Last Updated : 14 Jul, 2020 11:50 AM

 

Published : 14 Jul 2020 11:50 AM
Last Updated : 14 Jul 2020 11:50 AM

‘சொர்க்கம் மதுவிலே’, ‘ஆழக்கடலில் தேடிய முத்து’; கமலின் ‘சட்டம் என் கையில்’ வெளியாகி 42 ஆண்டுகள்!

இரட்டை வேடம் என்றாலே ஆள்மாறாட்டமும் அதைக் கொண்டு நடத்தப்படும் திருப்பங்களும் ஏராளம் உண்டு.டபுள் ஆக்ட் என்றாலே நூற்றுக்கு தொந்நுற்று ஒன்பது சதவிகிதம், அண்ணன் தம்பியாகத்தான் கதை படைப்பார்கள் தமிழ் சினிமாக்காரர்கள். இருவரும் பிரிந்து வளருவதும் பின்னர் சேர்ந்து வில்லன்களை அழிப்பதும் என்பதெல்லாம் எல்.கே.ஜி. குழந்தைகள் கூட, மொத்தக் கதையையும் விவரித்து வாட்ஸ் அப் தட்டிவிடுகிற காலம் இது. ஆனால், எப்படிப் பிரிகிறார்கள் என்பதும் யார் பிரித்தார்கள் என்பதும் இறுதியில் வில்லத்தனம் செய்பவர் என்பதும்தான் படத்தை ‘அட’ போட வைத்தது. ‘ஆ’ என விழிகள் விரியச் செய்தன. அதுதான் ‘சட்டம் என் கையில்’.

1978ம் ஆண்டு வெளியானது ‘சட்டம் என் கையில்’. ஒரு பொழுதுபோக்குப் படத்தில் என்னென்ன அம்சமெல்லாம் இருக்கவேண்டும் என்று தமிழ் சினிமா வரையறைத்து நூல் பிடித்துச் சென்றதோ... அத்தனை விஷயங்களையும் உள்ளடக்கி கதை பண்ணுவதில் கெட்டிக்காரர் என்று பேரெடுத்தவர் இயக்குநர் டி.என்.பாலு. இந்தப் படத்தை இயக்கியவர் இவர்தான். எழுபதுகளில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த இயக்குநர். தொடர்ந்து ஜெய்சங்கரை வைத்து நிறைய படங்கள் தந்தவர்.

தேங்காய் சீனிவாசன் - புஷ்பலதா, அசோகன் - காந்திமதி. தேங்காய் சீனிவாசன் வக்கீல். அசோகன் சின்னச்சின்ன திருட்டுகளில் ஈடுபடுபவர். ஒரு திருட்டுக் குற்றத்தில் மாட்டிக் கொள்ளும் அசோகனுக்கு தன் வாதத் திறமையால் தண்டனை வாங்கிக் கொடுப்பார் தேங்காய் சீனிவாசன். ‘என்னை விட்டுவிடுங்கள். நான் ஜெயிலுக்குப் போய்விட்டால் என் குழந்தை அவமானப்படும். அவனையும் திருடன் என்று உலகம் பேசும்’ என்று கெஞ்சுவார். ‘சட்டம் என் கையில் இருக்கிறது. நான் என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும்’ என்பார் தேங்காய் சீனிவாசன்.

அவரைப் பழிவாங்கத் திட்டமிடுவார் அசோகன். அப்போது புஷ்பலதாவுக்கு குழந்தை பிறக்கும். இரட்டைக் குழந்தைகள். அதிலொரு குழந்தையை தூக்கிக் கொண்டு போய்விடுவார் அசோகன். அந்தக் குழந்தைகள்தான் படத்தின் ஹீரோக்கள். அந்த ஹீரோ கமல். தேங்காய் சீனிவாசனிடம் வளரும் கமல் வெளிநாட்டில் சென்று படிப்பார். அசோகனிடம் வளரும் கமல், திருட்டுகளில் ஈடுபடுவார்.

வெளிநாட்டில் இருந்து வரும் கமல், தன் வெளிநாட்டு காதலியுடன் வருவார். ஆனால் அவரை ஸ்ரீப்ரியாவுக்கு திருமணம் முடிக்க வீட்டார் முடிவு செய்திருப்பார்கள். திருட்டுக் கமல், ஒரு சந்தர்ப்பத்தில் ஸ்ரீப்ரியாவை சந்திக்க நேரிடும். இருவருக்கும் காதல் முளைக்கும். வெளிநாட்டுப் பெண்ணை கல்யாணம் செய்துகொள்ளக் கூடாது என்று தேங்காய் சீனிவாசன் எதிர்ப்பார். அந்தப் பெண்ணை மிரட்டி விரட்டி அனுப்புவார்.

அசோகனின் நிஜ மகன் ஸ்ரீகாந்த், படித்து இவர்களின் சகவாசமே இல்லாமல் நல்ல நிலையில் இருப்பார். அந்தக் காதலி கர்ப்பமாக இருக்க, ஸ்ரீகாந்த் அடைக்கலம் தருவார். காதலியைப் பிரிந்த கமல், மதுவுக்கு அடிமையாவார்.

இந்தக் களேபரங்களுக்கு நடுவே, தேங்காய் சீனிவாசனுக்கு கள்ளத்தனமாக உறவு இருக்கும். அந்தப் பெண்ணின் சகோதரர் சத்யராஜும் அவளும் இணைந்து பணம் பறிப்பார்கள். இதில் புஷ்பலதா ஒருகட்டத்தில் கொல்லப்பட, அந்தக் கொலைப்பழி இந்தக் கமலின் மேல் வந்துவிழும். மதுவுக்கு அடிமையான கமல் திருந்த, உண்மையெல்லாம் உணர, இரண்டு கமலும் இணைந்து சத்யராஜ் கூட்டத்தைப் பழிவாங்குவதுடன் ‘சுபம்’ போடப்படும். நடுவே ஸ்ரீப்ரியா கடத்தல், தேடல், சேஸிங், சண்டைகள் என திமிலோகப்படும்.

கமல், ஸ்ரீப்ரியா, ஸ்ரீகாந்த், கேத்ரின், சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், புஷ்பலதா, அசோகன், காந்திமதி என பலரும் நடித்திருந்தார்கள். படத்தின் அத்தனைக் கேரக்டர்களும் சிறப்புற நடிப்பை வெளிப்படுத்த ஸ்கோப் கொடுத்து ஸ்கிரிப்ட் ரெடி செய்திருந்தது, படத்துக்கு பலம் சேர்த்தது.

அசோகனின் வழக்கமான காமெடி ப்ளஸ் வில்லத்தனம் அசத்தல். ஆனால், தேங்காய் சீனிவாசன் இதில் சீரியஸ் மட்டும்தான். காந்திமதியும் புஷ்பலதாவும் அற்புதமான நடிப்பை வழங்கியிருந்தார்கள். ஸ்ரீகாந்த் கெத்தான வக்கீலாக சிறப்பாகச் செய்திருந்தார். வெளிநாட்டுப் பெண் கேத்ரின், மெல்லிய உணர்வுகளையும் சோகத்தையும் அற்புதமாக வெளிப்படுத்தி நடித்திருந்தார்.

வி.கோபாலகிருஷ்ணன் மிடுக்கான, கறாரான போலீஸ் அதிகாரி. அவரின் மகள் ஸ்ரீப்ரியா. காதலையும் காதலன் கமல் மதுவுக்கு அடிமையான போது கலங்கித் தவிப்பதும் பிறகு ஏழை கமல் மீது கொலைப்பழி விழுந்ததைக் கண்டு பொங்குவதும் என பிரமாதமான நடிப்பைத் தந்திருப்பார்.

கேலி நக்கல் ஏதுமில்லாத சத்யராஜ். அதுவும் வில்லத்தனம். நான்கைந்து காட்சிகள்தான் வருவார். ஆனால் நச் என்று நம் மனதில் பதிந்துவிடுவார். இதுதான் சத்யராஜ் நடித்த முதல் படம். கமலின் நண்பராக சுருளிராஜன். படம் நெடுக இவரின் அலப்பறை தெறிக்கவைத்தது.

பாபு - ரத்தினம் என்று இரண்டு கமலும் அசத்தியிருப்பார்கள். வெளிநாட்டில் படித்த பாபு கமல் ஸ்டைலாக இங்கிலீஷ் பேசுவதும் பார்ப்பதும் என எல்லாமே பணக்காரத்தனமாக இருக்கும். ரத்தினம் கமல், திருடன். மெட்ராஸ் பாஷையில் வெளுத்து வாங்கியிருப்பார். ‘சவால்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘பம்மல் கே.சம்பந்தம்’, ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ என சென்னை பாஷையை சரளமாக காமெடி ரவுசு பண்ணிய கமல், அநேகமாக முதன்முதலில் மெட்ராஸ் பாஷை பேசியது ‘சட்டம் என் கையில்’ படமாகத்தான் இருக்கும்.

திருப்பதிக்கு சென்றவரின் வீட்டில் புகுந்து திருடுவது, ‘இன்னிக்கி வெள்ளிக்கிழமை, மவுண்ட்ரோட்ல மழை பெய்யுது’, ‘பாரீஸ்தானே... நெறய தபா போயிருக்கேனே’ என்று பாரீஸ் கார்னரைச் சொல்வது, கேத்ரீன் தன் காதலன் கமலுக்காக சமைத்துக் காத்திருக்கும் போது, திருட்டுக் கமல் வந்து, சாப்பிட்டுச் செல்வது என படம் முழுக்க கமல் ரவுசு விட்டு ரகளை பண்ணியிருப்பார்.

சிறுவனாக ‘பார்த்தால் பசி தீரும்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்த கமல், வளர்ந்த பிறகு போட்ட டபுள் ஆக்ட் படம் இது என்பதாக நினைவு. இந்தப் படத்துக்குப் பிறகு அடுத்த வருடம் வெளியான ‘கல்யாண ராமன்’ படமும் ‘சட்டம் என் கையில்’ போலவே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

தயாரித்து இயக்கினார் டி.என்.பாலு. பின்னாளில், கமலை வைத்து ‘சங்கர்லால்’ பண்ணும்போது பாதியில் இறந்துவிட்டார். பிறகு அந்தப் படத்தை இயக்கியவர் கமல் என்றொரு தகவல் உண்டு. என்.கே.விஸ்வநாதனின் ஒளிப்பதிவு படத்துக்கு அழகு சேர்த்தது. இரண்டு கமலும் சேரும் இடங்கள் குறைவுதான் என்றாலும் அந்தக் காட்சிகளை, அப்போதே தத்ரூபமாகப் படமாக்கியிருந்தார்.

‘சட்டம் என் கையில்’ படத்தின் வெற்றிக்கு கதை, காமெடி, நடிப்பு, ஆக்‌ஷன் என எல்லாமே சேர்ந்திருந்தாலும் முத்தாய்ப்பு தித்திப்பாக அமைந்திருந்தது... இளையராஜாவின் இசை. ’தங்கரத்தினம் எங்க ரத்தினம்’ என்றொரு குத்துப்பாட்டு மலேசியா வாசுதேவனின் குரல் குத்தாட்டம் போடவைத்தது. ’ஒரே இடம் நிரந்தரம்’ என்றொரு பாடல், மெலடியில் சோகத்தையும் சேர்த்துத் தந்திருந்தார் இளையராஜா. க்ளைமாக்ஸில், கமல், சுருளிராஜன் ஆகியோர் வேடமிட்டுக் கொண்டு, (’ப்ரியா’வில் ரஜினி ஸ்ரீதேவியைத் தேடும் காட்சி) ‘மேரா நாம் அப்துல்லா’ என்று எஸ்.பி.பி. பின்னிப் பெடலெடுத்திருப்பார்.

முக்கியமாக இரண்டு பாடல்களைச் சொல்லவேண்டும். பாடலின் தொடக்க இசையிலேயே இசை ரசிகர்கள், கொண்டாட்ட மூடுக்கு வந்துவிடும்படியாக ஜாலம் காட்டியிருப்பார் இளையராஜா. அந்தப் பாடலை இந்தக் காலத்து இளைஞர்களிடம் கேட்டாலும் ‘பிடித்த பாடல்’ என்று சொல்லுவார்கள். அந்த அளவுக்கு இத்தனை வருடங்களாகியும் ஹிட் லிஸ்ட்டில் இருக்கிறது. அந்தப் பாடல்... ‘சொர்க்கம் மதுவிலே’. மதுக்கிண்ணத்தை நெற்றியில் வைத்துக் கொண்டு, கமல் ஆட்டம் போட்டுப் பாடுவதையும் அந்தப் புகைப்படத்தையும் இன்னமும் மறக்கவில்லை ரசிகர்கள். எல்லாப் பாடல்களையும் கண்ணதாசன் எழுதியிருந்தார்.

இன்னொரு பாடல்... அது நீளம் காரணமாக படத்தில் சேர்க்கப்படவில்லை. எடுத்துவிட்டார்கள். ஆனால், ‘சட்டம் என் கையில்’ படத்தின் ரிக்கார்டில் இந்தப் பாடல் உண்டு. சிலோன் வானொலியில், படம் வெளியானதில் இருந்து ஐந்தாறு வருடங்களுக்கு தினமும் இரண்டு மூன்று முறையாவது அந்தப் பாடை ஒலிபரப்புவார்கள். மலேசியா வாசுதேவனும் ஜானகியும் இணைந்து பாடிய அந்தப் பாடல், ‘ஆழக்கடலில் தேடிய முத்து’ என்ற பாட்டு! (குழந்தையுடன் பாடுவது போலான பாட்டு இது. பின்னாளில் ‘விக்ரம்’ படத்தில் ‘சிப்பிக்குள் ஒரு முத்து வளர்ந்தது சின்னத்தாமரையே’ என்று கருவில் குழந்தை இருக்கும்போது பாடுகிற பாட்டு. இதுவும் படத்தின் நீளம் கருதி நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது).

எல்லா சென்டர்களிலும் மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் குவித்தது ‘சட்டம் என் கையில்’. இரண்டு ஹீரோக்களாக கமல் இருந்தும், ‘சட்டம் என் கையில்’ எனும் டைட்டிலை ஆரம்பத்தில் தேங்காய் சீனிவாசன் சொல்லுவார். முடிவில் அசோகன் சொல்லுவார் என்பதுதான் படத்தின் கதைக்கான கரு. பின்னர், இந்தப் படம் ‘ஏ தோ கமால் ஹோ கயா’ என்ற பெயரில் இந்தியிலும் வெளியானது.

சக்கைப்போடு போட்ட ‘சட்டம் என் கையில்’ திரைப்படம் 1978ம் ஆண்டு, ஜூலை மாதம் 14ம் தேதி வெளியானது. படம் வெளியாகி, 42 வருடங்களாகிவிட்டன .
இன்னமும் மனதில் சட்டமிட்டு ஜாலம் காட்டிக் கொண்டிருக்கிறது ‘சட்டம் என் கையில்’. இன்னும் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது ‘ஆழக்கடலில் தேடிய முத்து’.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x