Published : 13 Jul 2020 07:48 PM
Last Updated : 13 Jul 2020 07:48 PM
வீட்டிலும், வியாபாரத்திலும் கல்லடிபட்டாலும் படலாம் கண்ணடிபடக்கூடாது, என்ற சொலவடை உண்டு. அவ்வளவு மோசமானதாக கண் திருஷ்டியை உருவகப்படுத்தி வைத்துள்ளனர்.
அது உண்மையா என்ற வாத விவாதங்களுக்கு அப்பாற்பட்டு அதைச் சார்ந்து ஒரு தொழில் இருக்கிறது.
எவ்வளவுதான் விஞ்ஞானம் முன்னேறினாலும் இன்றளவும் வீடுகளில் கண் திருஷ்டி சுத்திப்போடுவதும், கண் திருஷ்டி பொம்மைகள் வைத்து பரிகாரம் செய்வதும் தொடர்கிறது.
இதில், அந்த மதத்தினர், இந்த மதத்தினர், படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாராபட்சமில்லாமல் நம் கலாச்சாரத்தில் சுத்திப்போடும் வழக்கம் கலந்து விட்டது.
கட்டிய வீடுகள் மட்டுமில்லாது புதிதாக கட்டும் கட்டிடங்களில், வாகனங்களில் கண் திருஷ்டி பொம்மைகளுக்கு முக்கிய இடமுன்டு. யாரு கண்ணும் படக்கூடாது என்பதற்காகவும், எதிர்மறை எண்ணம் கொண்டவர்களிடம் இருந்து கண் திருஷ்டி பொம்மைகள் தங்களைப் பாதுகாப்பதாக இதை வாங்கி வைப்பவர்கள் நம்புகிறார்கள்.
ஆனால், தற்போது இந்த திருஷ்டி பொம்மைகள் மேல் யார் கண் பட்டதோ தெரியவில்லை, நாக்கை துரத்தியவாறு பார்ப்போரை மிரட்டும் உருவம் கொண்டிருந்தும் மதுரை சாலையோரங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் இந்த பொம்மைகளை யாருடைய கண்ணும் சீண்டவில்லை.
மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம் அருகே வடமாநிலத் தொழிலாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் நிரந்தரமாக அங்கேயே சாலையோரங்களில் குடிசைப்போட்டு இந்த திருஷ்டி பொம்மைகளை உற்பத்தி செய்து நகரங்கள், கிராமங்களில் எடுத்துச் சென்று விற்பனை செய்கின்றனர்.
ஏற்கெனவே டிஜிட்டல் பேனர் வருகையால் அச்சாகவும், படமாகவும் இந்த திருஷ்டி பொம்மைகளை கட்டிடங்களிலும் வாகனங்களிலும் மக்கள் ஓட்ட ஆரம்பித்தனர். அவற்றின் விலை தத்ரூபமாக கைப்பட இந்தத் தொழிலாளர்கள் கலைநயத்தால் வடிவமைக்கப்பட்ட திருஷ்டி பொம்மைகளை விட குறைவு.
அதனால், இந்த திருஷ்டி பொம்மைகளுக்கு ஏற்கெனவே வரவேற்பு குறைந்து தொழில் முன்போல் நடக்காமல் இந்தத் தொழிலில் ஈடுபட்ட பல தொழிலாளர்கள் மாற்று வேலைக்கு சென்றுவிட்டனர்.
தற்போது மிக சொற்பமானவரே இந்தத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். தற்போது ‘கரோனா’ வடிவில் திருஷ்டி பொம்மைகள் மீதும் கண்டுபட்டுவிட்டது.
மக்கள் ‘கரோனா’ ஊரடங்கால் வேலைக்கு செல்லாமல், தொழில் நலிவடைந்து அன்றாட வாழ்வாதாரத்திற்கே மிகுந்த சிரமப்படும் நிலையில் இந்த திருஷ்டி பொம்மைகளை வாங்கி திருஷ்டி சுத்திப்போடத் தயாரில்லை.
விதி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ‘கரோனா’ வடிவில் வந்து விளையாடிவிட்டதால் இந்தத் தொழிலாளர்கள் தயாரித்து வைத்த திருஷ்டி பொம்மைகளை விற்க முடியாமல் சோகமே உருவாக அடுத்த வேளை வாழ்வாதாரத்திற்காக இந்த பொம்மைகளை விற்க போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தத் தொழிலில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத் தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘முன்பெல்லாம் ஒவ்வொரு பொம்மைக்கும், அதன் உயரத்திற்கும், வடிவமைப்புக்கும் ஏற்றவாறு விலை வைப்போம். இப்போதெல்லாம் காசு கிடைத்தால் போதும் என்று கேட்கிற விலைக்கே கொடுக்கத் தயாராக இருந்தும் வாங்க ஆளில்லை, ’’ என்றனர் கவலையுடன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT