Published : 22 Jul 2020 01:58 PM
Last Updated : 22 Jul 2020 01:58 PM
புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த முதல்வர் நாராயணசாமி, தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரால் பள்ளி மாணவர்களுக்குக் காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது.
ஆனால், இதிலும் இப்போது அரசியல் அரிதாரம் பூசி ஆடுகிறது. அதிமுகவினரோ, இது ராஜீவ் காந்தி பெயரால் 2002-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட திட்டம் என்கிறார்கள். அத்துடன், “தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சிலை வைக்கும் தங்களது கோரிக்கைக்குச் செவிமடுக்காத புதுச்சேரி அரசு, கருணாநிதிக்குச் சிலை வைத்தும், சாலைக்குக் கருணாநிதி பெயரைச் சூட்டியும் அழகு பார்த்திருக்கிறது. இப்போது காலைச் சிற்றுண்டித் திட்டத்துக்கும் அவர் பெயரைச் சூட்டுகிறது” என்று சட்டப்பேரவையிலேயே தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்திருக்கின்றனர்.
எதிர்க்கட்சி வட்டாரத்திலிருந்து மட்டுமல்ல, அரசின் திட்டங்களுக்குக் கருணாநிதியின் பெயரைச் சூட்டும் நாராயணசாமிக்கு அவரது சொந்தக் கட்சிக்கு உள்ளே இருந்தும் கடும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.
கூட்டணிக் கட்சியின் முன்னாள் தலைவரான கருணாநிதிக்குச் சிலை, கருணாநிதி பெயரில் சாலை, தற்போது கருணாநிதி பெயரில் காலை உணவுத் திட்டம் என்று பல திட்டங்களையும் அறிவித்து வரும் நாராயணசாமி தனது குருநாதரும், அரசியல் வழிகாட்டியுமான ப.சண்முகம் பெயரில் எந்தத் திட்டத்தையாவது அறிவித்துள்ளாரா? என்று கேள்வி புதுச்சேரி காங்கிரஸில் சுற்றியடிக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய புதுச்சேரி மாநில மூத்த காங்கிரஸ் பிரமுகர் ஒருவர், “முதல்வர் நாராயணசாமிக்கு அரசியல் பாதையைக் காண்பித்து அவருக்கு கோட்டைக் கதவைத் திறந்துவிட்டவரே புதுச்சேரி மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான பெரியவர் ப.சண்முகம்தான். புதுச்சேரி அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்துக்குச் சொந்தக்காரர் அவர். காமராஜருடன் இணைந்து அரசியல் நடத்தியவர். இந்திரா காந்தியைப் பிரதமராக்குவதற்கு காமராஜருக்குத் துணை நின்றவர். காமராஜரைப் போல திருமணம் செய்து கொள்ளாமல் மிக எளிமையாகவே வாழ்ந்து தனது 83-வது வயதில் 2013-ம் ஆண்டில் மறைந்தார்.
23 ஆண்டுகள் புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பதவி வகித்தவர். இக்காலகட்டத்தில் இரண்டு முறை புதுச்சேரி முதல்வராகவும், மூன்று முறை எம்.பி.யாகவும் இருந்தவர். காரைக்கால் நெடுங்காட்டைச் சேர்ந்தவரான சண்முகத்துக்கு புதுச்சேரியில் சொந்த வீடுகூடக் கிடையாது. பத்மினி அம்மாள் என்பவரது வீட்டில்தான் தங்கியிருந்தார். பத்மினி அம்மாளிடம் கார் இருந்தது. அதைத்தான் தனது போக்குவரத்துக்கும் பயன்படுத்தினார்.
அப்போது அவருக்காக அந்தக் காரை ஓட்டியவர்தான் நாராயணசாமி. சட்டப்படிப்பு படித்திருந்த இளைஞர் நாராயணசாமியைத் தன்கூட வைத்துக் கொண்டார் சண்முகம். கார் ஓட்டுவதோடு மட்டும் நின்றுவிடாமல் சண்முகத்துக்கு உதவியாளராகவும் நாராயணசாமி திகழ்ந்தார். சண்முகத்தின் முகம் பார்த்தே அவரது தேவைகளைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு மிகுந்த விசுவாசமான நபராக இருந்தார் நாராயணசாமி.
ஒரு கட்டத்தில் சண்முகம் மாநில முதல்வராகவும், கட்சித் தலைவராகவும் பதவியில் இருக்கும்போது ராஜ்யசபா தேர்தல் நடந்தது.
அதற்குச் சரியான நேரம் பார்த்து அடிபோட்டார் நாராயணசாமி. நமக்கு வேண்டிய பையன், விசுவாசமாக இருப்பான் என்று அவருக்கே சீட்டை வாங்கிக் கொடுத்தார் சண்முகம். அப்போது சீட் பெற்று டெல்லிக்குச் சென்ற நாராயணசாமி அதன் பிறகு அரசியலில் மளமளவென முன்னேறினார். அடுத்த முறையும் அவரே ராஜ்யசபா எம்.பி.யானார். அதற்குப் பிறகு லோக்சபா எம்.பி.யாகவும் அவரே வென்றார்.
இந்தக் காலகட்டத்திலேயே சண்முகத்தை ஓரம் கட்டும் வேலைகளையும் திறம்படப் பார்த்தார். ஒரு கட்டத்தில் முதல்வர் பதவியிலிருந்தே சண்முகம் விலக நேரிட்டது. அந்தக் காலகட்டத்தில்தான் நாராயணசாமியை எதிர்கொள்ள ரங்கசாமியை முன்னிறுத்தினார் சண்முகம். ரங்கசாமியும் முதல்வர் ஆனார்.
அப்படி சண்முகத்தால் அரசியலுக்குக் கொண்டுவரப்பட்ட நாராயணசாமி, தன்னுடைய ராஜதந்திரத்தால் இப்போது முதல்வராகவும் பதவியில் இருக்கிறார். இப்போதாவது சண்முகத்தின் பெயரால் திட்டங்களைத் தொடங்கி அவருக்கு மரியாதை செலுத்தியிருக்கலாம். அதைச் செய்யவில்லை. சண்முகத்தின் சிலையை காரைக்காலில் வைக்க அனுமதி வேண்டும் என்று காரைக்காலில் செயல்பட்டு வரும் ‘ஈரம்’ அமைப்பினர் வைத்த கோரிக்கையைக் கூட இன்னும் நிறைவேற்றவில்லை” என்றார்.
நாராயணசாமிக்கு எதிராகச் செயல்பட்டதால் தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் எம்எல்ஏவான உறுப்பினர் தனவேலுவும் இதுகுறித்து நம்மிடம் பேசினார்.
“காங்கிரஸ்காரராக இருந்துகொண்டு காங்கிரஸ் கட்சிக்குத் துரோகம் செய்யும் வேலையைத்தான் நாராயணசாமி தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் மூத்த முன்னோடித் தலைவரான சண்முகம் ஐயாவின் பெயரை எதற்குமே சூட்ட முன்வராதவர், ராஜீவ் காந்தி பெயரிலான திட்டத்தையாவது அப்படியே நீட்டித்திருக்கலாம். ஆனால், அதையும் செய்யாமல் கருணாநிதி பெயரில் காலைச் சிற்றுண்டித் திட்டம் அறிவித்திருப்பது அவரது சுயநல அரசியலின் வெளிப்பாடுதான்.
இவர் இருப்பது காங்கிரஸ் கட்சியிலா அல்லது திமுக உறுப்பினராகவே ஆகிவிட்டாரா? முறைப்படி பார்த்தால் இவரைத்தான் தகுதிநீக்கம் செய்ய வேண்டும். கட்சி என்ன ஆனாலும் சரி, மக்கள் எப்படிப் போனாலும் சரி, தன்னுடைய முதல்வர் பதவி மட்டும் நீடித்திருக்க வேண்டும் என்று மட்டுமே அவர் விரும்புகிறார். சொத்தைக் காப்பாற்றுவதற்காக முதல்வர் பதவியைக் கையில் வைத்திருக்கிறார். அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார். அவரது பதவிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிற இந்தச் சூழ்நிலையில் திமுக எம்எல்ஏக்களின் தயவு அவருக்குத் தேவைப்படுகிறது. அதற்காகவே காலைச் சிற்றுண்டித் திட்டத்துக்கு, கருணாநிதியின் பெயரைச் சூட்டி திமுகவை தாஜா செய்கிறார்; அவ்வளவுதான்” என்றார் தனவேலு.
இதுகுறித்துப் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடம் பேசியபோது, “ராஜீவ் காந்தி பெயரிலான ரொட்டி, பால் திட்டம் என்பது வேறு. அது தொடரும். அதை மாற்றவில்லை. அதுதவிரப் புதிதாகத்தான் காலை சிற்றுண்டித் திட்டம் தொடங்கப்படுகிறது. அதற்குத்தான் கலைஞர் கருணாநிதியின் பெயரை வைத்திருக்கிறோம்.
இத்திட்டத்துக்கு புதுச்சேரி தலைவர்கள் யார் பெயரையும் சூட்டவில்லை என்பதால்தான் தலைவர் சண்முகம் பெயரையும் சூட்டவில்லை. அடுத்தடுத்து வேறு திட்டங்கள் அறிவிக்கும்போது அவரது பெயர் வைக்கப்படும்” என்றார்.
என்னதான் சமாதானம் சொன்னாலும் ‘பெயர் சூட்டும்’ அரசியல், புதுச்சேரி காங்கிரஸுக்குள் கடும் புகைச்சலை உருவாக்கி விட்டிருப்பது நிஜம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT