Published : 06 Sep 2015 01:31 PM
Last Updated : 06 Sep 2015 01:31 PM

ஜேன் ஆடம்ஸ் 10

அமெரிக்க சமூகப் பணியாளர், எழுத்தாளர் என பன்முகப் பரிமாணம் கொண்ட ஜேன் ஆடம்ஸ் (Jane Addams) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 6). அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து:

* அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலம் ஸீடர்வில் கிராமத்தில் (1860) பிறந்தார். தந்தை செனட் உறுப்பினர், தொழிலதிபர். முற்போக்கு சிந்தனை கொண்டவர். லிங்கன் போன்ற செல்வாக்கான தலைவர்கள் இவரது நண்பர்கள்.

* குழந்தையாக இருந்தபோதே தாயை இழந்த ஜேன், சித்தியின் அரவணைப்பில் வளர்ந்தார். சிறு வயதிலேயே ஏராளமான புத்தகங்களை படித்தார். சார்லஸ் டிக்கன்ஸின் நூல்கள் இவருக்குப் புதிய உலகைக் காட்டின. வசதியான வாழ்க்கை வாழ்ந்த இவரை, ஏழைகளின் துயரங்களும் ஏழை - பணக்காரர் இடைவெளியும் யோசிக்க வைத்தன.

* அப்பாவின் திடீர் மறைவால் குடும்பம் பிலடெல்பியாவுக்கு சென்றது. ஏழைகளுக்கு உதவும் எண்ணத்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். முதுகுத்தண்டு பாதிப்பால் படிப்பைத் தொடர முடியவில்லை. 2 ஆண்டு மருத்துவ சிகிச்சையில் உடல்நலம் தேறியது.

* சித்தியுடன் ஐரோப்பா முழுவதும் பயணம் மேற்கொண்டார். அப்போது கண்ட சமூக, அரசியல் ஏற்றத்தாழ்வுகள் அவரது சிந்தனையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. மருத்துவர் ஆவதால் மட்டுமே சமூகத்தை மாற்ற முடியாது என உணர்ந்தார்.

* ஏழைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததே தவிர, தெளிவான திட்டங்கள் இல்லை. அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தைப் போக்கிக்கொள்ள டால்ஸ்டாய் புத்தகங்களைப் படித்தார். தோழிகளுக்கு நீண்ட கடிதங்கள் எழுதினார்.

* தோழியுடன் இங்கிலாந்து சென்றபோது, அங்கு ‘செட்டில்மென்ட் ஹவுஸ்’ எனப்படும் சமுதாயக் கூடங்களைப் பார்த்தார். ஏழைகள், நடுத்தர மக்கள் பரஸ்பரம் அறிவு, பண்பாட்டைப் பகிர்ந்துகொள்ளும் இடமாக அது இருந்தது. அமெரிக்காவிலும் இதுபோல தொடங்க விரும்பினார்.

* தோழியுடன் சேர்ந்து நிதி திரட்டி ‘ஹல் ஹவுஸ்’ என்ற குடியிருப்பை அமெரிக்காவில் உருவாக்கினார். அங்கு அனைத்து தரப்பினருக்கும் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டதோடு குழந்தைகளுக்கு இசை, மொழிகள், கணிதம், ஓவியம் உட்பட சகல விஷயங்களும் கற்றுத்தரப்பட்டன.

* இரவுநேரப் பாடசாலைகள் தொடங்கப்பட்டன. இதன்மூலம் பல பெண்கள் படித்து, சொந்தக் காலில் நின்றனர். மருத்துவமனை, நூலகங்களும் ஏற்படுத்தப்பட்டன. 13 கட்டிடங்களுடன் இயங்கிய ஹல் ஹவுஸ் நாடு முழுவதும் பிரபலமடைந்தது. ஜெர்மனி, இத்தாலியிலும் தொடங்கப்பட்டன.

* அமெரிக்காவின் முதல் சுகாதார ஆய்வாளராக நியமிக்கப்பட்ட இவர், சுகாதார மையங்கள், மருத்துவமனைகளை ஆய்வு செய்து, குறைபாடுகளைக் களைந்தார். ஆக்கிரமிப்பு மற்றும் போருக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றார். அமைதிக்கான பெண்கள் இயக்கத்தில் சேர்ந்து செயலாற்றினார். மகளிர் வாக்குரிமை, சொத்துரிமை, கல்வி, ஆண்-பெண் சமத்துவத்துக்காக போராடினார். தனது ஹல் ஹவுஸ் பற்றி 11 புத்தகங்கள் எழுதி வெளியிட்டார்.

* அமைதிக்கான நோபல் பரிசை 70-வது வயதில் பெற்றார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் அமெரிக்கப் பெண் என்ற பெருமையையும் பெற்றார். வாழ்நாள் முழுவதும் ஏழை, எளியவர்களுக்காகவும் அமைதிக்காகவும் பாடுபட்ட ஜேன் ஆடம்ஸ் 74-ம் வயதில் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x