Published : 24 Jul 2020 08:15 PM
Last Updated : 24 Jul 2020 08:15 PM
தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டால் பயனடைந்த சமூகத்தினருக்கே, இடப் பங்கீடு குறித்த எந்தப் புரிதலும் இல்லை என்று பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு வடமாவட்டங்களில் நடந்த தொடர் மறியல் போராட்டம், அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூடு, அதன் விளைவாகக் கிடைத்த மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான தனி இட ஒதுக்கீடு குறித்த வரலாற்றை, அதற்காகப் போராடிய வன்னியர் சமூகத்தினரே மறந்துவிட்டனர். இதனை நினைவுபடுத்தும் வகையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் ஒரு தொடர் எழுதி வருகிறார்.
'சுக்கா... மிளகா... சமூக நீதி?' என்ற தலைப்பில் அவர் எழுதிவரும் அந்தத் தொடர், வெறுமனே தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவின் இட ஒதுக்கீட்டு வரலாற்றையும் விளக்குகிறது. இதுவரையில் 44 அத்தியாயங்கள் எழுதியுள்ள மருத்துவர் ராமதாஸ், அந்தத் தொடர் இம்மாதத்துடன் நிறைவடையும் என்றும், அதனைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு அதில் இருந்து தேர்வு நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
10-ம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும், கல்லூரித் தேர்வுகளை நடத்துமாறு மாநில அரசை மத்திய அரசு நிர்பந்திக்கக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்திய மருத்துவர் ராமதாஸ், கட்சி நிர்வாகிகளுக்கு தேர்வு நடத்துவதில் மட்டும் உறுதியாக இருக்கிறார். விரைவில் தேர்வு வருகிறது, அடுத்த வாரம் தேர்வு, தயாராகிவிட்டீர்களா? என்று அவ்வப்போது முகநூல் வழியாகத் தொண்டர்களிடம் கேள்வி கேட்டபடி இருக்கிறார் மருத்துவர்.
இதுகுறித்து பாமக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
''மருத்துவர் ராமதாஸ் எழுதிவரும் தொடரானது, 'சமூக நீதியின் கட்டற்ற கலைக்களஞ்சியம்' என்று போற்றும் அளவுக்கு சமூக நீதி தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. எனவேதான், வாழ்க்கையில் நீங்கள் எத்தனையோ புத்தகங்களைப் படித்திருக்கலாம். ஆனால், சமூக நீதி வரலாற்றை முழுமையாக அறிந்துகொள்ள இத்தொடரைப் படிக்க வேண்டியது அவசியமாகும்.
அப்போதுதான் நம்மைச் சூழ்ந்துள்ள சமூக நீதி ஆபத்துகளை எதிர்த்துப் போராட முடியும் என்று மருத்துவர் ராமதாஸ் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறார். குறைந்தபட்சம் நிர்வாகிகளுக்காவது சமூக நீதி குறித்த நல்ல புரிதல் இருக்க வேண்டும் என்பதற்காகவே மருத்துவர் இந்தத் தேர்வை அறிவித்துள்ளார்.
பாமகவின் பிரிவான சமூக முன்னேற்றச் சங்கத்தின் மூலம் இந்தத் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். இதுவரையில் வெளியான மொத்த அத்தியாயங்களையும் சேர்த்து ஒரே தேர்வாக நடத்தாமல், இரண்டு இரண்டு அத்தியாயங்களாகத் தேர்வு நடத்தப்படும். ஒவ்வொரு தேர்விலும் 20 வினாக்கள் கேட்கப்படும். அனைத்து வினாக்களுக்கும் ஒற்றை வரியில் விடையளிக்கும் வகையில் எளிமையாக இருக்கும் என்று மருத்துவர் அறிவித்துள்ளார். தேர்வு நேரம் 20 நிமிடங்கள். விடைகளைப் பார்த்தும் எழுதலாம்.
கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், கட்சியின் அனைத்து அணிகளையும் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளும் இந்தத் தேர்வில் பங்கேற்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தி இருக்கிறார். தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்குப் பரிசு வழங்கப்படும். பங்கேற்றவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். விரைவில் தேர்வுத் தேதி அறிவிக்கப்படும். எனவே, இந்தத் தேர்வை எதிர்நோக்கிப் பாமகவில் மூத்தோரும், இளையோரும் ஆர்வமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்''.
இவ்வாறு பாலு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT