Published : 15 Jul 2020 12:30 PM
Last Updated : 15 Jul 2020 12:30 PM
உறவுகளால்தான் எல்லாப் பிரச்சினைகளும் சிக்கல்களும் துன்பங்களும் வரும் என்பதை, உறவு நெருக்கமும் இணக்கமும் இருந்த அந்தக் காலத்திலேயே படமாக எடுத்திருக்கிறார்கள். உறவு, காதல், திருமணம், சொத்து என்பதை வைத்துக்கொண்டு, மிகப்பெரிய வாழ்க்கைப் பாடமே நடத்தியிருக்கிறார் இயக்குநர் கே.சங்கர். ஆண்டுகள் விறுவிறுவென ஓடிக்கொண்டே இருந்தாலும் இந்தப் படத்தையும் படத்தின் தாக்கத்தையும் மறந்துவிடவே முடியாது. அந்தப் படம்... ‘பாதகாணிக்கை’.
1962ம் ஆண்டு வெளியான படம்தான் ‘பாதகாணிக்கை’. ஆனாலும் வாழ்க்கையும் உறவுப் பிணக்குகளும் காதலும் ஏமாற்றமும் திருமணமும் எதிர்பார்ப்பும் காசுபணமும் சொத்தும் எப்போதும் மாறாதுதானே. அப்படியொரு பிக்கல்பிடுங்கல் விஷயத்தைத்தான் பாடமாகச் சொல்லாமல் படமாக நம் கண்ணுக்கு முன்னே தந்திருக்கிறார் இயக்குநர் கே.சங்கர்.
எஸ்வி.சுப்பையாவுக்கு முதல் தாரம் இறந்துவிடுகிறார். அவருக்கு அசோகன், ஜெமினி என இரண்டு மகன்கள். இரண்டாம் தாரமாக வந்த எம்.வி.ராஜம்மாதான் தாயென பாசம் காட்டி வளர்க்கிறார்.
சுப்பையாவின் முதல் தாரத்தின் சகோதரர் எம்.ஆர்.ராதா. ஹீரோக்களின் தாய்மாமன். இவருக்கு விஜயகுமாரி மகள். சந்திரபாபு மகன். இன்னொரு மகளும் உண்டு. மனைவி சி.கே.சரஸ்வதி.
எம்.வி.ராஜம்மாவின் சகோதரர் மகள் சாவித்திரி. ஆக, ஜெமினி கணேசனுக்கு சாவித்திரியும் முறைப்பெண். விஜயகுமாரியும் முறைப்பெண்.
அசோகனுக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவி இறந்துவிடுகிறார். இவரின் மகன் மாஸ்டர் கமலஹாசன். எப்படியாவது தன் இரண்டு மகள்களையும் அவர்கள் வீட்டில் திருமணம் செய்து கொடுத்து, சொத்துகளை அபகரித்துவிடவேண்டும் என்பது எம்.ஆர்.ராதாவின் வில்லத்தன பிளான்.
விஜயகுமாரி, ஜெமினியை விரும்புகிறார். ஆனால் ஜெமினியும் சாவித்திரியும் விரும்புகிறார்கள். ஒருகட்டத்தில், அசோகனுக்கும் எம்.ஆர்.ராதாவின் மகளுக்கும் திருமணம் நடக்கிறது. அதையடுத்து அவரின் வில்லத்தனமும் ஆரம்பிக்கிறது.
எம்.ஆர்.ராதாவின் குணத்தைப் புரிந்திருக்கும் எஸ்.வி.சுப்பையா, தன் காலத்துக்குப் பிறகு சொத்துகள் மொத்தத்தையும் சூறையாடிவிடுவார்கள் எனப் பயந்து, சொத்துகளை தன் மனைவி பெயரில், அதாவது இரண்டாம் மனைவி பெயரில், அதாவது அசோகன், ஜெமினியின் சித்தி பெயரில் எழுதிவைத்துவிடுகிறார்.
இந்த விஷயம் தெரிந்ததும் வீடு களேபரமாகிறது. அசோகன் எம்.ஆர்.ராதாவின் வீட்டுக்கே சென்றுவிடுகிறார். துக்கித்துப் போகிறது வீடு. ஒருபக்கம் விஜயகுமாரியை திருமணம் செய்ய மறுக்கிறார் ஜெமினி. இன்னொரு பக்கம் சொத்துகள் அசோகனின் பெயரில் எழுதவில்லை. போதாக்குறைக்கு, எம்.வி.ராஜம்மாவின் சகோதரர் மகள் சாவித்திரிக்கு திருமணம் செய்துவைக்க நினைக்கிறார்களே... என்று கோபம்.
சொத்து விஷயம் கோர்ட்டுக்குப் போக முடிவு செய்யப்படுகிறது. இதில் நொந்துபோகிறார் எஸ்.வி.சுப்பையா. ஏற்கெனவே ஒரு பஞ்சாயத்து. சொத்துப் பஞ்சாயத்து. இதில் தீர்ப்பு சொல்லும்போது, ‘சொத்துக்காக கோர்ட்டுக்குப் போனால் அவன் பையனே இல்லை. அப்படியொரு நிலைமை வந்தும் உயிரோடு இருந்தால் அவன் அப்பனே இல்லை’ என்று சொல்லியிருப்பார் சுப்பையா. இதில் அந்த அப்பாவும் மகனும் சேர்ந்துவிடுவார்கள். இதெல்லாம் நினைவுக்கு வந்து இம்சை பண்ணும்.
அதேபோல், எம்.ஆர்.ராதாவின் பேச்சைக் கேட்டு நடந்து கொண்டாலும் மனதில் உளைச்சலுடனும் கவலையுடனும் இருப்பார் அசோகன். கோர்ட்டுக்குக் கிளம்பும் வேளையில் வாசலுக்கு வருவார்கள் இருவரும். நெஞ்சுவலி வந்து மயங்கிச்சரிவார். இறப்பார் எஸ்.வி.சுப்பையா. அதைப் பார்த்த அசோகன் ஓடிவருவார். லாரியில் அடிபட்டு காலை இழப்பார்.
ஆஸ்பத்திரியில் இருந்து கிளம்பி தற்கொலை செய்து கொள்ள முனைவார் அசோகன். அவரைக் காப்பாற்றி வீட்டுக்குக் கூட்டிவருவார் ஜெமினி. மனம் திருந்திய அசோகன், ஆனால் மனம் மாறாமல் மகளை அனுப்பாதிருக்கும் எம்.ஆர்.ராதா.
இந்த நிலையில், ஊரிலிருக்கும் சாவித்திரியின் அப்பா படுத்தபடுக்கையாகிக் கிடப்பார். இங்கே, கால் இழந்த அசோகனுக்கு அவன் மனைவி வரவேண்டுமெனில், விஜயகுமாரியை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று எம்.ஆர்.ராதா கண்டீஷன் போட, அசோகனின் கஷ்ட நிலையை மாற்ற வேண்டி, தன் அண்ணன் மகள் சாவித்திரியை விட்டுக்கொடுப்பார் ராஜம்மா. விஜயகுமாரியை திருமணம் செய்துகொள்ள ஜெமினியை வலியுறுத்துவார். ஒருவழியாக, மனமே இல்லாமல் சம்மதிப்பார் ஜெமினி.
அங்கே, சாவித்திரியின் அப்பா இறந்துவிடுவார். தன் எதிகாலத்தையொட்டி, துணையே இல்லாத சாவித்திரி இங்கு வருவார். திருமண ஏற்பாடுகள் நடப்பதைப் பார்ப்பார். அதிர்ந்து கலங்குவார். பிறகு சூழல் புரிந்து விட்டுக்கொடுக்கத் தயாராவார். அவரின் மனதை விஜயகுமாரி அறிந்துகொள்வார்.
அப்போது, ‘தாத்தா இல்லையே’ என வருந்துவார் சின்னப்பையன் கமல். ‘போய் ஆத்துல குதி. உங்க தாத்தாகிட்ட போகலாம்’ என்று எம்.ஆர்.ராதா சொல்ல, ஆற்றில் குதிக்க ஓடுவார் கமல். இதை அறிந்து, ஜெமினி ஓடுவார். விஜயகுமாரி தற்கொலைக்காக ஓடுவார். அங்கே கமலை நிறுத்தி விஜயகுமாரி கேட்க, கமல் விவரம் சொல்ல, கமலைக் காப்பாற்ற விஜயகுமாரி ஆற்றில் குதிக்க, இருவரையும் காப்பாற்றுவார் ஜெமினி.
இறுதியில் எல்லா விவரமும் சொல்லி, இருவரையும் சேர்த்துவைத்துவிட்டு இறப்பார் விஜயகுமாரி. எல்லோரும் ஒற்றுமையுடன் வாழத் தொடங்குவார்கள் என்பதுடன் நிறைவடையும்.
உள்ளுக்குள், உள்ளுக்குள்... என்று ஏகப்பட்ட சிக்கல்களையும் பிணக்குகளையும் உறவுகளுக்குள் வைத்துக்கொண்டு கதை பண்ணியிருப்பதும் அதைப் படமாக்குவதும் லேசுப்பட்ட விஷயமா என்ன? எம்.எஸ்.சோலைமலை கதை வசனம் எழுதியிருப்பார். கண்ணதாசன் பாடல்கள் எழுத, மெல்லிசை மன்னர்கள் இசையமைத்திருப்பார்கள். தம்புவின் ஒளிப்பதிவு, கருப்புவெள்ளைப் படத்தை கண்களில் ஒற்றிக்கொள்ளும்படியாக அமைந்திருக்கும்.
சரவணா பிலிம்ஸ் ஜி.என்.வேலுமணி தயாரிக்க, கே.சங்கர் இயக்கினார். எஸ்.வி.சுப்பையாவும் எம்.வி.ராஜம்மாவும் பிரமாதமான நடிப்பை வழங்கியிருப்பார்கள். அசோகன் இயல்பான நடிப்பில் அசத்தியிருப்பார். ஜெமினியின் மென்மையான நடிப்பும் சாவித்திரி, விஜயகுமாரியின் பாந்தமான நடிப்பும் மிகச்சிறப்பு.
சந்திரபாபுவின் காமெடி ரசிக்கவைத்தது. எம்.ஆர்.ராதா எனும் நடிப்பு அசுரனைச் சொல்லவா வேண்டும்? பட்டாளத்து வீராச்சாமி எனும் கேரக்டர். மிலிட்டிரியில் வேலை பார்த்துவிட்டு வந்தவர். ஆகவே, படம் முழுக்க, கால்களை ஒருமாதிரி தூக்கித்தூக்கி நடப்பதும் அவருடைய பாடி லாங்வேஜும் மிரட்டலாக இருக்கும். கே.சங்கரின் மிகச்சிறந்த படங்களில் ‘பாத காணிக்கை’க்கு தனியிடம் உண்டு.
சிறுவன் கமல்... படம் நெடுக, அவர் வரும் காட்சிகளில் எல்லாமே அசத்தியிருப்பார். சி.கே.சரஸ்வதியை நக்கலடிப்பதும், எம்வி.ராஜம்மாவிடம் பாட்டி பாட்டி என உருகுவதும், எம்.ஆர்.ராதா போல் குரல் மாற்றி நடித்துக் காட்டுவதும், க்ளைமாக்ஸில், ‘தாத்தா சொன்னதையே யாருமே செய்யல’ என்று பாட்டியிடம், அப்பாவிடம், சாவித்திரியிடம், விஜயகுமாரியிடம் என்று வரிசையாகாச் சொல்லுவதும் என பிரமாதப்படுத்தியிருப்பார் கமல்.
உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட ‘பாத காணிக்கை’யின் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. ‘காதல் என்பது வரை’ பாட்டு ஒருவிதம். ‘சொன்னதெல்லாம் நடந்திடுமா சொல்லடி கிளியே’ என்றொரு பாடல் இன்னொரு விதம். ‘உனது மலர் கொடியிலே எனது மலர் கையிலே’ என்றொரு பாடல். சந்திரபாபுவுக்கு ‘தனியா தவிக்கிற வயசு’ என்றொரு பாடல்.
’அத்தை மகனே போய் வரவா’ என்றொரு பாடல். இது சாவித்திரிக்கு. ‘பூஜைக்கு வந்த மலரே வா’ பாடல். இது விஜயகுமாரிக்கு. க்ளைமாக்ஸில் ‘எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன்’ என்ற பாடல். அந்தக் காலத்தின் தோற்றுப் போன காதலர்கள் எல்லோருக்கும் இந்தப் பாடல்தான் ஆறுதல்.
படத்தின் மிகப்பெரிய ஹைலைட் பாடல்... வாழ்க்கையை தத்துவமாக, எளிய வரிகளில், நான்கரை நிமிடப் பாடலுக்குள் சாறு பிழிந்து கொடுத்திருப்பார் கண்ணதாசன். கலங்க வைத்திருப்பார் டி.எம்.எஸ். ‘வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?’ என்கிற பாடல், காலம் கடந்தும் இன்றைக்கும் காயப்பட்ட மனங்களின் மருந்தெனத் திகழ்கிறது. இன்றைக்கும் கண்ணதாசனைப் புகழ்வதற்கும் பெருமிதம் கொள்வதற்குமான எத்தனையோ பாடல்களில் ஒரு பாடலாக, ‘வீடு வரை உறவு’ அமைந்திருக்கிறது. அசோகனின் பண்பட்ட நடிப்பையும் இந்தப் பாடலையும் பாடல் வரிகளையும் மறக்கவே முடியாது.
1962ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி வெளியானது ‘பாத காணிக்கை’. வெளியாகி 58 ஆண்டுகளாகிவிட்டன. ஆனாலும் உறவுகளின் சூட்சும சதியால் துக்கித்துக் கிடக்கிறவர்களின் நெஞ்சங்களுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டே இருக்கிறது ‘பாத காணிக்கை’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT