Published : 16 Jul 2020 02:06 PM
Last Updated : 16 Jul 2020 02:06 PM
1990களில் தூர்தர்ஷனில் வெளியான பாலசந்தரின் ‘ரயில் சிநேக’மும், பாலுமகேந்திராவின் ‘கதை நேர’மும் , திரைப்படங்களுக்கு இணையான தரத்தையும் ஆக்கத்தையும் கொண்டிருந்தன. ஒவ்வொரு வாரமும், ஒரு சிறுகதையை வெறும் இருபது நிமிடங்களுக்குள் ஒரு குறுந்தொடராக பாலுமகேந்திரா காட்சிப்படுத்தியிருந்த விதமும் நேர்த்தியும் அன்றைய காலகட்டத்தின் திரைமொழியையும் மிஞ்சிய ஒன்று. தொலைக்காட்சித் தொடர்களால் திரைப்படங்கள் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று கூட அப்போது அஞ்சப்பட்டது. ஆனால், அதன் பின்னர் பாலுமகேந்திரா வேறு எந்தத் தொடரையும் எடுக்கவில்லை. பாலச்சந்தர் எடுத்த தொடர்களில் எதுவும் ‘ரயில் சிநேக’த்தின் நேர்த்திக்கு அருகில் வரவில்லை. புதிய இயக்குநர்களும் புதிய முயற்சிகளில் பெரிதாக ஈடுபடவில்லை.
ஓடிடியின் சிறப்பான தொடர்
வணிக நிர்ப்பந்தம் காரணமாக என்னவோ, குடும்பப் பிரச்சினைகளைச் சுற்றியே சின்னதிரைத் தொடர்கள் சுருங்கிவிட்டன. ஆனால், ஓடிடி தளங்களில் வெளிவரும் இணையத்தொடர்களை அப்படிச் சொல்ல முடியாது. திறமை இருந்தும் வாய்ப்பின்றி அல்லாடும் இளைய தலைமுறை இயக்குநர்களின் திறனுக்கு வடிகாலாக / அவர்களின் பரீட்சார்த்த முயற்சிக்கான திறவுகோலாக விளங்கும் ஓடிடியில் வெளியாகும் தொடர்கள், திரைப்படங்களின் ஆக்க நேர்த்திக்கு இன்று சவால்விடுகின்றன. இந்தியாவில் பல இணையத் தொடர்கள் வெளிவந்திருக்கின்றன. இருப்பினும், இந்த லாக்டவுன் காலத்தில், மே மாதம் 15-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியான ‘பாதாள் லோக்’ இதுவரை வந்த தொடர்களில் சிறப்பானது மட்டுமல்ல; துணிச்சலானதும் கூட.
கதைக்களம்
இந்தியாவின் மிகவும் பிரபலமான நட்சத்திர ஊடகவியலாளரைக் கொல்வதற்காக ஒரு கூலிப்படை டெல்லியில் ஏவிவிடப்படுகிறது. இது குறித்த தகவல் நேரடியாக டெல்லியின் உயர் காவலதிகாரிக்கு வருகிறது. தாக்குதலுக்குச் செல்லும் வழியில், நான்கு பேரைக்கொண்ட அந்தக் கூலிப்படை, உயர் காவலதிகாரியின் தலைமையிலான குழுவினரால் மடக்கிப் பிடிக்கப்படுகிறது. அந்த ஊடகவியலாளரைக் கொல்லும் முயற்சிக்கான நோக்கம் என்ன? அந்தக் கூலிப்படையை ஏவியது யார்? அந்தக் கூலிப்படையில் இருக்கும் நான்கு நபர்களின் பின்னணி என்ன? போன்ற கேள்விகளுக்கான விடையைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு, ஹாதிராம் சௌத்ரி எனும் காவல் ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்தக் கேள்விகளுக்கான விடைகளையும், ஒரு பிரபலத்தின் மீதான தாக்குதல், அதுவும் ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தை ஈர்த்த நாட்டின் முக்கிய வழக்கு, தன்னைப் போன்ற ஒரு சாமானிய காவல் ஆய்வாளரிடம் ஏன் ஒப்படைக்கப்பட்டது என்பதற்கான காரணத்தையும் கண்டுபிடிக்கும் ஹாதி ராமின் துப்பறியும் பயணமே ‘பாதாள் லோக்’.
சமூகத்தின் முகத்திரை
எந்த மனிதனும் அவர் பிறக்கும்போதே கொடூரமான சமூக விரோதியாகவோ தீவிரவாதியாகவோ பிறப்பதில்லை. சமூக அமைப்பின் குறைபாட்டினாலேயே ஒரு மனிதன் குற்றவாளியாக உருமாறுகிறான், சமூக அவலத்தின் அநீதிகளாலும் அதனால் ஏற்பட்ட தனிப்பட்ட இழப்புகளாலும் சமூகத்தின்மீது ஆத்திரம் கொள்ளும் தனிப்பட்ட நபரின் இயலாமையையும் கோபத்தையும் தமக்குச் சாதகமாக ஆளும் வர்க்கமும் அரசு இயந்திரமும் எவ்வாறு பயன்படுத்திக்கொள்கிறது என்பதை இந்தத் தொடர் மிகச் சரியாக வெளிப்படுத்துகிறது. தனிப்பட்ட இழப்புகளுக்காகக் குற்றவாளிகளாக மாறும் சமநிலையற்ற மனிதர்களை, தனிப்பட்ட ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் அதிகாரவர்க்கத்தின் முகத்திரையை இந்தத் தொடர் கிழித்துவிடுகிறது.
வரலாற்று ஆவணம்
எந்தவிதச் சிறப்புத் திறமையுமற்றவர் என்று நம்பப்படும் ஹாதி ராம், அந்தக் குற்றத்துக்கான பின்னணியைத் தேடிச் செல்கிறார்.ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத நிகழ்வுகளும், ஒருவருக்கு ஒருவர் எவ்விதத் தொடர்புமற்று இருக்கும் நபர்களும், அவர்களுக்கு இடையிலிருக்கும் திடுக்கிடும் தொடர்புகளும் எப்படிப் பின்னிப் பிணைந்து, நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கின்றன என்பது ஹாதி ராமின் பயணத்தின் வழியே நமக்கு உணர்த்தப்படுகிறது. குற்றவாளிகளின் மூலத்தைத் தேடிச் செல்லும்போது, அவர்கள் குற்றவாளிகளாக மாறியதற்கான காரணங்களின் வழியே நாட்டின் சமகால அரசியல் நிகழ்வுகளும், வரலாற்றின் கறுப்புப் பக்கங்களும் எந்தவித மதிப்பீடும், சார்பும் இன்றி ஆவணப்படுத்தப்பட்டு இருக்கிறது. சில வன்முறைக் காட்சிகள், கொடூரமாக உள்ளன. ஆனால், இது திணிக்கப்பட்ட வன்முறை அல்ல; ஆவணமாகப் பதிவுசெய்யப்பட்ட வரலாறு.
கவனத்தை ஈர்க்கும் கதாபாத்திரங்கள்
ஒரு சில கதாபாத்திரங்கள் நம் கவனத்தை வெகுவாக ஈர்க்கின்றன. லட்சியப் பத்திரிகையாளராக ஊடக வாழ்வில் தனது பயணத்தைத் தொடங்கி, காற்று எந்தப் பக்கம் வீசினாலும் அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வித்தையில் தேர்ச்சிபெற்ற சஞ்ஜிவ் மெஹ்ரா கதாபாத்திரமாக நீரஜ் கபி தத்ரூபம் காட்டியுள்ளார். அதீதப் பதற்றத்துக்கு உள்ளாகும் அவருடைய மனைவி டோலி மெஹ்ராவாக சுவாஸ்திகா முகர்ஜி சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். தன்னுடைய கணவரின் துரோகத்தை உணரும் தருணத்தில் அவர் வெளிப்படுத்தும் உணர்வு அசலானது. உண்மையை நேர்மையாகத் தேடும் நிருபரான சாரா மாத்யூஸ் பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘நிஹாங்கா லிரா தத்’ சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இருப்பினும், இந்தத் தொடரின் நாயகன் யார் என்று கேட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி ஹாதி ராம் பாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெய்தீப் அஹ்லவத் பெயரைத்தான் சொல்ல வேண்டும்.
தொடரின் நாயகன்
ஹாதி ராமின் கதாபாத்திரம் பன்முகத் தன்மை கொண்டது. மேலதிகாரிகளால் ஏளனத்துக்கு உள்ளாக்கப்படும் காவல் ஆய்வாளராக, அன்பு நிறைந்த மென்மையான கணவராக, பதின்பருவத்து மகனைச் சமாளிக்கும் வழி தெரியாத உறுதியற்ற தந்தையாக அவர் வெளிப்படுத்தி இருக்கும் நடிப்பு பல தேசிய விருதுகளுக்குச் சமமானது. தன்னிடம் வழங்கப்பட்டிருக்கும் முக்கியமான வழக்கை எப்படியாவது முடிவுக்குக்கொண்டு வர எடுக்கும் முயற்சிகளின்போது அவர் வெளிப்படுத்தும் இயலாமையும் கோபமும் அக்கறையும் நிறைந்த உணர்ச்சிகள் அற்புதம். நாயகனுக்கான எந்தவிதத் தோற்றமும் இல்லாத அவரைவிட யாராலும் ஹாதி ராம் கதாபாத்திரத்துக்குத் தேவையான வலுவை அளித்திருக்க முடியாது. அம்மைத் தழும்புகள் நிறைந்த அவருடைய முகத்தின் ஒவ்வொரு தழும்பும் ஒவ்வொரு உணர்ச்சியை வெளிப்படுத்துகிறது. அந்த வழக்கு விசாரணையில் அவருக்கு உறுதுணையாக இருக்கும் காவலர் அன்சாரியாக நடித்திருக்கும் இஷ்வாக் சிங்கும் தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார், மதத்தின் பெயரால் அவர் நிந்திக்கப்படும்போதும் சந்தேகக் கண்களால் பார்க்கப்படும்போதும் அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் சமூகத்தை ஏளனம் செய்கின்றன.
இயக்குநரின் ஆளுமை
ஒன்பது அத்தியாயங்களைக்கொண்ட இந்த ‘பாதாள் லோக்’ தொடரின் ஆக்கமும், அதன் திரைமொழியும் ஒரு நேர்த்திமிக்க திரைப்படத்தை மிஞ்சிய ஒன்றாக உள்ளன. இரண்டு மணிநேரத் திரைப்படங்களை எடுப்பதற்கே இன்றைய இயக்குநர்கள் தடுமாறும் சூழலில், கிட்டத்தட்ட எட்டு மணிநேரத்துக்கு நீளும் இந்தத் தொடரை, இறுதிவரை விறுவிறுப்புடனும் பிடிப்புடனும் இருக்குமாறு அதன் இயக்குநர்களான அவினாஷ் அருணும் புரோஷித் ராயும் உருவாக்கியிருப்பது அவர்களுடைய திரை மொழி ஆளுமைக்குச் சான்று. இந்தத் தொடரில் அவர்கள் பேசிய விஷயம் இந்தியத் திரைப்படங்களால்கூடப் பேச முடியாத ஒன்று. ஒருவேளை இது திரைப்படமாக எடுக்கப்பட்டு இருந்தால், வெள்ளித்திரைக்கு வராமலேயே முடங்கியிருக்கும்.
துணிச்சலுக்குப் பஞ்சமில்லை
சுயமரியாதையின்றி வாழ நிர்பந்திக்கப்படும் ஒடுக்கப்பட்ட சாதியினர், எதிர்ப்பவரின் குடும்பத்தின் மீது ஏவப்படும் பாலியல் வன்முறைகள், குடும்ப கௌரவத்தின் பெயரில் நிகழ்த்தப்படும் ஆணவ வல்லுறவுகள், மாட்டிறைச்சி வைத்திருந்தாரோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஐந்து வயது சிறுவனின் கண்முன்னே கொல்லப்படும் குடும்பத்தினர், ஏளனத்துக்கு உள்ளாக்கப்படும் வடகிழக்கு மகாணத்தவர்கள், அநாதையாகி ஆதரவற்றுத் திரியும் சிறுவர்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள், அரசியல் தேவைக்குப் பயன்படுத்தப்படும் சாதியத் தலைவர்கள், பாதிக்கப்பட்ட தம்முடைய சாதியினரைக் கூலிப்படையினராக மாற்றும் சாதியத் தலைவர்கள், அரசியல்வாதிகளின் சுயநலம், ஆளும் வர்க்கத்தின் பதவி வெறி, அதற்குத் துணை போகும் ஊடகங்கள் உள்ளிட்ட சமகால நிகழ்வுகளைப் பட்டவர்த்தனமாகச் சொல்வதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். இந்தத் தொடரில் அதற்குப் பஞ்சமே இல்லை.
தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT