Published : 22 Jul 2020 08:59 PM
Last Updated : 22 Jul 2020 08:59 PM

கோவை ஞானியைத் தவறவிட்ட இடங்கள்!

கோவை ஞானி

வார்த்தைகளில் மென்மை. அர்த்தத்திலோ படு கூர்மை. நிதானமாக, பிறமொழிக் கலப்பில்லாமல் பேசும் கோவை ஞானியை முதன்முதலாகச் சந்தித்தபோது நான் உணர்ந்தது இதைத்தான். ‘கல்கி’யில் நிருபராகப் பணியேற்ற சமயத்தில்தான் ஞானியிடம் பரிச்சயம் ஏற்பட்டது. முதல் சந்திப்பிலேயே சக மனிதர்களின் வாழ்க்கை பற்றியே அதிகம் பேசினார். சக மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்கள்தான் இலக்கியம் என்றார்.

1990-களில் தொடக்கத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் (இப்போது தமுஎகச!) இணைந்து மாவட்ட நிர்வாகிகளில் ஒருவராகப் பொறுப்பு வகித்தபோது என் நூல் வெளியீட்டு விழா உட்பட பல நிகழ்வுகளுக்குக் கோவை ஞானியை அழைக்க வேண்டும் என்றே பரிந்துரை வைத்தேன்.

தோழர்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். என் தோளில் கை போட்டு தனியாய் அழைத்துச் சென்று, “கம்யூனிஸ்ட் கட்சி வேறு; ஞானி வேறு” என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். “இல்லையே அவர் மார்க்சியர் என்கிறார்; நீங்கள் மார்க்சிஸ்ட் என்கிறீர்கள். இரண்டுக்குமான பேதம் என்ன?” என்பதுதான் எனது கேள்வியாக இருந்தது. உண்மையில் எனக்கு ஏனோ ஞானியையும், மார்க்சியத்தையும், தமுஎசவையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

அதற்குப் பிறகு கல்கியில் மறுபிறவி என்ற ஒரு பகுதி தொடங்கப்பட்டபோது, ‘பார்வை பறிபோன பின்பு நீங்கள் எழுதிய அனுபவத்தைப் பற்றிச் சொல்லலாமே’ என்று அணுகியபோதும் மெல்லிய சிரிப்புடன் தன் அனுபவங்களைச் சொல்லலானார்.

‘இருளையே வெளிச்சமாக்கிக்கொண்டவர்’ என்ற தலைப்பில் 3 பக்க செய்திக் கட்டுரையாக அது வெளிவந்தது. அதற்குப் பிறகு காட்டூர் இல்லத்தில் ஞானியைப் பல முறை சந்தித்துப் பேட்டி கண்டிருக்கிறேன். நம்மாழ்வார், தியாகு என பலரைச் சந்தித்ததும் அந்த இல்லத்தில்தான்.

ஓயாத வாசிப்பு. ஓயாத உரையாடல். எதிர்நிலையாளர்களே ஆனாலும் நக்கல், கிண்டல் ததும்பும் சிரிப்புடன் சின்னதொரு விவாதம். எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாத தன்மை போன்றவை ஞானியின் சிறப்பம்சங்கள். ஒரு முறை கோவை அஸ்வினி ஹோட்டலில் ஜெயகாந்தனுக்கு எதிராக ‘சமஸ்கிருதத்தில் பேசு’ என்ற தி.க.,வினர் முன்வைத்த

கோஷத்தில் குறுநகையுடன் ஞானி மேடையில் தோன்றியது இன்னமும் மறக்க முடியாத காட்சி. ஞானியை எந்த மார்க்சியர்கள் மேடையேற்ற தயங்கினார்களோ, அதே மார்க்சியர்களை உள்ளடக்கிய தமுஎச பின்னாளில் கோவையில் வெள்ளி விழா மாநாட்டைக் கொண்டாடியபோது அதில் ஞானியின் பங்களிப்பும் இருந்தது மனதுக்கு நிறைவைத் தந்தது.

அவர் வீட்டிற்கு எப்போது போனாலும் நாட்டு நடப்புகளைப் பற்றி கேட்பார். “நிருபராகப் பணியாற்றுகிறீர்கள். பல இடங்களுக்குச் சென்றிருப்பீர்கள். அந்த அனுபவங்களைச் சொல்லுங்கள்” என்று கேட்பார். சில சமயம் வியப்பு மேலிட, “ஓ... அப்படிக்கூட நடக்கிறதா?” என்பார். தனித்தமிழ், மார்க்சியம் என்று பேச்சு எழும் சமயங்களில் பலர் ஓங்கிப் பேசினாலும் மென்மையாகவே பேசுவார். மற்றவர் பேசுவதை கருத்தூன்றி கேட்காமல் பதில் சொல்ல மாட்டார்.

எனக்குத் தெரிந்து பேரறிவாளன், நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்யக்கோரி முதன்முறையாகக் கையெழுத்து இயக்கம் நடத்தியது ஞானியாகத்தான் இருக்கும். அந்த நேரத்தில் ஒரு குழந்தையை போல் எங்களிடம் அவர் கையெழுத்து வாங்கியது இன்றும் நினைவில் பசுமையாய்.

கோவையில் உலகத் தமிழ் மாநாடு என்று அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தபோது, “இலங்கையில் தமிழினம் அழிந்துகொண்டிருக்க, இங்கே மாநாடா?” என்று மென்மையாய் பொங்கி பேட்டி தந்தார்.

‘தமிழ் நேயம்’ இதழ் தொடங்கியபோது சில கட்டுரைகளை என்னையே எழுதப் பணித்தார். என் உரைநடையில் சிலாகித்து அவர் சொன்ன வார்த்தைகள் இன்றும் இனிக்கக்கூடியவை. “உன் எழுத்தில் வாக்கியத்திற்கு வாக்கியம் விமர்சனம் இருக்குய்யா. ஆனா வாக்கியத்தை உடைச்சு எழுது. நல்லா வருவே” என்று நயமாய்ச் சுட்டிக்காட்டுவார்.

கடைசியாய் ‘இந்து தமிழ் திசை’யில் ‘கொங்கே முழங்கு’ படைப்பாளிக்கு நேர்காணல். அதன் தொடர்ச்சியாக ஒரு சில மாதங்களிலேயே அவருக்கு ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘தமிழ்த்திரு’ விருது அறிவிக்கப்பட்டபோது உண்மையிலேயே மகிழ்வின் எல்லை கடந்தேன். அந்த விழாவிற்கு உடல் நலிவுற்ற நிலையிலும் முழு நாளும் முன் இருக்கையில் அமர்ந்திருந்து

நிகழ்வை முழுமையாய் உள்வாங்கியது தமிழ் மீதான அவரது பற்றை வெளிப்படுத்தியது. எந்த இடத்திலும் செய்தியாளானாக நான் ஞானியை தவற விட்டதே இல்லை. ஆனால் இலக்கியத்தில்... ஒரே ஒரு வாய்ப்புதான். அதையும் ஏன் தவற விட்டேன் என்றுதான் புரியவில்லை.

அது ‘கல்கி’யிலிருந்து ‘குமுதம்’ இதழுக்கு நான் பணிக்கு வந்த நேரம். எனது ‘பொழுதுக்கால் மின்னல்’ என்ற என் நாவல் வெளிவந்திருந்தது. நண்பர்களுக்கெல்லாம் பிரதியைக் கொடுத்துவிட்டேன். ஞானி அய்யாவுக்குக் கொடுக்கவில்லை. அந்த நாவல் ஓரளவு பேசப்பட்டபோது ஓரிரு முறை அவரைச் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. “என்ன வேலாயுதம். ஒரு நல்ல நாவல் எழுதியிருக்கியாமே. எனக்கு கொடுக்கக் கூடாதா?” என்று குழந்தைபோல் கேட்டார். அதற்குப் பிறகுதான் அவருக்குப் புத்தகம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்கு வந்தது. ஆனால் பிரதிகள் இல்லை. அதைக் கொடுக்கும் வாய்ப்பும் பிறகு ஏற்படவில்லை.

2 ஆண்டுகளுக்கு முன்பு 2-ம் பதிப்பு வந்தபோது அதில் பிழை அதிகம் என்பதால் மட்டுமல்ல, அவர் உடல் தளர்ந்திருக்கும் நேரத்தில் அதை கொடுக்க மனசில்லை. இருந்தாலும் சு.வேணுகோபாலின் ‘நுண்வெளிக்கிரணங்கள்’, ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம்’, தியாகுவின் தனித்தமிழ் இயக்கம், தாய்த்தமிழ் பள்ளிகள், நம்மாழ்வாரின் இயற்கை வேளாண்மை இன்னும் நிறைய, ஞானி அய்யாவின் கைபட்ட பின்புதான் அகண்ட வெளிச்சத்திற்குச் சென்றன.

அதுபோன்றதொரு வாய்ப்பு பக்கத்தில் இருந்திருந்தும் நழுவ விட்டுவிட்டேனோ என்ற ஏக்கம் தோன்றுகிறது. ஏனென்றால் அந்த நாவல் அவர் பிறந்து வளர்ந்த சோமனூர் வட்டாரத்தின் களத்தை உடையது. அவருக்குத் தொடர்பில்லாத பல புதினங்களில் ததும்பும் மார்க்சிய பார்வைகளைக் கொண்டாடிய ஞானி இதனை எப்படியெல்லாம் கொண்டாடியிருப்பார் என்று அவ்வப்போது நினைத்துக்கொள்கிறேன்.

ஆம், கோவை ஞானியை நான் தவற விட்டுவிட்டேன். என்னைப் போலவே இன்னும் நிறைய பேர், ஞானியைத் தவறவிட்ட இடங்களை இனிதான் உணரப் போகிறார்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x