Published : 24 Jul 2020 03:04 PM
Last Updated : 24 Jul 2020 03:04 PM
22.7.2020 அன்று காலமான தமிழறிஞர் கோவை ஞானியைப் போற்றும் அஞ்சலிக் கட்டுரை
மார்க்சியத் தமிழறிஞராகிய ஞானி மிகவும் வியத்தகு மனிதர். மார்க்சியத்தைத் தாமே கற்றுத் தேர்ந்து மண்ணுக்கேற்ற மார்க்சியத்தைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர். கட்சி மார்க்சியருக்கு அப்பாற்பட்டவர் 2004-ம் ஆண்டு நான் பணி ஓய்வு பெற்ற பின்னர்… ‘தமிழ் நேயம்’ சிற்றிதழில் சிறுகதைப் போட்டி பற்றிய அறிவிப்பு ஒன்றைக் கண்டு. கதை எழுதி அனுப்பினேன். அந்தக் கதைக்குப் பரிசு கிடைத்த அறிவிப்புடன் அவரிடமிருந்து மடல் வந்தது. அதற்கு நான் மறுமொழி எழுத அப்படியே நட்பாகி வேர் விட்டுத் தொடர்ந்தது.
ஏனோ என்னுடைய தமிழ் அவருக்குப் பிடித்துப் போனதுடன் இருவருக்கும் இலக்கியங்கள், அரசியல் போன்ற கருத்துகள் பெரும்பாலும் ஒத்துப்போயின. எனக்குள் இருந்த ஆய்வுத் தேடலைக் கூர்ந்து நோக்கிய அவர், என் ஆய்வு நூல்களுக்கு வித்திட்டு ஆய்வுகளுக்கான பொருளைத் தேர்ந்து அதற்கான பார்வை நூல்களையும்அனுப்பி வைப்பார். நாள்தோறும் அலுக்காமல் நான் எழுதி அனுப்பும் கட்டுரைகளைப் படித்து உடனே கருத்துகள் எழுதி அனுப்புவார். அப்படி அவர் எழுதிய மடல்கள் ஒரு மூட்டை உள்ளன.
ஓர் ஆய்வை முடித்த பின்பு அடுத்த ஆய்வுக்கான தலைப்பைத் தேர்ந்தெடுத்து வைத்து இருந்து தெரிவிப்பார் . "உங்களால் முடியும்" என்பதே அவர் தரும் ஊக்க மருந்துச் சொல். மறுக்க இயலாது. அவர் இல்லத்தில் கால் வைத்த இடமெல்லாம் புத்தகங்கள்தான். அவருடைய பார்வைக்கு, அணிந்துரைக்கு என அஞ்சலில் அனுப்பப் பெற்ற நூல்கள் பிரித்துப் படித்தவை ஒருபுறம்; பிரிக்கப்படாமல் ஒருபுறம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அவரது மேசையிலும் புத்தகங்கள். நாற்காலியில் அவர் ஒடுங்கித்தான் அமர்ந்திருப்பார். தலை மட்டுமே தெரியும். இரு பக்கமும் புத்தகங்கள் நடுவில் அவர் நடந்து அமரும் நாற்காலிக்குச்செல்லவும் எழுந்து வருவதற்குமான ஒற்றையடிப் பாதைதான் இருக்கும்.
குறை - நிறைகளை அலசிக் கூறுவார்
அவரது நெறிகாட்டலில் பல ஆய்வு நூல்களை நான் எழுதினேன். பல்துறை சார்ந்த அச்சு மணம் மாறாத புதிய புதிய நூல்களை இடைவிடாது அனுப்பிக் கருத்துரை எழுதச் சொல்லிப் பல இதழ்களுக்கும் அனுப்பி வெளியிடச் செய்வார். தமக்குத் தெரிந்த அறிஞர்களிடம் அறிமுகப்படுத்துவார்.
பழந்தமிழ்ப் புலவர்கள், வள்ளுவம், கம்பன், சேக்கிழார் உட்படத் தமிழக, இந்திய, உலக இலக்கியப் படைப்பாளர், அரசியல் தலைவர்கள், தத்துவ இயலார், சமய இயலார் சமுதாய, ஆர்வலர் என அனைவரையும் வேறுபட்ட பார்வையில் ஆய்ந்து அணுகி அவர்களின் சிந்தனைகள், செயல்பாடுகளில் உள்ள குறை - நிறைகளை அலசிக் கூறுவார்.
பழைமையுடன் புதுமையையும் போற்றுபவர் ஞானி. நண்பர்களை எதன் பொருட்டும் விட்டுக் கொடுக்கவே மாட்டார். தமிழ் மெய்யியல், தமிழ்த் தேசியம், இந்திய மெய்யியல், தத்துவம், தமிழிசை, கர்னாடக இசை, கடவுளியம், திறனாய்வியல், கவிதை இயல், புனைகதை, நாடகம் ஆகியவை பற்றித் தெளிவான பார்வையில் தாம் கண்டறிந்த கருத்துகளை எளிய நடையில் அவர் எழுதியுள்ள ஆய்வுகள் நூற்றுக்கணக்கில் அடங்கும்.
கவிதை இயல் குறித்து 750 பக்கங்களில் தமிழகத்தின் அனைத்துக் கவிஞர்களின் படைப்புகளையும் விருப்பு - வெறுப்பின்றித் திறனாய்ந்து எழுதி உள்ளார் அவர். இளமைக் காலத்தில் காவலரால் தேடப்பட்ட நக்சல்பாரியாகத் துடிப்புடன் செயல்பட்டவர். இறுதிக்காலத்தில் ஆழ்கடல் அமைதியுடன் அரிய செயலாற்றினார்.
"நானும் கடவுளும் நாற்பதாண்டுக் காலமும்
தமது பார்வைத் திறன் படிப்படியே குன்றி வந்த நிலையில் அதை மீண்டும் பெறுவதற்கான மருத்துவப் போராட்டத்தையும் இல்ல உறவுகளின் இறைநம்பிக்கைகப் போராட்டத்தையும் ‘நானும் கடவுளும் நாற்பதாண்டுக் காலமும்’ எனும் நூலில் விரிவாகப் பகிர்ந்து கொண்டுள்ள ஞானியின் துணிவும் நேர்மையும் அரிதினும் அரிது. பார்வை அறவே இல்லை என்றானவுடன் ஆசிரியர் பணியில் இருந்து விலகிக் கொண்டார். பள்ளி நிர்வாகம் பணியில் தொடரும்படியாக வற்புறுத்தியும் இவர் மறுத்துவிட்டார்.
பார்வை இல்லை என்று கழிவிரக்கம் கொண்டு ஒடுங்கிவிடாமல் நூல்கள், இதழ்கள், செய்தித்தாள்களைப் படித்துக் காட்டவும், தாம் எழுதும் நூல் கருத்துகளைச்சொல்லச் சொல்ல எழுதித் தரவும் என ஓர் உதவியாளரை வைத்துக் கொண்டார். இறப்பதற்கு முதல் நாள்கூட இவ்வாறான பணியில் ஈடுபட்டிருந்தபோது மூச்சுத் திணறுகிறது பேச முடியவில்லை எனப் படுத்துள்ளார். பார்வை இருந்திருப்பின் இத்தனை நூல்களைப் படித்திருக்கவும் எழுதி இருக்கவும் முடியாது என்று அடிக்கடி நினைவுகூர்வார்.
சிற்றிதழாசிரியராகிய ஞானி நிகழ், புதிய தலைமுறை, பரிமாணம் தமிழ் நேயம் எனும் சிற்றிதழ்களை நடத்தினார். இவை முற்றிலும் புதிய முறையில் பல அரிய செய்திகளுடன்வெளிவந்துள்ளன. இவை காலத்தால் மறக்கப்படாமலிருக்கும வகையில் அண்மையில் ஒவ்வொன்றையும் தொகுத்து வெளியிட்டுள்ளார். வானம்பாடி இயக்கத்தில் சிறந்த பங்காற்றி அதன் வளர்ச்சிக்குத் துணை நின்றுள்ளார்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இவருடைய ஆய்வுகளை கருத்துகளைத் திறனாய்வாளர் பல "இசங்களில்" அடக்கிக் குறையும் நிறையும் கண்ட வண்ணம் உள்ளனர். ஆனால், அவர் இவற்றை எல்லாம் கடந்து நிற்கும் மனமுதிர்ச்சி பெற்றவர் என்பதே உண்மை. அவரை எந்தக் குறுகிய எல்லைக்குள்ளும் அடக்க இயலாது. தமிழகம் வரும் அயலகத் தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் இவரது இல்லம் வந்து உரையாடாமல் போவதில்லை.
இவரது இல்லம் ஒரு வேடந்தாங்கல்
ஞானியின் ஆழ்ந்த ஆய்வுகள், அரிய நூல்கள், விரிந்து பரந்த நூலறிவு முதலானவற்றுக்கு அப்பால் இவருடய பண்பு நலன்கள் போற்றத்தக்கவை. தம்மைவிட வயதில், அறிவில், பண்பில் குறைந்தவரிடம் கூடக் கற்றுக்கொள்ள ஏதேனும் இருக்கும் எனக் கூறிக் கற்றுக்கொள்வார். மாணவர், நண்பர், அறிஞர் என எப்போதும் ஒரு கூட்டம் இவரைச் சுற்றி இருக்கும்.
கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு இவரது இல்லம் வேடந்தாங்கல். யார் இல்லம் வந்தாலும் வயது கருதாமல் வாசலில் வந்து நின்று வரவேற்பதுடன்… போகும்போது உடன் வந்து வழி அனுப்பும் பண்புடையவர். மென்மையாகப் பேசுவதுடன் அடுத்தவர் பேச்சைக் குறுக்கீடு இன்றிக் கேட்டு அவர் முடித்த பின்னர், தமது கருத்தை அமைதியாகச் சொல்வார்.
பொதுவாக அறிஞர்கள் பலரும் தம்மை அணுகிப் பழகித் தம்மிடம் கற்பவர் தம்மைவிட மேலாகப் பெயரும் புகழும் பெற்றுவிடக்கூடாது என்றே நினைப்பர். ஞானி இதற்கு நேர் மாறானவர். தம்மிடம் பழகிப் பயின்றவர் தம்மைவிட மேலாக உயர்வதைக் கண்டு மனதார மகிழ்பவர். யாரையும் அவரது எந்தச் சிறு செயலையும் மனதாரப் பாராட்டுவார் . அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதுமாறு பலரும் வற்புறுத்தியும் தன் வாழ்க்கையில் எழுதுவதற்கு எதுவுமில்லை என மறுத்துவிட்டார்.
மார்க்சியமோ , பெண்ணியமோ சமுதாயத்தின் ஒட்டுமொத்த மாற்றத்தில்தான் வெற்றி பெறும் எனும் நம்பிக்கை உடையவர். மனித விடுதலையே அறுதியான இறுதித் தீர்வு என்பதே இவரது கொள்கை. இவருடைய நூல்கள். குறித்துப் பல திறனாய்வுகள் பலராலும் எழுதப் பெற்றுள்ளன. கவிதைகள் குறித்த இவருடைய கொள்கைகள் புதிய கோட்பாடுகளாக வரையறுக்கத்தக்கவை என்பதை கோவை ஞானியின் கவிதையியல் கொள்கைகள் எனும் எனது நூலில் அரண் செய்துள்ளேன்.
புகழ்ச்சியை விரும்பாதவர்
மடல்கள் எழுதும் பழக்கம் முற்றிலும் மறைந்துவிட்ட இன்றைய சூழலில் அவருடைய மடல்கள் மடல் இலக்கியத்திற்குச் சான்றாவதை நான் ஒரு நூலில் விளக்கியுள்ளேன். பண்பும் அறிவும் நிறைந்த இவர் புகழ்ச்சியை அறவே விரும்ப மாட்டார். இவர் தனது வாழ்நாளில் இரண்டு முறை இறப்பின் வாசல் வரை சென்று மீண்டவர். மூன்றாவது முறை இப்போது கதவு திறந்திருக்க உள்ளே சென்று வாசலை மூடிக் கொண்டுவிட்டார். இவருடைய அகப்பண்புகளும் புற அறிவுத் தெளிவும் வெகுசிலருக்கே கைவந்தவை. உலகில் குறை இல்லாத மனிதர் இல்லை. குறைகள் மிகுதியானவர் பண்பற்றவர் என்றும்; நிறைகள் மிகுதியானவர் பண்பாளர் எனக் கொள்ளப்படுகின்றனர்.
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல் என்பது வள்ளுவம். இவ்வகையில் முதிர முதிரத் தம் குறைகள் போக்கிக் கொண்டே தம்மை நிறை மனிதராக்கி மறைந்து தமது வாழ்க்கையை அரிய வரலாறாக விட்டுச் சென்று வரலாற்றில் வாழ்கின்றார் அறிஞர் ஞானி!
கட்டுரையாளார்: முனைவர் நளினி தேவி
ஓய்வுபெற்ற பேராசிரியர், ஞானியின் நூல்களை ஆய்வுசெய்தவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT