Published : 15 Jul 2020 06:40 PM
Last Updated : 15 Jul 2020 06:40 PM
கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணிக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது கோவை மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதிலும் நிவாரண நடவடிக்கைகளிலும் துணிச்சலாகக் களம் இறங்கிய ஆட்சியருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதால் மாவட்ட நிர்வாகமும் அதிர்ச்சியடைந்திருக்கிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் மாவட்ட ஆட்சியரும் இவர்தான்.
மார்ச் இறுதி வாரத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டவுடனே மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகம் வாரியாகக் கள ஆய்வுகள் செய்து, மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குதலில் நேரடிக் கவனம் செலுத்தினார் கோவை ஆட்சியர் ராசாமணி. இரவு, பகல் பாராது அரசு அலுவலர் ஆய்வுக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தினார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் இருக்கும் நாட்களில், அவர் தலைமையில் நடக்கும் கூட்டங்களில் ஆட்சியர் பங்கேற்பார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டம் உட்பட எல்லாக் கூட்டங்களிலும் ஆட்சியர் எனும் முறையில் அர்ப்பணிப்புடன் பங்கேற்றார்.
சென்னையில் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நேரத்தில் அங்கிருந்த வெளியூர் மக்கள் கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்குத் திரும்பினர். இதனால் கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கரோனா தொற்று அதிகரித்தது. இந்தச் சூழலில் தன் கீழ்நிலை அதிகாரிகளைத் தாண்டி, தானே களத்தில் இறங்கிப் பணிகளைச் செய்ய ஆரம்பித்தார் ஆட்சியர் ராசாமணி. தொடர்ந்து பல்வேறு ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுவந்தார்.
குறிப்பாக, ஆனைகட்டி, வாளையாறு, நடுப்புணி, கோபாலபுரம் என கேரள - தமிழக எல்லைப் பகுதியில் உள்ள மக்கள் கரோனா பொதுமுடக்கத்தால் படும் அவஸ்தைகளைக் கவனத்துடன் கேட்டு பாலக்காடு மாவட்ட ஆட்சியருடன் பேசி மக்களுக்கு ஏதுவாக நடவடிக்கைகளை ஆட்சியர் உடனடியாக எடுத்தது பலரது பாராட்டையும் பெற்றது.
கடந்த வாரம் கரோனா பெருமளவு பாதித்திருந்த செல்வபுரம் பகுதிக்கு நேரடியாகச் சென்ற ஆட்சியர், அங்கு ஒரு நிறுவனம், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இயங்குவதைக் கண்டுபிடித்தார். அங்கேயே அதிகாரிகளையும், அந்த நிறுவனத்தின் நிர்வாகிகளையும் கடுமையாக எச்சரித்தார். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் அதிகாரிகளுக்குக் களத்திலேயே உத்தரவிட்டார். இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது.
அப்போது, ‘ரொம்ப சாதுவாகத் தெரியும் ஆட்சியருக்கு இப்படிக்கூட கோபம் வருமா?’ என்று வெளிப்படையாகவே பொதுமக்கள் பேசியதைக் கேட்க முடிந்தது. கோவையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பெரும்பாலான இடங்களுக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வும் நடத்தியிருக்கிறார். இதனால் தொற்று பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலீஸ் உயரதிகாரிகள், மாநகராட்சி உயரதிகாரிகளின் ஆய்வுக் கூட்டத்தை ஆட்சியர் நடத்தினார். அதன் பிறகு, தானே தொற்றுப் பரிசோதனை செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. இன்று காலை அவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் அலுவலக வட்டாரமே பரபரக்கிறது. இதனால் கோவையில் இன்று காலை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற இருந்த இரண்டு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
பொதுவாகவே எப்போதும் செய்தியாளர்கள் போனில் கூப்பிட்டால் உடனே எடுத்துப் பேசுவார் ஆட்சியர் ராசாமணி. முக்கியக் கூட்டங்களில் இருந்தால் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரியப்படுத்திவிட்டு பிறகு லைனில் வரக்கூடியவர். ‘இந்து தமிழ் திசை’யில் வெளியான செய்திகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் உடனே படித்துவிட்டு, நன்றி தெரிவிப்பார்.
கடும் உழைப்பாளி, தீவிரமாகக் களப்பணியாற்றுபவர் என்று மக்களிடம் பெயரெடுத்த ஆட்சியர் ராசாமணி, விரைவில் குணமடைய வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனையாக உள்ளது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT