Last Updated : 28 Jul, 2020 06:14 PM

1  

Published : 28 Jul 2020 06:14 PM
Last Updated : 28 Jul 2020 06:14 PM

கரையான் புற்றெடுத்தால் அது சாமி வீடு!- புது வீடு கட்டிக் குடியேறும் புலையர் பழங்குடிகள்

புற்று வந்ததால் காலி செய்யப்பட்ட வீடு.

“கிராமப்புறங்களில், ‘கரையான் புற்றெடுக்க கருநாகம் குடியேற’ என்றொரு பழமொழி உண்டு. கருநாகம் குடியேறும்போது கரையான்கள் வேறு பகுதிக்குச் சென்றுவிடுமோ என்னவோ தெரியாது. ஆனால், புலையர் பழங்குடியினரைப் பொறுத்தவரை கரையான் புற்று கட்டிய வீட்டைச் சாமி வீடு என்று சொல்லி அந்த வீட்டைவிட்டு வெளியேறி புதிய வீடு கட்டிக்கொள்வார்கள். இன்றும் தொடரும் வழக்கம் இது” என்கிறார் பழங்குடியினர் செயற்பாட்டாளர் தன்ராஜ்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ளடங்கியிருக்கும் ஆனைமலை, திருமூர்த்திமலை மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் புலையர் பழங்குடியினர் பல தலைமுறைகளாக வாழ்கின்றனர். இவ்விரண்டு மாவட்டங்களிலும் சுமார் 30 கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறார்கள். இது தவிர திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியிலும் இவர்கள் வசிக்கிறார்கள்.

பொள்ளாச்சி அருகே உள்ள காட்டுப்பட்டி கிராமத்தில் மொத்தம் 48 புலையர் குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் உள்ளூரிலேயே கிடைக்கும் கற்கள், மண் மூங்கில், கம்பு பயன்படுத்தியே வீடுகளை எழுப்பிக் கொள்கிறார்கள். முந்தைய தலைமுறையினர் கொன்றை மரக்கம்புகளை வைத்தும் ஓடைப்புல், ஈச்சம்புல் சக்கனைப்புல் எனப் பல்வேறு புற்கள் வகைகளைப் பயன்படுத்தித்தான் கூரை அமைப்பார்களாம். இப்போது கூரைக்கு ஓடு மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகளைப் பயன்படுத்துகிறார்கள். அவரவர் வீடுகளைப் பாரம்பரிய முறைப்படி அவரவர் குடும்பத்தினரே கட்டிக்கொள்கிறார்கள். ஆண்கள் இல்லாத வீடுகளில் உறவினர்கள் உதவுவார்கள். இப்படிக் கஷ்டப்பட்டு, சுயமாக உருவாக்கிய வீடுகளில் கரையான் புற்றெடுத்தால், அவற்றைக் கைவிட்டு புதிய வீடுகளைக் கட்டிக்கொள்கிறார்கள் புலையர்கள்.

அப்படித்தான் காட்டுப்பட்டியில் 5 வீடுகளில் கரையான் புற்றுகள் உருவானதால், அவை காலியாக இருக்கின்றன. காலியான இரண்டு வீடுகளில் கரையான் புற்றுகளில் மஞ்சள் பூசப்பட்டு, சிவப்புத் துணி கட்டி, பூ, பழம், பொட்டு தேங்காய் வைத்து வழிபாடு செய்யப்படும் நாட்டார் கோயிலாக மாறியுள்ளன.

பாரம்பரிய வீடு

இதுபற்றி இங்கே வசிக்கும் விஜயாவும் சரோஜாவும் நம்மிடம் பேசுகையில், “எங்க வீடுகளில் மாட்டுச்சாணம் கரைச்சு தரை மெழுகி சுத்தமா வச்சுக்குவோம். அப்படி செஞ்சாலும் வீடுகள்ல திடீர்னு கரையான் புற்று வந்துடும். அது எங்க குடும்பத்துக்கு ஆகாது. பெரியவங்க, குழந்தைகளுக்கு நோய் நொடி வரும்ங்கிறது மூத்தவங்க நம்பிக்கை. அதனால உடனடியா வெளியேறிடுவோம்.

புற்றில் பாம்போ, வேற பூச்சிகளோ குடி வந்துடும். அதையும் கொல்லக்கூடாது. அதெல்லாம் எங்க தெய்வம். புற்றுகளை மாரியாத்தா, காளியாத்தா, வைர பாட்டன், பூனாட்சி அம்மன்னு நினைச்சுக் கும்பிடுவோம். அதுக்காக முட்டை, தேங்காய், வாழையிலை போட்டுப் பொங்க வச்சு திருவிழா கொண்டாடறதும் உண்டு. சில பேர் சாமி வந்து, குறியும் சொல்லுவாங்க” என்றனர்.

காட்டுப்பட்டிக்கு அடுத்து 2 மைலில் உள்ளது மாவடப்பு. இங்கேயும் நான்கு வீடுகள் கரையான் புற்றெடுத்துக் காலியாக விடப்பட்டிருந்தன. “புற்று வளர்ந்த வீடுகள்ல கம்பு, ஓடு, சீட்டுன்னு புதிய வீடு கட்றதுக்குத் தேவைப்படற எந்தப் பொருளையும் எடுக்கவும் மாட்டோம். அதுதான் சாமிக்கு விடற முறை. புது வீடு கட்டும்போது நிலப்பிரச்சினையோ, வேறு பிரச்சினையோ யாரும் கிளப்ப மாட்டாங்க. வயசு வித்தியாசமில்லாம எல்லோரும் வேலை செய்வாங்க. அதனால ஒரு குழந்தைக்குகூட இங்க வீடு எப்படி கட்டணும்ங்கிற விவரம் நல்லாவே தெரியும்” என்றனர் மாவடப்பு மக்கள்.

இங்கு வசிக்கும் சடையன்-செல்வி தம்பதியர் நம்மிடம் பேசும்போது, “எங்களைப் பொறுத்தவரை வீடுங்கிறது ராத்திரியில தங்கி, தூங்கறதுக்குத்தான். எங்க ஆடு, மாடு, கோழிகளும் எங்க கூடவேதான் தூங்கும். வெள்ளாமை இருக்கும்போது விவசாயக் காட்டுல, மரத்துக்கு மேல நாங்க கட்டி இருக்கும் மாடம் (பரண்) வீட்டுலதான் தூங்குவோம். ராத்திரி முழுக்கக் காட்டு மிருகங்களைக் கண்காணிக்கிறதும் எங்களோட வேலைதான். நிலக்கடலை, ராகி, மக்காச்சோளம், தினை, வரகு பயிர் செய்யும்போது இரவு காவல் எங்களுக்கு அங்கதான். பெரும்பாலும் கணவனும் மனைவியாதான் எங்க போனாலும் போவோம்” என்றனர்.

இவர்கள் வாழ்நிலை குறித்து நம்மிடம் பேசிய பழங்குடிகள் செயற்பாட்டாளர் தன்ராஜ், “இவர்கள் வாழும் பகுதிகளை ஒட்டிய கேரளப் பகுதியில் புலையர்கள் பழங்குடிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தமிழகத்தில் பழங்குடியினர் பட்டியலிலிருந்து ஏனோ நீக்கப்பட்டுள்ளார்கள். இதற்காகக் கடந்த 44 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இவர்களின் வீட்டிற்கும், விவசாய நிலங்களுக்கும் பட்டா கிடையாது.

சாலை, மின்சாரம், மருத்துவம், போக்குவரத்து என அடிப்படை வசதிகள் இன்றிக் காடே தெய்வமாக வாழ்கின்றனர். காடுகளிலிருந்து தேன், கிழங்கு, மூலிகைகள் போன்ற சிறு வன மகசூல்களைச் சேகரிப்பதுடன், கேழ்வரகு, நிலக்கடலை, மக்காச்சோளம், பீன்ஸ் போன்றவற்றைப் பாரம்பரிய முறைப்படி விவசாயம் செய்து பாரம்பரிய முறைப்படி வாழ்ந்து வருகின்றனர்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x