Published : 17 Jul 2020 11:04 AM
Last Updated : 17 Jul 2020 11:04 AM

கொங்கு ‘தேன்’ 8- ‘எங்கய்யன், பழனி மலை...’

சிவகுமார்

நினைவு தெரிஞ்ச நாளிலருந்து சாமின்னா முருகன்தான்ங்கற மாதிரி, சாமி ஊட்டுல எங்கய்யன் மொட்டை ஆண்டி முருகன் படத்தை வச்சுத்தான் கும்பிட்டிட்டுருந்திருக்காரு.

ஒவ்வொரு கிருத்திகைக்கும் பழனிமலை போய் திருப்புகழ் பாடல்கள் மொத்தமும் மனப்பாடமா சொல்லி சாமி கும்பிட்டு வருவாராம்; அப்படியே நான் 10 மாசக்குழந்தையா இருந்தப்ப தன்னோட 33 வயசில இந்த உலகத்தை விட்டு போயிட்டாரு

அற்பாயுசில சாகப்போறோம்ன்னு தெரிஞ்சதால போட்டோ எடுத்துக்க மாட்டேன்னுட்டாராம்; வாழ்நாள் பூராவும் அதைப் பார்த்து அழுவாங்கன்னு;

கம்பராமாயணம் மொத்தம் 10 ஆயிரத்தி 520-க்கும் மேலான பாடல்கள். யாரும் சொல்லிக் குடுக்காம, நானே கம்பராமாயணம் உரையை 100 கம்பன் பாடல்கள் வழி தயார் பண்ணினதுக்கும், 4 வருஷம் பல பெரியவங்க எழுதின, பேசின, மகாபாரதக் கதையை குறிப்பெடுத்து 2 மணி 15 நிமிஷத்தில பெருங்கூட்டத்தில பேசறதுக்குமான நினைவாற்றல் மனப்பாட சக்தி எங்கய்யன் ரத்தத்திலருந்துதான் எனக்கு வந்திருக்குமோன்னு அப்பப்ப நெனைச்சுப் பார்ப்பேன்.

எங்கய்யன் பூஜித்த பழனி முருகன் படம்

அதேமாதிரி 1966-ல ஏ.பி.நாகராஜன் அவர்கள், ‘கந்தன்கருணை’ படத்தை கண்ணதாசன் அவர்களோட அண்ணன் ஏ.எல்.சீனிவாசனுக்கு எடுத்தாரு. அதில 5 வயதுச் சிறுவன் 13 வயசு பையன் வேஷங்களுக்கு சரியான பசங்க கிடைச்சு ஷூட்டிங்கையும் முடிச்சாச்சு. வள்ளி-தெய்வானையோட கணவனா நடிக்கிற - கல்யாண முருகன் வேஷத்துக்கு ஒரு வாலிபனை ஒரு வருஷமா தேடினாங்களாம்.

‘முருகன் என்றால் அழகன்; அழகு என்றால் அது முருகன்!’ அப்படின்னு நம்ம மக்கள் மனசில பதிஞ்சு போயிருக்கறதனால, எல்லாரும் கையெடுத்து கும்படற மாதிரி ஒரு அழகான பையனை அந்த வேஷத்துக்கு தேடிட்டிருந்திருக்காங்க. கிட்டத்தட்ட 30 பசங்களை வரச்சொல்லி ‘மேக்-அப்’ போட்டு ‘டெஸ்ட்’ எடுத்தும் பார்த்தாங்களாம்.

கண்ணு நல்லா இருந்தா கன்னம் ஒடுங்கி இருந்துச்சாம் ஒரு பையனுக்கு. முகம் நல்லா இருந்தா ஒருத்தனுக்கு மூக்கு சப்பையா இருந்திச்சாம். ஒருத்தனுக்கு கண்ணு மூக்கு நல்லா இருந்தா பல் வரிசை ஏசகோசலா இருந்திச்சு. இதெல்லாம் நல்லா இருந்தா தமிழ் பேசத்தெரியாது அவனுக்கு.

இப்படி அல்லாடிட்டிருந்த ஏ.பி.என்., அவர்கள், வடபழனி முருகன் கோயிலுக்குப் போயி, ‘உன் கதையைத்தானே படம் எடுக்கறேன் -உனக்கே புடிக்கலியா - இப்படி சோதிக்கிறியே!’ன்னு சாமிகிட்ட முறையிட்டு வந்தாராம்.

அப்புறம், ‘காக்கும் கரங்கள்’ல என்னை அறிமுகப்படுத்தின ஏ.வி.எம். செட்டியார் அவர்கள், ‘சிவகுமார்ன்னு ஒரு பையனை நாங்க அறிமுகப்படுத்தியிருக்கோம். அவன் சரியா இருப்பான்னு தோணுது!’ன்னு சொல்லியிருக்காரு.

அதுக்கப்புறந்தான் என்னை கூப்பிட்டு மேக்கப் டெஸ்ட் எடுத்து தேர்வு செஞ்சாங்க. இது கூட எங்கய்யன் முருகன் மேல வச்சிருந்த அளவு கடந்த பக்தியால எனக்கு கிடைச்ச வரமாத்தான் நினைக்கத் தோணுது.

கல்யாண முருகனாக

எங்கய்யன் அடிக்கடி போனதனாலையோ என்னமோ, பழனிக்கு போற பழக்கம் எங்களுக்கும் வந்திருச்சு.

முத முதல்ல பத்து வயசுவாக்கில பழனிக்கு ரயில்ல போனது மங்கலா புகை சூழ்ந்த கண்ணாடி வழியா பாக்கற மாதிரி நியாபகம் இருக்கு.

பக்கத்து ஊட்டு வேலப்ப கவுண்டரும், அவர் சம்சாரமும் அம்மா கூட பழனிக்கு வர்றேன்னு சொல்லீருந்தாங்களாம். சாயங்காலம் 4 மணிக்கெல்லாம் பொங்கச் சோறு ஆக்கி, புளிக்காய்ச்சல் ரெடி பண்ணி, வடை சட்டியில சாதத்தை கொட்டி கிளறி புளிசாதம் பண்ணின வாசனை இப்பக்கூட நினைவில் இருக்கு.

ஊரே அடங்கின நேரம். மாட்டு வண்டில சூலூர் போயி, அங்கிருந்து SSV பஸ் புடிச்சு ராத்திரி 9 மணி வாக்கில கோயமுத்தூர் ரயில்வே ஸ்டேஷன் போய்ச் சேர்ந்தோம். அந்நேரத்துக்கும் மழைக்காலத்தில எறும்புக நாலாபக்கமும் பரபரன்னு ஊறுகிற மாதிரி டவுன்ல சனங்க நடமாடிட்டிருந்தாங்க.

ஸ்டேஷனுக்குள்ளே போயி முதல் பிளாட்பாரத்துக்கு ஏறுகிற படிகளைத் தாண்டி, இரண்டாவது பிளாட்பாரம் படிகளையும் தாண்டி, மூணாவது பிளாட்பாரத்துக்கு போற படிகள்ள ஏறி மேலே போனோம். அப்பத்தான் எஞ்சின் 7,8 பெட்டிகளை இழுத்திட்டு பிளாட்பாரம் வந்திட்டிருந்தது. ஆளாளுக்கு முண்டியடிச்சிட்டு ஓடிப்போய் ஏறினோம். சன்னல் ஓரந்தான் எனக்கு எப்பவும் பிடிக்கும்ங்கிறதனால ஒரு சீட் புடிச்சிட்டேன்.

பத்து மணிக்கு பாசஞ்சர் கிளம்புச்சு. தூங்கி வழிஞ்சிட்டே ஊறிட்டு போச்சு. மாட்டு வண்டிக கூட கொஞ்சம் வேகமா போகும். அவ்வளவு மெதுவா போச்சு. கோயமுத்தூருக்கும் பழனிக்கும் 60 மைல்தான்னு பின்னாடி தெரிஞ்சுகிட்டேன்.

கார்ல போனா, அதிகபட்சம் 2 மணி நேரத்தில பழனி போயிடலாம். இந்த திண்டுக்கல் பாசஞ்சர் ஆடி, ஆடி 6 மணி நேரம் கழிச்சு விடியக்காலை 4 மணிக்கு பழனி போய்ச் சேர்ந்தது.

பழனிமலை -இரவு விளக்கொளியில்

பழனி ஸ்டேஷன்லருந்து டவுனுக்கு கீழால சரிவா நடந்து போகணும். வண்டிய விட்டு எறங்கினதும் -நான் அரை ‘டிராயர்’ போட்டிருந்ததால தொடையெல்லாம் சிலுத்துட்டுது. கன்னத்துல சிலிர்ப்பு. கைகால் நடுங்க ஆரம்பிச்சுது. பல்லு பகிடெல்லாம் ஆட்டங்கண்டுடுச்சு.

தூரத்துல கொடைக்கானல் மலைங்க இருக்கு. அங்கிருந்து பேய்க்காத்து அந்நேரத்துக்கு அடிக்குது. நடந்தா கால் ஒதர்றது தெரியுது. உடம்பை சூடாக்க தொங்கான் ஓட்டம் சித்த ஓடினேன். கொசுத்தொளி (லேசான மழைத்துளி) உழுந்துச்சு. திரும்பி எங்கம்மாகிட்ட ஓடியாந்தேன். வெள்ளைச் சேலை முந்தானைய என் தலை மேல போர்த்தி கூட்டீட்டுப் போனாங்க.

ஊருக்குள்ள புண்ணியவானுங்க ஏகப்பட்ட தர்ம சத்திரங்களை கண்ணாடி மாதிரி கட்டி உட்டிருக்காங்க. மங்கம்மா சத்திரம், கருப்பட்டி சத்திரம்னு -நாட்டுக் கோட்டை செட்டியார்கள், ஜமீன்தார் கவுண்டர்கள் கட்டி உட்டிருக்காங்க.

ஒரு சத்திரத்துக்குள்ளே போயி கருப்பும், வெள்ளையுமா டைமண்ட் கல் மாதிரி பெரிசு பெரிசா

ஒட்டிருந்த தரையில சித்த நேரம் கண்ணசந்தோம். அதுக்குள்ளே விடிஞ்சிருச்சு.

பழனிமலை அடிவாரத்திலயிருந்து கிழபுறமா நடக்க ஆரம்பிச்சு மலைக்கு நேரா தென்புறம் வரத்தாறு இருக்கு. அங்கே போனோம்.

ஏகப்பட்ட சாமியார்கள். சடாமுடி சாமியார், கருப்பும் வெள்ளையுமா தாடியோட சாமியார், நெருப்பைக் கக்கும் கண்ணோட சாமியார், ‘கொந்தாள’ மூக்கு சாமியார், சப்பை மூக்கு சாமியார், பொக்கை வாய் சாமியார், காவிப்பல் சாமியார், ஈர்க்குச்சி உடம்பு சாமியார், உடம்பெல்லாம் கரடியாட்டமா முடியோட சாமியார்னு - அத்தனை பேரும் குளிச்சிட்டிருந்தாங்க.

நாங்களும் தண்ணிகிட்ட போனோம். பாதத்தை தண்ணிக்குள்ள உட்டதும் ஜிலீர்ன்னு குளிரு தாக்குச்சு. சித்த நேரம் காலை தண்ணிக்குள்ளே வச்சு பழகிட்டு, முழங்கால் வரைக்கும் ஆத்துக்குள்ள போனேன். நடுக்கம் தாங்க முடியலே.

அப்படியே சித்த இருந்து இடுப்பு வரைக்கும் போயி மூக்கை புடிச்சிட்டு ‘மடார்’ன்னு தண்ணிக்குள்ளே முக்குளி போட்டு எழுந்தேன். நடுங்கின உடம்புல சூடு ஏறி இப்ப நிதானமாயிட்டேன்.

குளிச்சு ஈரத்துணியோட மலைய சுத்தி வேகமா நடக்க ஆரம்பிச்சோம். கடை வீதில அர்ச்சனை பண்ண தேங்கா பழம், பூமாலை ஒரு கூடையில வாங்கிட்டு படிகள்ளே ஏற ஆரம்பிச்சோம்.

பத்து நிமிஷம் நடந்திருப்போம். திடீர்ன்னு யாரோ எம்மேல விழுந்து பொறாண்டி என் கையிலிருந்த தேங்கா பழக்கூடைய அடிச்சு புடுங்கிட்டு போறாங்க.

என் குடும்பம் சகிதமாக

யாரு ! குரங்குதான். ஆண் குரங்கு, நல்லா வளர்ந்த குரங்கு கூடையோட போய், பக்கவாட்டு மதில் சுவர்ல உட்கார்ந்து ஒரு பழத்தை உறிச்சு பாதியை முழுங்கீட்டு கொக்காணி காட்டுது.

பச்சைக்கண்ணு.., வெள்ளைக்காரனாட்டமா, அடுத்த விநாடி 4 குட்டியோட அம்மா குரங்கும் வந்து சேர்ந்திட்டுது.

நல்ல பசி போல இருக்கு. ஆளுக்கு ஒரு பழத்தை பிச்சு உறிச்சு திங்குதுங்க. பாதி மலை ஏறினதும் மூச்சிறைக்குது. ‘கண்ணு! படிலே நேரா ஏறாம கிராஸா இடது பக்கமா கொஞ்ச தூரம், அப்புறம் வலது பக்கமா கொஞ்ச தூரம் படிகள்ள நடந்தோம்ன்னா சிரமம் தெரியாது’ன்னாங்க, அம்மா.

கிட்டத்தட்ட 700 படிகளாம். வயசானவங்க சிரமப்படுவாங்கன்னு 4, 5 எடங்கள்ள இளபாத்தி மண்டபங்கள் கட்டி விட்டிருக்காங்க. அங்கே 5 நிமிஷம் நின்னுட்டு மறுபடியும் நடக்கலாம்.

பழனி முருகன் மேற்கே பாத்த மாதிரி மூல ஸ்தானத்தில இருக்காரு. ஆகவே மேக்கால வாசல்லதான் உள்ளே போக மெயின் வழி. வி.ஐ.பிக்கள் போக மூலஸ்தானத்திலிருந்து தென்புறம் ஒரு வழியும் இருக்கு.

கோயில சுத்தி வேடிக்கை பார்த்துட்டே பின்னாடி தென்கிழக்கா போனா சுத்துச்சுவர்ல ஒரு 10 அடி இடைவெளி இருக்கு. அங்க 4 படி எறங்கினா ராமர்பாதம்னு ஒரு கல் செதுக்கி வச்சிருக்காங்க.

வேர்த்து விறுவிறுத்து நடந்து போறவங்களுக்கு அந்த ராமர்பாதம் பக்கம் நின்னா, சொர்க்கத்திலருந்து வர்ற மாதிரி சுகமான குளிர்காத்து நம்ம தடவிக்குடுக்கும். அந்த எடத்தை விட்டு நகரவே தோணாது.

அப்புறம் கூட்டத்தோட கூட்டமா போயி மொட்டையாண்டிய கும்பிட்டு 8 மணி வாக்கில கீழே எறங்குவோம். படில ஏறிப் போறதுதான் கஷ்டமே தவிர எறங்கும்போது கடகடன்னு ஓடியே வரலாம்.

மகளுக்கு பழனியில் மொட்டை

ரொம்பவும் குண்டானவங்க, வயசானவங்க நடந்து வர யானைப் பாதைன்னு ஒண்ணு படிகள் இல்லாம சரிவான பாதையா போட்டு விட்டிருக்காங்க.

அடிவாரம் வந்தவுடனே பசி பிச்சு எடுக்கும். பெருங்குடல் சிறுகுடலை திங்கற பசி. சம்முக நதிப்பக்கம் உட்கார்ந்து பாக்கு மட்டைய பிரிச்சா, மட்டை வாசனையோட புளிசாத வாசனை தூக்கும். ஆளுக்கு ஒரு உருண்டை அம்மா பிச்சுக் குடுப்பாங்க. ‘என்ன ஒரு ருசி? என்ன ருசி.’

பசித்துப்புசி. அப்பத்தான் ருசிக்குன்னு பெரியவங்க சொன்னது அங்கதான் புரிஞ்சுது... மக்கமாருக்கும் பேரன் பேத்திகளுக்கும் எங்கய்யன் சாமிகும்பிட்ட பழனி மலையிலதான் முதல் மொட்டை போட்டோம்

(சுவைப்போம்)

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x