Published : 18 Jul 2020 10:34 AM
Last Updated : 18 Jul 2020 10:34 AM
பாட்னாவைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் தீபக் குமார். அவருக்கு சளியும் இருமலும் வந்தபோது, இது பருவகாலத்தில் வழக்கமாக வருவதுதான் என்று அவருடைய மருத்துவர் கூறினார். ஆனால், விரைவிலேயே தன்னுடைய அப்பா, அம்மாவுடன் நாளந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீபக் செல்ல வேண்டிவந்தது. மூவருக்கும் கோவிட்-19 பாசிட்டிவ் என்று பரிசோதனை முடிவு வந்தது. தன்னுடைய அனுபவத்தை அவர் பகிர்ந்துகொள்கிறார்:
பாராமுகம்
முதல் நாளில் நாங்கள் வைக்கப்பட்டிருந்த மருத்துவப் பிரிவு, போதை மறுவாழ்வு நோயாளிகளுக்கானது. அது எங்கள் மனநிலையை இன்னும் மோசமாக்கியது. கழிவறைக்கு கதவு இல்லாமல் இருந்தது. மெத்தைகள் கிழிந்திருந்தன, படுக்கைகளில் விரிப்புகள் இல்லை, மின்விசிறிகளும்கூட இல்லை.
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்கள் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை தரப்பட்டன. நாங்கள் எப்படியிருக்கிறோம் என்று அந்தப் பகுதியைக் கடந்து செல்லும் செவிலியர்கூடக் கேட்கவில்லை. முதல் நாள் இரவு உணவு தரப்படவில்லை. பார்லே ஜி பிஸ்கட் சாப்பிட்டுத்தான் சமாளித்தோம்.
பாதியில் விட்ட ஆம்புலன்ஸ்
அடுத்த நாள் காலை, தோல் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டோம். அங்கே படுக்கை விரிப்புகள், மின்விசிறி போன்றவை இருந்தன. ஒரு பொதுக் குளியலறை கதவுடன் இருந்தது சற்று நிம்மதியைத் தந்தது. அந்த அறையைத் தூய்மைப்படுத்துவதற்கு தூய்மைப் பணியாளர் வர மறுத்ததால், நாங்களே தூய்மைப்படுத்திக்கொண்டோம். குடிக்கத் தண்ணீர் கேட்டால், அடுத்த நாள்தான் கொடுத்தார்கள். நல்ல வேளையாக ஏழு நாட்களில் என்னுடைய அப்பாவும் அம்மாவும் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள்.
அந்த மருத்துவமனையில் கிருமிநாசினியே இல்லை. அசித்ரோமைசின், பாராசிட்டமால், வைட்டமின் சி, டி ஆகியவற்றை ஒரு தாளில் வைத்து மடித்துத் தூக்கியெறிந்தார்கள். ஐந்தாவது நாளில் இருந்து வைட்டமின் சி, டி மாத்திரைகள் மட்டுமே தரப்பட்டன. பிறகு நாளுக்கு இரண்டு வீதம் நான்கைந்து நாட்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் வழங்கப்பட்டது. 14 நாட்களுக்குப் பிறகு நானும் வீட்டுக்கு அனுப்பப்பட்டேன்.
வீட்டில் விடுவதற்கு வந்த ஆம்புலன்ஸ், வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் முன்பாகவே இறக்கிவிட்டுவிட்டுச் சென்றுவிட்டது. கோவிட்டில் இருந்து உயிர்பிழைத்ததைவிட, பிஹாரின் மோசமான மருத்துவமனையிலிருந்து உயிர் பிழைத்ததையே பெரிதாகக் கருதுகிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT