Published : 13 Jul 2020 02:26 PM
Last Updated : 13 Jul 2020 02:26 PM
ஐக்கிய நாடுகளின் குழந்தை உரிமைகள் மீதான உடன்படிக்கையில் (United Nations Convention on the Rights of the Child), இந்தியா 11, டிசம்பர் மாதம் 1992 அன்று கையொப்பமிட்டு ஏற்றுக்கொண்டது. இந்த உடன்படிக்கையின்படி இந்தியாவில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும், வாழ்வதற்கான (Survival), வளர்ச்சிக்கான (Development) பாதுகாப்புக்கான (Protection) மற்றும் பங்கேற்பதற்கான (Particiaption) உரிமைகளை உத்தரவாதம் செய்வது அரசின் கடமையாகும். அதனடிப்படையில் பல்வேறு கொள்கைகளையும், சட்டங்களையும், திட்டங்களையும், அமைப்புகளையும் அரசு உருவாக்கி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, குழந்தை உரிமைகள் பாதுகாக்கும் ஆணையங்கள் சட்டம் 2005 (Commissions for Protection of Child Rights Act 2005) இயற்றப்பட்டது. இச்சட்டம், மாநிலங்களுக்கு, மாநிலக் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்களை (SCPCR) உருவாக்கிட மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை வழக்குகளை விரைவாக நடத்த குழந்தைகளுக்கான நீதிமன்றங்கள் (Children Courts) அமைக்கவும் அதிகாரத்தை அளிக்கிறது. குழந்தைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது. இந்த அதிகாரத்தின் படி, தமிழக அரசு விதிகளை உருவாக்கி, ஒப்புதல் அளித்து 12-06-2012 தேதியன்று ஆணையம் அமைக்க உத்தரவிட்டது. அதன்படி, 2013-ஆம் ஆண்டிலிருந்து மாநிலக் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு சட்டம் இயற்றிக் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஆணையம் செயல்படத் தொடங்கியது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 2007ஆம் ஆண்டே மாநில அளவிலான ஆணையம் அமைக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில், தாமதமாக அமைக்கப்பட்ட ஆணையமும், போதிய உட்கட்டமைப்பு வசதிகள் / பணியாளர்கள் இல்லாமல், பெயரளவுக்கு இருந்ததால், தொடக்கத்திலிருந்தே பல்வேறு விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகிறது.
மாநிலக் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், மாநிலத்தில் உள்ள அனைத்துக் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ளதுடன், குறிப்பாக, சிறார் நீதிச் (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள்) சட்டம் 2015, அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, குழந்தைகளைப் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் 2012 (POCSO Act), குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006 போன்ற சட்டங்கள், எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதைக் கண்காணிக்கும் முக்கியப் பொறுப்பும் இருக்கிறது. இச்சட்டங்களைச் செயல்படுத்துவதில், இடைவெளிகள் ஏதேனும் இருப்பின் அவற்றை இனம்கண்டு அரசுக்குப் பரிந்துரை செய்து, சட்டங்கள் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்க வேண்டிய கடமையும் இவர்களுக்கு உண்டு. இந்தச் சட்டங்களைக் கண்காணிக்க போதிய நிபுணத்துவம் பெற்றவர்கள் ஆணையத்தில் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
தமிழ்நாடு மாநிலக் குழந்தை உரிமைகள் ஆணையத்திற்கு தனித்தன்மையும், தன்னாட்சி அதிகாரமும் நடைமுறையில் கிடையாது. ஆணையம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே சுதந்திரமாகச் செயல்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை. சமூக பாதுகாப்புத் துறையின்கீழ் அல்லது அதன் கட்டுப்பாட்டில் ஆணையம் செயல்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள ஒரு அலுவலகம் போல் நடத்தப்பட்டு வருகிறது. உறுப்பினர் செயலர் (Member Secretary) ஆணையத்தில் இருந்து இதன் செயல்பாடுகளைத் திறம்பட நிர்வகிக்க வேண்டும். இதற்காகவே இந்திய ஆட்சிப்பணி அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரியை உறுப்பினர் செயலாளராக நியமித்து உள்ளார்கள். ஆனால் அவர் பொதுவாக அலுவலகத்திற்கு வருவது கிடையாது. கையொப்பம் பெற வேண்டியிருக்கும் பட்சத்தில், அலுவலகக் கண்காணிப்பாளர் அவரிடம் சென்று கையொப்பம் பெற்று வருகிறார். அனைத்துப் பணியாளர்களும் சமூக நலத்துறையில் இருந்து நியமிக்கப்பட்டுள்ளதால், இவர்கள் அனைவரும் இணை இயக்குனரின் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். தலைவரோ அல்லது உறுப்பினர்களோ, பணியாளர்களை வேலை வாங்குவது மிகவும் சிரமமான காரியம். இணை இயக்குனர் மனது வைத்தால் மட்டுமே இவர்களால் பணியாளர்களிடம் எந்த வேலையும் வாங்க முடியும்.
இதுவரை நடைபெற்ற கூட்டங்களுக்கும், பெறப்பட்ட புகார்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போன்றவற்றிற்கு ஆவணங்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. 2013 ஆம் ஆண்டில் இருந்து ஆணையம் செயல்பட்டு வந்தாலும் கூட, 2017-ஆம் ஆண்டு வரை என்ன செய்தார்கள் என்பதற்கான அறிக்கை எதுவும் இணையதளத்தில் இல்லை. 2017-2018 & 2018-2019 ஆகிய இரு ஆண்டுகளுக்கான அறிக்கை மட்டுமே இருக்கிறது. உட்கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை. குறைந்த பட்ச வசதிகூட ஆணையத்தில் இல்லை. உறுப்பினர்கள் ஏதாவது புகார்களை விசாரிக்க விரும்பினால், அதற்கான இட வசதி மற்றும் இருக்கை வசதி கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு (District Child Protection Unit) மற்றும் குழந்தைகள் நலக்குழு (Child Welfare Committee) போன்றவற்றுடன் இணைந்து செயல்படக்கூடாது என்ற வாய்மொழி உத்தரவை ஆணைய உறுப்பினர்களுக்கு பிறப்பித்துள்ளார்கள். (இது ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் இன் கூற்று). மேலும் குழந்தைகள் நலக் குழுவில் இருக்கும் உறுப்பினர்கள் சிலர், ஆணையத்தின் உறுப்பினர்களாக ஒரே நேரத்தில் பதவி வகித்த கொடுமையும் நடந்துள்ளது. ஆணையத்திற்கு நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவானதாக உள்ளது. உறுப்பினர்களின் பயணச் செலவுகள் கூட திருப்பிக் கொடுக்கப்படுவதில்லை. இதுபோல் ஆணையத்திலுள்ள குறைபாடுகளைப் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.
தற்போது ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உட்பட அனைத்துப் பதவிகளும் காலியாக உள்ளன. இப்பதவிக்கான விண்ணப்பங்களை அரசு கோரியுள்ளது. வெகுவிரைவில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படலாம். ஆனால் அவ்வாறு நியமிக்கப்பட்டாலும் இந்த ஆணையம் முழுமையாக செயல்பட வேண்டும் என்றால் தற்போது உள்ள குறைபாடுகளைக் களையவேண்டியது மிகவும் அவசியம். இல்லாவிட்டால் மீண்டும் இது பெயரளவுக்கே செயல்பட வேண்டியிருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
முதலாவதாக, மாநில ஆணையத்தின் தலைவர் பதவி என்பது அரசியல் ரீதியாகவே நிரப்பப்படுகிறது. பொதுவாக, அரசியல்வாதிகள் அல்லது ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அரசை எதிர்த்து விமர்சனம் செய்யத் தயங்குவர்; தங்கள் பணிகளைச் செய்வதைக் காட்டிலும், அரசுக்குக் கெட்ட பெயர் வராமல் செயல்படுவதில் கவனம் செலுத்துவார்கள். இதனால் ஆணையத்தின் நோக்கத்தை நிறைவேற்ற இயலாது. ஆகவே தலைவர் பதவிக்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பது, அந்தப் பதவிக்கான கவுரவத்தைக் கூட்டுவதுடன், மற்றவர்களுடன் அவர்கள் இணைந்து செயல்பட வாய்ப்பாக இருக்கும். மனித உரிமை ஆணையம் போன்று, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பது அவசியம். இவர்களால், அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவதுடன் அரசு அலுவலர்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் தயக்கமின்றி எடுக்க முடியும். உறுப்பினர் செயலர் மற்றும் அலுவலர்கள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் வண்ணம் ஆணையத்திற்கு தன்னாட்சி மற்றும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.
இரண்டாவதாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம். ஆணையத்திற்கு போதுமான அலுவலர்கள் இல்லை. கேரள மாநிலக் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் 41 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இங்கு வெறும் 9 பணியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இதனால் எந்தப் பணியையும் செய்ய இயலாத ஒரு சூழல் இருக்கிறது. போதுமான பணியாளர்களை நியமித்து ஒவ்வொரு சட்டத்துக்கும் தனிப் பிரிவை உருவாக்கிச் செயல்படுத்தினால் மட்டுமே ஆணையம் தனது பணிகளை முழுமையாகச் செய்ய இயலும். ஊழியர்களின் எண்ணிக்கைக்கேற்ப அலுவலகத்தின் பரப்பு, கணினி வசதிகள், இணையதள வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.
மூன்றாவதாக, தலைவருக்கு வழங்கப்படும் மதிப்பூதியம், 2012 ஆம் ஆண்டிலிருந்து வெறும் 25 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது. இதை விட ஒரு தலைவரை எந்த அரசாலும் கேவலப்படுத்த முடியாது. தெலங்கானா மாநிலத்தில் ஆணையத் தலைவருக்கு, தலைமைச் செயலருக்கு (Chief Secretary) இணையான ஊதியம் வழங்கப்படுகிறது. சாதாரணமாக மாவட்ட அளவில், தொகுப்பூதிய அடிப்படையில் அரசு திட்டங்களில் வேலை பார்க்கும் பணியாளர்கள் கூட 30 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஊதியம் பெறுகிறார்கள். ஆனால், ஒரு ஆணையத் தலைவருக்கு தற்போது தரப்படும் மதிப்பூதியம் மிகவும் குறைவானது. மேலும் உறுப்பினர்களுக்கு எந்த வித மதிப்பூதியமும் கிடையாது. ஒவ்வொரு மாதமும் மாதாந்திர கூட்டத்தில் பங்கேற்க ரூபாய் 1000 அமர்வுக் கட்டணமாக வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில், குழந்தைகள் நலக் குழு, வாரம் 4 / 5 முறை கூட வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் மாநில அளவில் ஒருமுறைதான் கூட்டம் கூட்டப்படுகிறது. ஆகவே அனைத்து உறுப்பினர்களுக்கும் மதிப்பூதியம் கொடுக்கப்பட்டு முழுநேரப் பணியாக இதைச் செய்தால் மட்டும் தான் போதிய கவனம் செலுத்த முடியும். தற்போது தமிழகத்தில் 38 மாவட்டங்கள் இருக்கின்றன. ஒரு உறுப்பினர் 6 முதல் 7 மாவட்டங்களைக் கண்காணிக்க வேண்டிய நிலையில் இருப்பதால் அவர்களுக்குப் போதிய வாகன வசதிகள் செய்து தரவேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் இந்தப் பணிகளை முழுமையாகச் செயல்படுத்த முடியும்.
நான்காவதாக, கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், தற்போது உள்ள சட்டங்களில் உள்ள இடைவெளிகளை இனங்காணவும், புதிய சட்டங்களை வழிமொழியவும் நிபுணர் குழு ஒன்று தேவைப்படுகிறது. தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில், இதற்கென்று ஆலோசகர்களை வைத்துள்ளார்கள். மாநில அளவில் எந்தவித ஆலோசகர்களும் இல்லை. இதனால் இவர்களால் சட்ட ரீதியாக எந்த நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்க இயலவில்லை. ஆகவே ஒவ்வொரு பிரிவுக்கும், ஒவ்வொரு சட்டத்திற்கும் குறைந்தபட்சம் ஒரு ஆலோசகரவது வைத்து அந்தச் சட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து, அவர்கள் ஆய்வு செய்து அறிக்கைகளை / பரிந்துரைகளை அரசுக்கு அனுப்ப வேண்டியது மிகவும் அவசியம். மேலும் மாநில அளவில் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு (DCPU), குழந்தைகள் நலக் குழு (CWC), இளைஞர் நீதிக் குழுமம் (Juvenile Justice Board), சைல்டு லைன் போன்ற அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவர்களுடன் இணைந்து செயல்படுவதை ஒருங்கிணைக்க ஆணையத்தில் ஒரு தனிநபர் தேவைப்படுகிறார். இந்த ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்வதன் மூலம், பல்வேறு குழந்தைகள் சார்ந்த பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு காண முடியும்.
ஐந்தாவதாக, ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்த வெளிப்படைத்தன்மை தற்போது இல்லை. வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் வகையில் இணையதளத்தில் புகார் அளிக்கும் வசதி, புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இணையத்தின் மூலம் அறியும் வசதி போன்றவை அனைத்தும் இணையதளத்தில் கொண்டு வரப்பட வேண்டும். இது மக்களுக்கு ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்க உதவும்.
ஆறாவதாக, ஆணையத்துக்கான நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவாக உள்ளது. 2018-2019 ஆண்டில், ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி வெறும் ரூபாய் 68,36,082 மட்டுமே. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி. ஆகவே மற்ற மாநிலங்களுடன் ஒப்பீடு செய்து போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியது அவசியம்.
இறுதியாக, தமிழகத்தில் குழந்தை உரிமைகளுக்காக வேலை பார்க்கக் கூடிய பல தொண்டு நிறுவனங்கள் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கின்றனர். இவர்கள் சந்திக்கும் குழந்தைகள் பிரச்சினைகளை ஆணையத்திற்குக் கொண்டு வந்தாலே வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். தற்போது தொண்டு நிறுவனங்களுக்கும், ஆணையத்திற்குமிடையே எந்தத் தொடர்பும் இல்லை. இந்தத் தொடர்பை வலுப்படுத்தி, கடைக்கோடி கிராமங்களில் உள்ள குழந்தைகளின் பிரச்சினைகளைத் தொண்டு நிறுவனங்களும் புகாராகக் கொண்டுவர ஆணையம் ஊக்குவிக்க வேண்டும். தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது ஆணையத்தின் செயல்பாட்டுக்கு மிகப்பெரிய பலத்தைக் கொடுக்கும். ஆணையத்தின் செயல் திட்டத்தில் இதை முக்கிய அம்சமாகக் கொண்டு வர வேண்டும்.
இந்த இடைவெளிகளை இனம் கண்டு, போதிய ஆலோசனைகளை வழங்குவது அரசின் செயல்பாடுகளை குற்றம் சொல்வதற்காக அல்ல. தற்போதுள்ள சூழலில், தலைவர் மற்றும் உறுப்பினர்களை மட்டும் தேர்ந்தெடுப்பதால் ஆணையம் தன் நோக்கத்தை நிறைவேற்றும் அல்லது ஆணையத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த முடியும் என்று கருதுவது ஒரு தவறான நம்பிக்கை. தற்போது செயல்பாட்டில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து அதை முழுமையாக நீக்கத் திட்டமும் மற்றும் தேவையான நிதி ஒதுக்கீடும் செய்தால் மட்டுமே ஆணையத்தை முழுமையான அதிகாரம் உள்ள அமைப்பாகச் செயல்பட வைக்க முடியும்.
ஆகவே, ஆணையம் உயிர்ப்புடன் செயல்பட, தமிழக அரசு, தற்போதுள்ள குறைபாடுகளைக் களைந்து, ஆணையத்திற்கு போதிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளை செய்து, தன்னாட்சி பெற்ற சுதந்திரமாக செயல்படும் ஒரு அமைப்பாக மாற்றினால் மட்டுமே ஆணையத்தின் நோக்கத்தை நிறைவேற்ற முடியும். இது அரசின் கடமையாகும்.
கட்டுரையாளர்: ப.இளவழகன்,
சமூகச் செயற்பாட்டாளர்,
தொடர்புக்கு: ilavazhagan2020@gmail.com.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT