Last Updated : 12 Jul, 2020 12:00 PM

3  

Published : 12 Jul 2020 12:00 PM
Last Updated : 12 Jul 2020 12:00 PM

’ஹாய்’ ஜெய்சங்கர்... ‘மக்கள் கலைஞர்’ ஜெய்சங்கர் - பிறந்தநாள் ஸ்பெஷல்! 


எண்பதுகள், கமல், ரஜினி உச்சத்தில் இருந்த காலகட்டம். விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு, மோகன், முரளி, ராமராஜன் என்றெல்லாம் அடுத்த இடத்தின் நாயகர்களும் பிரமாண்ட வெற்றியைக் கொடுத்தார்கள். எண்பதுகளின் தொடக்கத்தில், இவர்கள் ஒவ்வொருவராக சினிமாவை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த போது அவருக்கு வயது ஐம்பதைக் கடந்திருந்தது. ஒருவேளை... நாற்பது பிளஸ்ஸாக இருந்திருந்தால், அன்றைக்கு இன்னும் கொஞ்சம் வெற்றிகளைக் கொடுத்து, நாயகனாகவே வலம் வந்திருக்கலாமோ என்னவோ. ஆனால் வில்லனாக உருவெடுத்தாலும் அவரின் நாயக பிம்பம் மட்டும் ரசிகர்களிடம் அப்படியே இருந்தது. அப்படியொரு நாயகனாகத் திகழ்ந்தவர்... ஜெய்சங்கர்.

1938ம் ஆண்டு. கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்தார் ஜெய்சங்கர். நன்றாகப் படித்தாலும் நடிப்பின் மீது ஆர்வம் இருந்தது. மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவரின் துடிப்பும் நடிப்பும் புதிதாக இருந்தது. இவரைப் பார்த்த ஜோஸப் தளியத்துக்கு, பார்த்ததுமே பிடித்துப் போனது. ‘இரவும் பகலும்’ படத்தில் நாயகனாக அறிமுகமானார். அப்படி அறிமுகமாகும்போது அவருக்கு வயது 27.

‘உள்ளத்தின் கதவுகள் கண்களடா’ என்ற பாடலை முணுமுணுக்காதவர்களே இல்லை. ‘இரவும் வரும் பகலும் வரும்’ பாடலை ரசிக்காதவர்களே இல்லை. இதில் ஒரு ஜெய்சங்கர்தான். ஆனால் இரண்டுவிதமான கேரக்டர்கள் செய்திருந்தார். அடுத்து வந்த ‘பஞ்சவர்ணக்கிளி’யில் இரண்டு வேடமேற்று அசத்தினார்.

எம்ஜிஆரும் சிவாஜியும்தான் அப்போது ராஜாக்கள். எஸ்.எஸ்.ஆர்., முத்துராமன், ரவிச்சந்திரன் என சிற்றரசர்கள். எம்ஜிஆர் மாதிரி அழகெல்லாம் இல்லை. சிவாஜி மாதிரி நடிப்பில் பிரமிக்கவைக்கவில்லை. எஸ்.எஸ்.ஆர் மாதிரி பக்கம்பக்கமாக தமிழ் வசனங்கள் பேசவில்லை. முத்துராமன் மாதிரியான கனமான வேடங்கள் செய்யவில்லை. ரவிச்சந்திரன் மாதிரி ஸ்டைல் காட்டவில்லை. ஆனாலும் தன் துறுதுறு, விறுவிறு வேகத்தாலும் முகத்தாலும் தனியிடம் பிடித்தார்.

ஏவிஎம்மின் ‘குழந்தையின் தெய்வமும்’ படம், ஜெய்சங்கர் வாழ்வில் முக்கிய இடத்தைப் பிடித்தன. ‘வல்லவன் ஒருவன்’, ’இருவல்லவர்கள்’, ‘கருந்தேள் கண்ணாயிரம்’, ‘சிஐடி சங்கர்’ என மாடர்ன் தியேட்டர்ஸ் படங்கள், இவரை குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் தரும் நாயகனாகவும் உயர்த்தின.

எம்ஜிஆரை வைத்து படமெடுக்க சம்பளம் அதிகம், படமும் பிரமாண்டச் செலவு, நம்மால் முடியாது என்றிருந்த சின்ன தயாரிப்பாளர்களின் ஒரே சாய்ஸ்... ஜெய்சங்கர்தான். எவ்வளவு குறைந்த செலவில் படம் பண்ணுவதற்கு ஒத்துழைக்க முடியுமோ... அப்படியொரு பங்களிப்பைக் கொடுத்தார் ஜெய்சங்கர்.

ஜெய்சங்கரின் இன்னொரு ஸ்பெஷல்... இவரை வைத்து ஒரேயொரு படம் எடுத்த தயாரிப்பாளர்கள், இயக்குநர், உடன் நடித்த நாயகி என்று இருக்கமாட்டார்கள். தயாரிப்பாளர்களின் நாயகன், இயக்குநர்களின் நாயகன், ஹீரோயின்களின் ஜெண்டில்மேன் ஹீரோ என்று தன் குணத்தாலும் நடிப்பாலும் பேரெடுத்தார் ஜெய்சங்கர்.
‘நூற்றுக்கு நூறு’, ‘பூவா தலையா’, ‘யார் நீ?’, ’பட்டணத்தில் பூதம்’, ’நில்கவனி காதலி’, நீலகிரி எக்ஸ்பிரஸ்’, ’நான்கு கில்லாடிகள்’ ‘நீ’, ‘பஞ்சவர்ணக்கிளி’, ‘அத்தையா மாமியா’, ‘வந்தாளே மகராசி’ என எத்தனையோ படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தன. ஒருபக்கம் பாலசந்தர், இன்னொரு பக்கம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், இன்னொரு பக்கம் முக்தா பிலிம்ஸ், அடுத்ததாக டி.என்.பாலு படங்கள், பஞ்சு அருணாசலம் கதை வசனம் எழுதிய படங்கள் என்று எல்லோருக்கும் இணக்கமான ஹீரோவாக வலம் வந்த ஜெய்சங்கர், நிஜ ஹீரோவாகவே திகழ்ந்தார்.

‘உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்’, ‘நான் மலரோடு தனியாக’, ‘அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்’, ‘பிருந்தாவனத்தில் பூவெடுத்து’, ‘நாணத்தாலே கால்கள்’ என்று எத்தனையோ பாடல்கள் ஜெய் ஹிட்ஸ் வரிசையில் இருக்கின்றன.

ஜெயலலிதா, வாணிஸ்ரீ, லட்சுமி, ஜெய்சித்ரா, ஸ்ரீப்ரியா என அடுத்தடுத்த கட்டங்களில் ஒவ்வொரு ஜோடியும் சூப்பர் ஜோடியாக பேரெடுத்ததும் ஜெய்சங்கரின் மேஜிக். ஸ்ரீதேவிக்கு நாயகனாகவும் நடித்தார். கே.ஆர்.விஜயாவுடன் நடித்த ‘மேயர் மீனாட்சி’யின் வெற்றியும் தனித்துவம் வாய்ந்தது. சோ, நாகேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி என காமெடியிலும் ஜோடி சேர்ந்து அசத்தினார்.

பெரிதாக சம்பளம் கேட்கமாட்டார். கேட்கும் குறைவான சம்பளத்தில் பாக்கி வைத்தாலும் அந்த பாக்கியை வசூலிக்க கறார் பண்ணமாட்டார். பந்தா கிடையாது. எல்லோரிடமும் தோழமை குணம். தயாரிப்பாளர்கள் தொடங்கி லைட்மேன்கள் வரை... யாரைப் பார்த்தாலும் ‘ஹாய்’ சொல்லி நட்புக்கைகுலுக்கல் செய்து, நல்லுறவு கொண்டதை இன்றைக்கு வரை பேசிக்கொண்டிருக்கிறது தமிழ்த் திரையுலகம். 78ம் ஆண்டில், இவர் நடித்த படங்கள் 13க்கும் மேலே. அத்தனையும் வசூல் ரீதியாகவும் லாபத்தைக் கொடுத்தன.

ஒளிப்பதிவு மேதை என்று சொல்லப்படும் கர்ணனின் படங்கள் ஜெய்சங்கருக்கு ப்ளஸ்ஸாவும் மைனஸாகவும் இருந்தன. சி செண்டர் வரை கொண்டு சென்ற இந்தப் படங்கள், பெண்கள் மத்தியில் இதுவரை இருந்த நற்பெயரையும் குலைத்தது. ஒருபக்கம் ஜேம்ஸ்பாண்ட், இன்னொரு பக்கம் கெளபாய், நடுவே ஸ்மார்ட் அண்ட் ஸ்வீட் ஹீரோ என மூன்று பக்கமும் வலம் வந்ததெல்லாம் ஜெய்சங்கரின் தனி ரூட்!

‘முரட்டுக்காளை’யில் முதன்முதலாக வில்லனாக நடிக்கத் தொடங்கினாலும் அவரை மக்களும் ரசிகர்களும் ஹீரோவாகத்தான் பார்த்தார்கள். ‘மக்கள் கலைஞர்’ எனும் அடைமொழியுடன் கடைசி வரை வலம் வந்தார். ‘ஊமை விழிகள்’ படத்தின் பத்திரிகை ஆசிரியர் வேடத்தை, இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் மறக்கமாட்டார்கள் ரசிகர்கள். ‘விதி’ படத்தின் டைகர் தயாநிதி வக்கீலையும் அவரின் ஆர்ப்பாட்ட அலட்டலையும் யாரால்தான் மறக்கமுடியும்?

திரையுலகினருக்கும் மக்களுக்கும் எத்தனையோ உதவிகள் செய்து, எளிமையாகவும் இனிமையாகவும் அன்பாகவும் நடந்துகொண்ட ஜெய்சங்கர் எப்போதுமே ‘ஜெய்’ என்றும் ‘மக்கள்கலைஞர்’ என்றும் கொண்டாடுவதற்கு உரியவர்தான்.

1938ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி பிறந்த ஜெய்சங்கருக்கு இன்று பிறந்தநாள்.

ஜெய்சங்கருக்கு ‘ஹாய்’ சொல்லுவோம், அவரைக் கொண்டாடுவோம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x