Published : 16 Jul 2020 10:14 PM
Last Updated : 16 Jul 2020 10:14 PM
‘கரோனா’ தொற்று நோயால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் மதுரை அருகே பraவை பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்று,
ஆண்டுதோறும் நடக்கும் விளையாட்டு விழாவை ஆன்லைன் மூலம் வித்தியாசமாக நடத்தி மாணவர்களை உற்சாகமடைய செய்து அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
‘கரோனா’ தொற்று நோய் பரவும் இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் பள்ளிகள் கடந்த 4 மாதமாக திறக்கப்பவில்லை.
ஆனால், தனியார் பள்ளிகள் இணைய வழி மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தி ஒரளவு பள்ளிகள் திறக்காத குறையைப் போக்கிக் கொண்டிருக்கின்றன.
கற்பித்தல் வகுப்புகளுக்கு இணையம் வழி கை கொடுத்தாலும் கற்பித்தலை தாண்டி மாணவர்களுடைய மன அழுத்தத்தை குறைக்கவும், உற்சாகப்படுத்தவும் வழக்கமாக நடக்கும் பள்ளி விழாக்கள் நடத்த முடியாமல் தடைப்பட்டு போனது.
குறிப்பாக பள்ளி மாணவர்கள் ஆண்டுதோறும் எதிர்பார்த்து காத்திருக்கும் பள்ளி விளையாட்டு விழா இந்த ஆண்டு இல்லாமலே போனது.
ஆனால், மதுரை அருகே பரவை பகுதியில் அமைந்துள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளி வித்தியாசமாக சிந்தித்து, வழக்கம் போல் இந்த ஆண்டும் விளையாட்டு விழாவை தடைப்படாமல் இணைய வழி மூலம் வெற்றிகரமாக நடத்தி மாணவர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.
பள்ளியில் படிக்கும் மாணவர்களையும் கூகுள் மீட் என்ற இணையதளம் ஆப் மூலம் இணைத்து விளையாட்டு விழாவை நடத்தியுள்ளனர். இந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து அப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
எங்கள் பள்ளி வருட நாட்காட்டியில் விளையாட்டு விழா மிகவும் முக்கிய நாட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கரோனா பரவுவதால் தற்போதைய உலகின் இக்கட்டாசூழ்நிலை, வழக்கம்போல் பள்ளி விளையாட்டு விழாவை நடத்துவதற்கும், அதன் மூலம் மாணவர்களுடைய விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கும் தடையாக இருந்தது. என்ன செய்வது என்று பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களிடம் ஆலோசனை நடத்தியது.
ஆன்லைன் வகுப்புகள் போல் பள்ளி விளையாட்டு விழாவை இணையம் மூலம் நடத்தினால் என முடிவு செய்தோம். அதன்படி விளையாட்டு விழாவை இணையத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். வழக்கம்போல் விளையாட்டு விழா நிகழ்ச்சியில் என்னென்ன நடக்குமோ அது எதுவும் தவறாமல் இந்த இணைய விளையாட்டு விழா நிகழ்ச்சியில் இடம்பெற்றது.
பள்ளியின் முதன்மை முதல்வரும், தாளாளருமான அருணா விஸ்ஸேஸர் தலைமை வகித்துப் பேசினார். பள்ளி முதல்வர் ரின்ஷி ஜோஸ் வரவேற்றார். டீன் விஸ்ஸேஸ் ஐயர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த இணைய வழி விளையாட்டு மூலம் மாணவர்களுடைய பன்முகத்திறமைகளை பல வழிகளில் கொண்டுவரப்பட்டது.
விளையாட்டு விழா மைதானத்தில் நடத்தப்படாததால் அதற்கு தகுந்தார்போல் மாணவர்களுக்கு விளையாட்டுகள் வடிவமைக்கப்பட்டு நடத்தப்பட்டன.
மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவர்கள் அணிவகுப்பு முடிந்ததும் விளையாட்டுப்போட்டிகள் தொடங்கப்பட்டன.
விரல் அச்சு, பலூன் ஊதுதல், திராட்சை சேகரித்தல், நாணயத்தை நெற்றில் நிற்க வைத்தல் போன்ற பல்வேறு விளையாட்டுகள் மூலம் மாணவர்கள் தங்கள் திறமைகளை இணைய விளையாட்டு விழாவில் வெளிப்படுத்தினர்.
லென்ஸ் பூன், பிரமிடு, புஸ் அப் ஆக்டிவிட்டி, சுவற்றில் பந்து எறிதல் போன்ற நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. 12ம் வகுப்பு மாணவர்கள் கோவிட்-19 பற்றி ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். அந்த நிகழ்சியில் அவர்கள் சமூக இடைவெளி, நம்மை நாம் எப்படி பாதுகாப்பது போன்றவற்றை செய்து காட்டினர்.
இணையம் கற்பித்தல் வகுப்புகளுக்கானது மட்டுமல்ல, வீட்டில் முடங்கிகிடக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தவும் உதவும் என்பதை இப்பள்ளி நிர்வாகம் நிரூபித்துக் காட்டியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT