரே சமயத்தில் 50 பேர் போற அளவுக்கு கட்டி உட்டிருந்தாங்க. என்னதான் ‘டெட்டால்’ தெளிச்சாṁலும் அதை மீறி ‘மள்ளு’ (மூத்திரம்) நாத்தம் ‘கொடலை’ புடுங்கும்.

விசேஷ நாள்ளே 1500 பேருக்கு குறையாம படம் பார்ப்பாங்க. அத்தனை பேரை அந்த கழிப்பறை ஒரே சமயத்தில சமாளிக்க முடியாது. உள்ளே ஒருத்தன் ‘ஒண்ணு’க்குப் போனா, அவனை முட்டீட்டு அவன் பின்னால ஒருத்தன் நின்னிட்டிருப்பான். அடுத்தவன் காத்திட்டிருப்பான். முன்னாடி ‘ஒண்ணு’க்குப் போனவன், நெறைய தண்ணி குடிச்சிருப்பான். எருதுகள் ‘மள்ளு’ மள்ளற மாதிரி (மூத்தரம் பேயற மாதிரி)‘தொர,தொர’ன்னு இவன் பேய்ஞ்சுகிட்டே (ஊத்தீட்டே) இருக்கான். பின்னாடி நிக்கறவனுக்கு அவசரம். ‘சீக்கிரம் வாடா!’ன்னு கத்துவான்.

இப்பிடி உள்ளே 100 பேர் போனா மிச்சம் 500 பேர் எங்க போவாங்க? வெளிச்சுவத்தில அடிச்சிட்டு போயிருவாங்க. 4 நாள் கழிச்சு பாத்தா தரையில வெள்ளை, வெள்ளையா கோடு. அதாவது சிறுநீரில் இருந்த கால்ஷியம் கோடு கோடுகளாக சுவத்திலயும் தரையிலயும் காய்ஞ்சு தெரியும்.

ஏபிஎன் பேச்சு

தியேட்டருக்குள்ளே நுழையறதுக்கு முன்னாடி, 5 அடிக்கு 10 அடி அகலத்தில கண்ணாடி பிரேம் போட்ட ‘ஷோகேஸ்’ அதில ‘சந்திரலேகா’ படத்தில் நாய்களை புடிச்சிட்டு ஆக்ரோஷமா வில்லன் ரஞ்சன் வர்ற போட்டோ, சர்க்கஸ் கூடாரத்துக்குள்ளே, மேலே தூரியாட்டமா கயித்து மேல நின்னு குதிச்சு அந்தர்பல்டி அடிச்சு- எதித்த தூரில நிக்கிற ஆளுக புடிச்சு தூக்கற சீன்ல டி.ஆர்.ராஜகுமாரி நடிக்கிற போட்டோ. எம்.கே.ராதாவும் ரஞ்சனும் கத்தி சண்டை போடற படம். ‘முரசு’ நடனம் படம். 40, 50 டிரம்கள் மேல பொண்ணுக டான்ஸ் ஆடற மாதிரி போட்டோ.

இதையெல்லாம் பாக்கறப்போ, ‘நாம உயிரோட இருக்கறோம். படம் பாக்க வந்திருக்கறோம்!’ங்கற நெனைப்பே இருக்காது. ‘நாமதான் ராதா, நாமதான் சர்க்கஸ்ல குட்டிக்கரணம் போடறோம்!’ன்னு அந்த சீனுக்குள்ளேயே போயிருவோம்.

தியேட்டர்ல தரை டிக்கட்ல - சிமெண்ட்ல மெழுக்கி விட்ட தரைப்பகுதில சாதாரணமா 200 பேர் உட்காரலாம்.

விசேஷ நாள்ள கணக்கில்லாம டிக்கட் குடுத்திட்டே இருப்பாங்க. ரெண்டரை அணாதானே? 15 பைசா டிக்கட்.

வெத்தலை பாக்குப் போட்டவங்க துப்பறதுக்கு ஒரு தகர டப்பா 3 அடி விட்டத்துக்கு தரையில இருக்கும். இவன் எச்சில் துப்ப, ‘டேய் மாப்ளே’ன்னு குரல் குடுத்தா அவன் டப்பாவை ஒதைச்சு உடுவான். அது வழுக்கீட்டு இவன்கிட்ட வரும். இவன் துப்பி அடுத்தவனுக்கு ஒதைச்சு விடுவான். இப்படி அல்லாடின டப்பா, கூட்டம் ரொம்பினதும் நகர முடியாது.

அந்த டப்பா விளிம்பில ரெண்டு பேர் உட்கார்ந்து படம் பார்ப்பாங்க. ஒருத்தன் மடில ஒருத்தன்னு நெருக்கடியடிச்சு 1000 பேருக்கு மேல் உட்கார்ந்திருப்பாங்க. தரை டிக்கட் கதவு 6 பட்டையில இருக்கும். மடிச்சு, மடிச்சு விட்டிருப்பாங்க. லேட்டா வர்றவன், கீழே இருக்கிற மடிப்பை திறந்து உள்ளே நுழைவான். ‘மேட்னி ஷோ’ங்கறதினால, சூர்ய வெளிச்சம் கதவு வழியா புகுந்து திரையில அடிக்கும். படம் ஒண்ணும் தெரியாது. ‘டேய்ய்ய்..’ன்னு அத்தனை பேரும் போடற கூச்சல்ல -நல்ல வெயில்ல வந்தவனுக்கு கும்மிருட்டில கண்ணு தெரியாது. பின்னாடி வர்றவங்க ‘போடா உள்ளே’ன்னு தள்ளுனா, 4 பேர் ‘பொத்து, பொத்து’ன்னு கூட்டத்தில உட்கார்ந்திருக்கறவங்க மேல உழுவாங்க.

ஏ.பி.என்.,னுக்கு பாராட்டு

கோயமுத்தூர்காரங்களுக்கு கடலை மாவை விட்டா வேற எதிலயும் பலகாரம் பண்ண தெரியாது. காரபூந்தி கடலை மாவுலதான், லட்டு கடலைமாவுலதான், மைசூர்பா கடலைமாவுலதான். - பஜ்ஜி, பக்கோடா எல்லாமே கடலை மாவுலதான். இப்படி இதையெல்லாம் விஷேச நாள்ளே அத்தனை பயல்களும் வெரைட்டியா மேய்ஞ்சுட்டு வந்து 1000 பேர் சேர்ந்த மாதிரி ‘பாம்’ போட்டாங்கன்னா (கெட்ட வாயு- கேஸ்) தியேட்டருக்குள்ளே எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பாருங்க. இதில குயில் பீடி, மணி பீடி, நரி பீடி, மல்லிசேரி, மஜித் பீடின்னு ஆளாளுக்கு புடிச்சு உட்டா உள்ளே ஒரே புகைமண்டலம். பேய் நாத்தத்தில மூச்சு முட்டும்.

எங்க காலத்தில ‘சிங்கிள் புரொஜக்டர்’. அதாவது ஒரு ரீல் முடிஞ்சா அதை கழட்டீட்டு அடுத்த ரீல் மாட்ட 5 நிமிஷம் ஆகும். இந்த இடைவெளியில ‘ஸ்லைட்’ போடுவாங்க. ‘கணவனே கண்கண்ட தெய்வம்’, ‘மந்திரி குமாரி’, ‘மனோகரா’, ‘மலைக்கள்ளன்’-னு ஸ்லைட்டுகள் மாத்தி, மாத்தி போடுவாங்க.

இடைவெளியில பொடிப்பசங்க, ‘வடை, மிக்சர், டீயோ..’ன்னு கூவி உள்ளே விக்க ஆரம்பிச்சுடுவாங்க.

ரெண்டே கால் மணி நேரம் படம்னா, ஒண்ணரை மணி தாண்டினதும் இடைவேளை விடுவாங்க. 200 பேர் எடத்துல 1000 பேர் திணிச்சிட்டு உட்கார்ந்திருக்கறோம். எழுந்து போனா திரும்ப எடம் கிடைக்காது. அமுக்கிட்டு படம் முடியற வரைக்கும் உட்கார்ந்திருக்கறதை தவிர வேற வழியில்லை.

மணிவண்ணனுடன் இனியொரு சுதந்திரம் ஷூட்டங்கில்

இப்படியெல்லாம் துன்பப்பட்டு, நரகத்தை அனுபவிச்சாலும் படம் முடிஞ்சு வெளியேறும்போது தொண்டைக் குழிக்குள்ள ஒரு ஏக்கம் வரும். ‘இனி எப்ப இதுக்குள்ளே வரப்போறமோ?’

வேகாத வெயில்ல வெறுங்கால்ல காடுகரையெல்லாம் சுத்தி பாடுபட்டு கருவழிஞ்சு போன சனங்களுக்கு 20 பைசா, 30 பைசாவுல கிடைச்ச ஒரே பொழுது போக்கு சினிமாதானே? இந்த சினிமாவுமில்லேன்னா, பீடி புடிச்சு, சாராயம் குடிச்சே சனங்க அழிஞ்சு போயிருக்கும்.

15 பைசா டிக்கட்ல சூலூர் ஷண்முகாதேவி தியேட்டர்ல படம் பார்த்தவன் அடுத்த 15 வருஷத்தில அதே தியேட்டர்ல, ‘அம்மன் தாலி’-ங்கற நாடகம் போட்டேன். எஸ்.எஸ்.மணியம் கிளாத் ஸ்டோர்ன்னு சூலூர்ல ஒருத்தர் ஜவுளிக்கடை வச்சிருந்தாரு. அதிலேயே டெய்லர் ஒருத்தரும் இருப்பாரு. நானும் எங்கக்காவும், அந்தக்கடையில துணி எடுத்துக்குடுத்து அந்த டெய்லர்கிட்டயே தச்சு வாங்கிக்குவோம்.

அந்த மணியம் தன்னோட 7 வயசுப் பையனை கூட்டியாந்து தன்னோட மடில உட்கார வச்சு என் நாடகம் பார்த்தாராம்.

அந்தப் பையன்தான் பெரியவனாகி -டைரக்டராகி, ‘வீட்டிலே ராமன் வெளியிலே கிருஷ்ணன்’, ‘குவா, குவா வாத்துக்கள்’, ‘இனி ஒரு சுதந்திரம்’னு - என்னோட 3 படங்களை டைரக்ட் பண்ணினார். அவர்தான் தம்பி மணிவண்ணன்.

கொங்கு மண்ணின் மொழிய, இயல்பா பேச வச்சு -நம்ம ஊர் மக்களோடயே வாழற மாதிரி நடிகர்களை நடிக்கவச்ச அற்புதக்கலைஞன், அற்பாயுளிலேயே வந்த வேகத்தில் போய் விட்டார்.

இனியொரு சுதந்திரம்- ஒரு காட்சியில்

1970 -மே மாதம் ‘திருமலை தென்குமரி’ என்ற படத்தை ஏ.பி.நாகராஜன் அவர்கள் கன்யாகுமரி-மதுரை-குருவாயூர்- மைசூர்- திருத்தணி- திருப்பதி என ஆறு ஊர்களுக்கு படக்குழுவை அழைத்துச் சென்று ஒரு மாதத்தில் படத்தை எடுத்து முடித்தார்.

மதுரையிலிருந்து குருவாயூர் கார், பஸ்களில் படக்குழுவினர் பயணித்த போது -சூலூரில் ஏ.பி.என்., அவர்களுக்கு - தில்லானா மோகனாம்பாள் - படத்திற்கு தேசிய விருது பெற்றதற்கு ஊர் மக்கள் பாராட்டு விழா ஷண்முகா தியேட்டரில் ஏற்பாடு செய்திருந்தனர்.

சூலூர் பெரியவர் எஸ்.ஆர்.எஸ்., தலைமை தாங்கினார். ஏற்புரை நிகழ்த்திய ஏ.பி.என்., ‘சிவகுமார் நம்ம ஊர்ப்பிள்ளை. நல்ல பிள்ளை. நீங்கள் சீக்கிரம் ஒரு பெண் பாருங்கள். நானே வந்து திருமணத்தை நடத்தி வைக்கிறேன்!’ என்று சொல்லி, வாக்களித்தபடி, 1974 -ஜூலை 1-ம் தேதி அவினாசி தண்டுக்காரன் பாளையதில் நடந்த கல்யாணத்திற்கு அதிகாலையிலேயே வந்து எங்களை ஆசீர்வதித்தார்..

சுவைப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x