Published : 15 Jul 2020 03:04 PM
Last Updated : 15 Jul 2020 03:04 PM
ஒரு கதையைச் சொன்னால், அந்தக் கதை நன்றாக இருக்கிறதா, சுமாரான கதையா, ஒன்றுக்குமே உதவாத கதையா என்பதைக் கூட பலராலும் கணித்துச் சொல்லிவிடமுடியாது. ஆனால், கதையைக் கேட்டதும், அந்தக் கதை ஏற்கெனவே படமாக வந்த விவரம், எந்த ஆண்டு வந்தது, யாரெல்லாம் நடித்திருந்தார்கள், இந்தப் படம் போலவெ இந்தி மொழியில் வந்த படம் என்ன, தெலுங்கில் வந்த படம் தோல்விப்படமாக அமைந்ததற்குக் காரணம் என்ன என்கிற விவரங்களை புட்டுப்புட்டு வைப்பவரைப் பார்த்திருக்கிறீர்களா? அவர் பெயர்.. கலைஞானம்.
கடந்த 60 வருடத் திரையுலகில், எத்தனையோ படங்களின் கதைக்கும் கதை மாற்றத்துக்கும் காட்சி அமைப்புக்கும் ஏதோ ஒருவகையில் இவரின் பணி இருக்கும். படத்தின் டைட்டிலில் பெயர் வரும், வராமலும் இருக்கும். ஆனாலும் கலைஞானத்தின் கதைத் திறனும் காட்சியை அப்படியே விரிவாக்கி விவரிக்கிற விதமும் திரையுலகில் ரொம்பவே பிரபலம்.
மதுரை உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள எழுமலை எனும் சின்னஞ்சிறிய கிராமத்தில் இருந்த பாலகிருஷ்ணனுக்கு சிறுவயதில் இருந்தே நடிப்பிலும் கலையிலும் ஆர்வம். இளம் வயதிலேயே நாடகத்தில் சேர்ந்தார். திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஏவிபி.ஆசைத்தம்பி எழுதிய நாடகத்தில் முதன்முதலாக நடித்தார். அந்த நாடகம்... ‘வாழ்க்கை வாழ்வதற்கே’. அப்போது அவருக்கு 18 வயது.
பிறகு பல நாடகங்களில் நடித்தார். சுருள்கிராப்பும் செக்கசெவேனும் முகமும் அந்த முகத்தில் எப்போதும் குடிகொண்டிருக்கும் சிரிப்பும் பாலகிருஷ்ணனுக்கு ப்ளஸ் பாயிண்டாக இருந்தன. கலைஞர் கருணாநிதியின் ‘விஷக்கோப்பை’ முதலான நாடகங்களில் நடித்தார்.
நாடகத்தில் ஹீரோ, வில்லன் என இவர் இரண்டுவிதமாகவும் நடித்தார். கொஞ்சம் கொஞ்சமாக திரைத்துறையின் பக்கம் வந்தார். 66ம் ஆண்டு, ‘காதல் படுத்தும்பாடு’ படத்துக்கு திரைக்கதை எழுதினார். வசனமும் எழுதினார். முதல் படத்திலேயே எல்லோராலும் கவனிக்கப்பட்டார். சிறுவயதில் இருந்தே இவர் பார்த்த படங்களும் அந்தப் படங்களை உள்வாங்கிக் கொண்ட விஷயங்களும்தான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவும் ஜெயிக்கவும் காரணமாக இருந்தது.
தேவர் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு கதை எழுதுபவர் என்று தனியே எவரும் இருக்கமாட்டார்கள். டைட்டிலில் கூட ‘தேவர் பிலிம்ஸ் கதை இலாகா’ என்றுதான் போடுவார்கள். ஒருகட்டத்தில், தேவரைப் போய் பார்த்தார். அவர் கேட்ட கேள்விக்கெல்லாம் இவர் சொன்ன பதிலும் சினிமா ஞானமும் தேவருக்கு ரொம்பவே பிடித்துப்போய்விட்டது. சேர்த்துக் கொண்டார்.பின்னர், தேவர் பிலிம்ஸ் கதை இலாகாவில் இணைந்தார்.
பின்னர், இயக்குநர்களுக்கு கதை கொடுப்பார். திரைக்கதை அமைத்துத் தருவார். வேறு யாரோ எழுதிய கதையை படமாக்கும் போது, அந்தக் கதையில் குழப்பமோ, நம்பிக்கையின்மையோ இயக்குநருக்கோ நடிகருக்கோ தயாரிப்பாளருக்கோ ஏற்படும். ‘படம் எடுக்கறதை நிறுத்துவோம்’ என்பார்கள். ‘கதையைக் கொஞ்சம் சரிபண்ணனும்’ என்று முடிவெடுப்பார்கள். அப்போது ஒரே சாய்ஸ்... ‘கூப்பிடு பாலகிருஷ்ணன் அண்ணனை’ என்பார்கள். 200க்கும் மேற்பட்ட படங்களில் கதை, வசனம், திரைக்கதை என ஏதேனும் ஒரு முத்திரையைப் பதித்திருக்கிறார்.
ரொம்பகாலமாக பாலகிருஷ்ணன் என்று இயற்பெயரில்தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ரஜினி, விஜயகுமார் நடித்த ‘ஆறு புஷ்பங்கள்’ படத்திலும் இயக்கம் பாலகிருஷ்ணன் என்றுதான் வந்தது. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய ‘குறத்தி மகன்’ படத்தில் மூலக்கதை : கலைஞானம் (பாலகிருஷ்ணன்” என்று இரண்டு பேரையும் டைட்டிலில் போட்டார்கள். பின்னர், கலைஞானம் என்று வைத்துக்கொண்ட பெயர் பிரபலமாயிற்று. இன்று வரைக்கும் கலைஞானம் என்ற பெயர், தலைமுறைகள் கடந்தும் எல்லோரும் அறிந்த பெயராகத் திகழ்கிறது.
திரைக்கதையில் எவரும் எட்டமுடியாத அளவுக்கு பேரெடுத்த பாக்யராஜின் மரியாதைக்கு உரியவராக ஒருபக்கம், பாரதிராஜாவுக்கு நெருக்கமாக இன்னொரு பக்கம் என பல இயக்குநர்களின் கதை விவாதங்களில், கலைஞானத்துக்கும் ஒரு இடம் இருக்கும்.
இந்த சமயத்தில், ‘பைரவி’ படத்தைத் தயாரித்தார். அதுவரை வில்லனாக நடித்துக்கொண்டிருந்த ரஜினிக்கு, பாஸிட்டீவ் ரோல் கொடுத்தார். ஹீரோ அந்தஸ்து வழங்கினார். ஸ்ரீகாந்த் வில்லத்தனம் செய்தார். ‘புதுப்புது அர்த்தங்கள்’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்த கீதாவை அந்தப் படத்தில் அறிமுகப்படுத்தினார். இதனால் கீதா, ‘பைரவி’ கீதா என்றே அழைக்கப்பட்டார். படத்தை இங்கே அங்கே என கடன் வாங்கித்தான் தயாரித்தார்.
கடைசியில், படத்தை ரீரிக்கார்டிங் செய்யக்கூட பணமில்லை. அப்படி இப்படிப் புரட்டி ஒருநாள் ரிக்கார்டிங் தியேட்டர், சம்பளம் என ஒப்பேற்றிவிடலாம் என்பதால் படத்துக்கு இசையமைத்த இளையராஜாவிடம், ‘ஒரேநாள்ல ரிக்கார்டிங்கை முடிச்சிக் கொடு ராஜா’ என்றார். ‘அண்ணே, படம் நல்லா வந்திருக்குண்ணே. ஒரு மூணுநாளாவது வேணும்ணே’ என்றார். இருவருக்கும் வாக்குவாதம். ‘அட, தியேட்டருக்கு, மியூஸிக் வாசிக்கறவங்களுக்கெல்லாம் பணம் கொடுக்க வேணாமா? எங்கிட்ட இல்லப்பா. அதனாலதான் சொல்றேன்’ என்று கலைஞானம் சொல்ல, ‘அவ்ளோதானேண்ணே. தியேட்டர் வாடகை, இன்ஸ்ட்ரூமெண்ட் வாசிக்கறவங்களுக்கு சம்பளம் எல்லாம் நான் பாத்துக்கறேன். என்னோட சம்பள பாக்கியைக் கூட தரவேணாம்ணே. மூணு நாள் வேணும் பின்னணி இசைக்கு. நாலாம் நாள், எல்லாம் ரெடியா இருக்கும், போயிட்டு வாங்கண்ணே’ என்று இளையராஜா சொல்லியதுடன், எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்தார். படத்தின் பின்னணி இசையும் கவனத்தை ஈர்த்தது.
இந்தப் படத்தின் வீச்சு எங்கேயோ போகப்போகிறது என உணர்ந்த கலைப்புலி தாணு, தமிழகத்தின் முக்கால்வாசி ஏரியாக்களை விநியோகம் செய்தார். விளம்பரத்தில், போஸ்டர்களில் ‘சூப்பர் ஸ்டார்’ என்று பட்டம் கொடுத்தார். கலைஞானத்தின் ‘பைரவி’யில்தான் ரஜினிக்கு ‘சூப்பர் ஸ்டார்’ என்று தாணுவால் பட்டம் கொடுக்கப்பட்டது.
சிவாஜியை வைத்து ‘மிருதங்க சக்கரவர்த்தி’ எடுத்தார். பின்னர், ‘ராஜரிஷி’எடுத்தார். மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்தித்தார். ஆனாலும் எவரிடமும் உதவியும் கேட்கமாட்டார். தன் சோகத்தை எவரிடமும் காட்டிக்கொள்ளவும் மாட்டார்.
‘எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். எப்படி இருக்கீங்க என்று கேட்டால், ‘செளக்கியமா இருக்கேன்’ என்பார். அதனால் அவரின் கஷ்டம் என்ன என்பது எனக்குத் தெரியாமலே போய்விட்டது. தெரிந்திருந்தால், அன்றைக்கே, பத்து படங்களில் நடித்துக் கொடுத்திருப்பேன்’ என்கிறார் ரஜினி.
நாடகங்களில், இளம் வயதில் நடித்து வந்த கலைஞானத்தை திரையுலகில் நடிக்க வைத்தவர் கே.பாக்யராஜ். திரையுலகில் எல்லோருக்கும் தெரிந்த கலைஞானத்தை ‘இது நம்ம ஆளு’ படத்தில், ‘கிருஷ்ணய்யர்’ கேரக்டர் மூலமாக ரசிகர்கள் மத்தியிலும் அறிமுகப்படுத்தினார் பாக்யராஜ்.
தன் படங்களில் பெரிய அளவில் பங்கேற்காத போதும் கலைஞானத்துக்கு கடந்த வருடம் பாராட்டு விழாவை நடத்தினார் பாரதிராஜா. இந்தப் பாராட்டுவிழா கலைஞானத்தின் வாழ்வில் மிகப்பெரியதொரு விஷயத்தைக் கொண்டு சேர்த்தது. விழாவில் கலைஞானத்தின் கதை சொல்லும் திறமையை, திரைக்கதை அமைக்கும் நேர்த்தியை, வசனம் சொல்லும் புத்திசாலித்தனத்தையெல்லாம் பட்டியலிட்டுக் கொண்டே வந்த நடிகர் சிவகுமார்... ‘இத்தனைப் பெருமைகளும் திறமையும் இருந்தும் கூட, இன்று வரைக்கும் கலைஞானம் வாடகை வீட்டில்தான் இருக்கிறார்’ என்று சொல்ல... இறுதியில் பேசவந்த ரஜினி, ‘நான் வாங்கித் தருகிறேன்’ என்று அறிவித்தார்.
அதன்படி, வீடு வாங்கியும் தந்தார். கடந்த வருடம் 90வது பிறந்தநாள் கலைஞானத்துக்கு. இத்தனை வருட காலம் திரையுலகில், எத்தனையோ படங்களில் பணியாற்றி, தயாரித்து, இயக்கி, வசனம் எழுதி, விவாதத்தில் பங்கு கொண்ட கலைஞானம்... ரஜினி கொடுத்த வீட்டில் இருக்கிறார் இப்போது.
கலைஞானம் ஐயாவுக்கு 91வது பிறந்தநாள் இன்று (15.7.2020).
‘கதை ஞானி’ கலைஞானம் ஐயாவைப் போற்றுவோம்; வணங்குவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT