Published : 11 Jul 2020 07:18 PM
Last Updated : 11 Jul 2020 07:18 PM

வறுமை எப்போதும் பெண்களின் நிறமுடையது: மக்கள்தொகையும் கருத்தடையும்!

பிரதிநிதித்துவப் படம்

1989-ம் ஆண்டிலிருந்து ஐ.நா. சபையால் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 ஆம் நாள் உலக மக்கள்தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஐ.நா. மக்கள்தொகை நிதியத்தின்படி (UNFPA- United Nations Population Fund), உலக மக்கள்தொகை தினத்தின் இந்த ஆண்டுக்கான கருப்பொருள் 'கரோனா பெருந்தொற்றுக்கிடையே உலகெங்கிலும் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் உடல்நலம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதை' அடிப்படையாகக் கொண்டதாகும்.

கரோனா பெருந்தொற்றுக்கிடையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்நலம் மற்றும் உரிமைகளை பாதுகாப்பது ஏன் முக்கியமானது?

கரோனா பெருந்தொற்று, அனைத்துத் தரப்பு மக்கள், சமூகங்கள், பொருளாதாரங்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. உதாரணத்திற்கு, உலக அளவில் இந்த சுகாதார நெருக்கடியில் முன்களப் பணியாளர்களாக இருப்பவர்களுள் பெரும்பாலானவர்கள் பெண்கள். அவர்கள் பெருந்தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்புகள் மற்றவர்களைவிட அதிகமாக இருக்கிறது. இதுதவிர, பெண்களின் உடல்நலம் மீதான பெரும் பாதிப்புகளை கரோனா தொற்றின் விளைவுகள் ஏற்படுத்தியுள்ளன.

உலகம் முழுவதும் கருத்தடை சாதனங்களின் விநியோகச் சங்கிலிகள் சீர்குலைந்து உள்ளன. இது திட்டமிடாத கர்ப்பத்தின் (unintended pregnancies) அபாயத்தை அதிகரிக்கின்றன. பல நாடுகளில் பொதுமுடக்கம் நடைமுறையில் உள்ளதால் பாலியல் மற்றும் இனப்பெருக்கம் சம்பந்தமான சுகாதார சேவைகள் ஓரங்கட்டப்பட்டுள்ளன, மற்றும் பாலின ரீதியான வன்முறைகள் அதிகரிக்கின்றன.

ஐ.நா. மக்கள்தொகை நிதியத்தின் சமீபத்திய ஆய்வு, இன்னும் 6 மாத காலத்திற்கு இந்த பொது முடக்கம் நீடித்தால், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள 114 நாடுகளில் 4 கோடியே 70 லட்சம் பெண்களால் நவீன கருத்தடை சாதனங்களை அணுக முடியாத முடியாத நிலை ஏற்படும் எனவும், இதனால், 70 லட்சம் திட்டமிடாத கர்ப்பங்கள் அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கிறது.

இதுதவிர, உலகம் முழுவதிலும் பெண்கள் குடும்பக் கட்டுப்பாடு சம்பந்தமான சுகாதாரச் சேவைகளை அணுகுவதிலும் தடைகளை ஏற்படுத்தியுள்ளது கரோனா பொது முடக்கம். குடும்பக் கட்டுப்பாடு என்பது அடிப்படை மனித உரிமை. ஆனால், இந்தப் பெருந்தொற்று காலம் இத்தகையை அடிப்படை உரிமையை மறுக்கிறது. ஏன்?

சுகாதாரப் பணியாளர்கள் பெரும்பாலானோர் கரோனா தொற்று தொடர்பான சிகிச்சைக்கே முன்னுரிமை அளித்தல், முழு கவச உடைகளுக்கான (PPE) பற்றாக்குறையால் பாதுகாப்பற்ற முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளுதல், பல சுகாதார நிறுவனங்கள் குறைவான சேவைகளையே அளித்தல், கரோனா பொதுமுடக்கத்தால் இத்தகைய சேவைகளை அணுகுவதில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை குடும்ப கட்டுப்பாடு சம்பந்தமான சேவைகளை பெண்கள் பெறுவதில் தடைகளை ஏற்படுத்துகின்றன.

கருத்தடை சாதனங்களை பொதுமுடக்கக் காலத்தில் பெண்கள் அணுகுவதில் சிரமங்கள் உள்ளதால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து, பொன்னேரி அரசு மருத்துவமனையின் மூத்த மருத்துவ அதிகாரியும் மகப்பேறு மருத்துவருமான அனுரத்னாவிடம் பேசினோம்.

அனுரத்னா, மகப்பேறு மருத்துவர்

"கர்ப்பம், கருத்தடை சாதனங்கள், மகப்பேறு, குடும்பக் கட்டுப்பாடு உள்ளிட்ட சேவைகளை அரசு மருத்துவமனைகள் தொடர்ந்து வழங்கிக்கொண்டிருக்கின்றன. தற்காலிக கருத்தடை சாதனங்களைப் பெண்களுக்கு வழங்குவதில் கிராமப்புற சுகாதாரச் செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்களின் பங்கு மிக முக்கியமானது. இந்தப் பணியாளர்கள் களப்பணியின்போது காய்ச்சல் தொடர்பானதை மட்டும் பெண்களிடம் கேட்காமல், கருத்தடை சம்பந்தமான வேறு தேவைகள் ஏதேனும் உள்ளதா என்பதையும் கேட்க வேண்டும். மக்களும் தங்களின் இத்தகைய பிரச்சினைகளைக் கூற வேண்டும்.

மருத்துவச் சேவைகளைப் பெற முடியாத நிலையில் இன்னும் பெரும்பாலானோர் இருக்கின்றனர். இப்போது அரசு மருத்துவமனைகள் பல கோவிட் சிறப்பு மருத்துவமனைகளாக மாறியுள்ளன. அங்கு குடும்பக் கட்டுப்பாடு உள்ளிட்ட சேவைகளைப் பெறுவதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர். இதனால் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் செய்துகொள்வது தற்போது குறைந்துள்ளது. கரோனா தொற்று பரவல் குறையட்டும் எனப் பெண்கள் காத்திருக்கின்றனர்.

கருத்தடை சாதனங்களைப் பெற முடியாமல் இருப்பதால், திட்டமிடாத கர்ப்பங்கள் அதிகரிக்கின்றன. அரசு கரோனா தொற்றுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கிறது, இதற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற தயக்கத்தினாலேயே வர மறுக்கின்றனர். போக்குவரத்துத் தடையும் இதற்குக் காரணம்.

அரசு மருத்துவமனைகளைப் பொறுத்தவரை கருத்தடை சம்பந்தப்பட்ட மாத்திரைகள், ஊசி, 'காப்பர் டி' உள்ளிட்டவற்றின் விநியோகம் பாதிக்கப்படவில்லை. குறித்த காலத்தில் கர்ப்பத் தடை சாதனங்களைப் பயன்படுத்தவில்லை என்றால் திட்டமிடாத கர்ப்பங்களால் ரத்த சோகை ஏற்படுவதற்கான வாய்ப்புகள், அடிக்கடி கருக்கலைப்பால் கர்ப்பப்பை பலவீனமடைதால், கர்ப்பப்பை தொற்று உள்ளிட்டவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு சிலருக்குத் திட்டமிடாமல் 3-வது குழந்தை பிறந்தால் அதனை வளர்த்து எடுக்க வேண்டிய கட்டாய சூழலுக்குத் தள்ளப்படுவார்கள். இதனால், பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படும். ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் உண்டான இடைவெளியைப் பராமரிப்பதிலும் கருத்தடை சாதனங்கள் அவசியம். அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை என்றால், கருத்தடை சாதனங்களையாவது உபயோகிக்க வேண்டும்" என்கிறார், மருத்துவர் அனுரத்னா.

"மனிதர்களின் அச்ச உணர்வே காரணம்"

கரோனா பொதுமுடக்கத்தால், பாலின ரீதியான வன்முறைகள் 3 கோடியே 10 லட்சம் என்ற அளவில் அதிகரிக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. பொதுமுடக்கக் காலத்தில் ஐ.நா. மக்கள்தொகை நிதியத்தின் களரீதியிலான திட்டங்கள் சீர்குலையாமல் செயல்பட்டால், 2020 முதல் 2030 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு காலகட்டத்தில், 20 லட்சம் பெண்களுக்கு பிறப்புறுப்பு சிதைவு ( female genital mutilation), 1 கோடியே 30 லட்சம் குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்படலாம் என நம்பப்படுகிறது. ஆனால், கணிசமாக அதிகரிக்கும் இந்தச் சிக்கல்களின் ஆதாரக்கண்ணி என்ன?

கரோனா பொது முடக்கக் காலத்தில் பாலியல் ரீதியான வன்முறைகள், குழந்தைத் திருமணங்கள் அதிகரிப்பது குறித்து நம்மிடம் பேசினார், பெண்ணியச் செயற்பாட்டாளர் ஓவியா.

ஓவியா, பெண்ணியச் செயற்பாட்டாளர்

"மேற்கூடிய பிரச்சினைகள் அனைத்திலும் இந்தியப் பெண்கள் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களாக உள்ளனர். குடும்பத்திற்குள் கணவரால் பெண்கள் துன்புறுத்தப்பட்டு பாலியல் உறவு கொள்வது அதிகரித்துள்ளது. இதனை வெளியில் செல்வதற்கான வழியில்லாதபோது மிகக் கொடுமையானதாக இருக்கும். திருமண உறவுக்குள்ளும், திருமண உறவைத் தாண்டியும் திட்டமிடாத, விரும்பத்தகாத கர்ப்பங்கள் அதிகரிக்கின்றன. கணவன் - மனைவி உறவுக்குள் இது நிகழும்போது பொருளாதாரச் சிக்கல்கள் தான் மேலோங்கி இருக்கும். ஆனால், அதனைக் கடந்த உறவுகளில் கர்ப்பங்கள், வாழ்க்கை ரீதியாக பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும்.

கருத்தடை உள்ளிட்டவற்றுக்கு நவீன சமூகம் உருவாக்கிய தளங்கள் அனைத்தும் இப்போது முடக்கப்பட்டுள்ளன. அதனால் பழைய உலகத்தின் வழிகளைத் தேடி மனித இனம் செல்லும். சுகாதாரமற்ற, உயிருக்கு ஆபத்தான வழிகளில் கருத்தடை நிகழும் போக்கு அதிகமாகும். கருத்தடை மிகவும் அத்தியாவசியமான தேவை என்பதை அரசு கருத்தில் கொண்டு சுகாதார மையங்களிலேயே கருத்தடை சாதனங்களைத் தேவைப்படுபவர்களுக்கு விநியோகிக்கலாம். இதனால் தவறான வழிகளை பெண்கள் தேடிச் செல்வது குறையும்.

குழந்தைத் திருமணங்கள் அதிகரிப்பதற்குக் காரணம், பெண் குழந்தைகள் இந்திய சமூகத்தில் உடைமையாகத்தான் பார்க்கப்படுகின்றனர். பெண் குழந்தைகளை ஒரு பொறுப்பாக பெற்றோர் கருதுகின்றனர். கரோனா எல்லோருக்கும் அச்சத்தைக் கொடுத்துள்ளது. உயிர் மீதான பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பெற்றோர்கள் தன் பொறுப்பை முடித்துவிட வேண்டும் என நினைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். வருங்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இதனால் இத்தகைய முடிவுகளை நோக்கிச் செல்கின்றனர்.

கரோனா பற்றிய அறிவியல் தெளிவை ஏற்படுத்தும்போதுதான் மனிதர்கள் அச்ச உணர்விலிருந்து விடுபடுவர். இவை எல்லாவற்றுக்கும் தீர்வு கரோனாவிலிருந்து விடுபடுவதுதான். பாலின ரீதியிலான பாகுபாடு என்பதைத் தாண்டி நோய்த்தொற்றின் மீதான அச்சத்தால்தான் குழந்தைத் திருமணங்கள் உள்ளிட்டவை அதிகரிப்பதாகக் கருதுகிறேன்" என்கிறார், ஓவியா.

"வன்முறையைக் குடும்பத்தின் அங்கமாக பார்க்கின்றனர்"

குடும்ப வன்முறைகள் உள்ளிட்டவற்றுக்குச் சட்ட ரீதியிலான உதவிகளைப் பெறுவதில் உண்டான சிக்கல்கள் குறித்தும் பெண்கள் மீதான பொருளாதாரத் தாக்கங்கள் குறித்தும் வழக்கறிஞர் அஜிதாவிடம் கேட்டோம்.

அஜிதா, வழக்கறிஞர்

"குடும்ப வன்முறைகள் வெளியில் இருக்கும் நபர்களால் நிகழ்வதில்லை. குடும்பத்தில் இருப்பவர்களால்தான் நடத்தப்படுகின்றன. ஏன் ஆண்கள் அவ்வளவாக குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படுவதில்லை? குடும்பத்தில் ஒருவர் அதிகாரம் மிக்கவராகவும் மற்றொருவர் அதிகாரம் அற்றவர்களாகவும் இருக்கின்றனர். ஒரு வன்முறையை ஆண் எப்படி எதிர்ப்பாரோ அப்படி பெண்கள் எதிர்ப்பதில்லை. பெண்கள் குழந்தைகளாக வளரும்போதே வன்முறை குடும்பத்தின் ஒரு அங்கம் தான் என்று சொல்லி வளர்க்கப்படுகின்றனர். கேள்வி கேட்கக்கூடாது என சொல்லி வளர்க்கப்படுகின்றனர். தந்தை,கணவர் என அனைவராலும் வன்முறைக்கு ஆளாகின்றனர். இது எதிர்தரப்பில் ஆண்களுக்கு சொல்லப்படுவதில்லை.

குடும்ப அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டம் எதுவும் நம்மிடத்தில் இல்லை. காற்று உள்ளிட்ட சூழல் பிரச்சினைகளுக்கு உலகளாவிய அமைப்புகள் எப்படிச் செயல்படுகின்றனவோ, அதேபோன்று குடும்ப வன்முறையைத் தடுக்கவும் திட்டங்களை வகுக்க வேண்டும். பள்ளிக்கூடப் பாடங்கள் முதல் பழக்க வழக்கங்களில் மாற வேண்டும்.

மக்கள்தொகை பெருக்கத்தால் இவை அதிகமாகும் எனச் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அதனைத் தடுக்க திட்டங்களே உருவாக்கப்படவில்லை. மகிளா நீதிமன்றங்கள், குழந்தைகள் நீதிமன்றங்கள் உள்ளிட்ட அமைப்புகளைப் பலப்படுத்துவதைவிட, குடும்பங்களை ஜனநாயகப்படுத்தாமல், எங்கிருந்து குற்றங்கள் ஆரம்பிக்கிறதோ அதனைக் களையாமல் இதனைச் சரிப்படுத்த முடியாது.

குடும்பங்களில் நடக்கும் வன்முறைகள் குறித்து அரசு பேச வேண்டும். அதிகார ரீதியாக ஏற்றத்தாழ்வுடனும் வன்முறைகளை ஊக்குவிப்பதாகவும் குடும்ப அமைப்புகள் இருக்கின்றன. சாதியும் இதில் பங்காற்றுகிறது. அதனால்தான் தாங்கள் சொல்பவர்களைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என பெற்றோர் நினைக்கின்றனர்.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், தங்கள் குழந்தைகளுடன் தங்குவதற்கான ஏற்ற இடம் இங்கு இருக்கிறதா? இதற்கான கட்டுமானங்கள் இல்லை. குடும்ப வன்முறைகளைச் சமாதானம் செய்து வைக்கும் வழக்கம்தான் காவல் நிலையங்களில் நிகழ்கின்றன. அத்தகைய பெண்களுக்கு மாற்று வழி இல்லை. இந்தியாவில் 1 லட்சம் பேருக்கு 187 காவல்துறையினர் இருக்க வேண்டும். ஆனால், 137 பேர் தான் இருக்கின்றனர். அதிலும், காவல்துறையில் பல காலியிடங்கள் நிரப்பப்படவில்லை. கொலை, பாலியல் வன்புணர்வுகள் உள்ளிட்ட பெரிய குற்றங்களைக் கவனிக்கக்கூடிய அளவில்தான் காவல்துறையின் திறன் இருக்கிறது. அதிலும், கணவரால் பாலியல் வன்புணர்வு செய்யப்படுவதை யாரும் கவனிக்கவில்லை" என்கிறார் அஜிதா.

"வறுமைக்கு எப்போதும் பெண்ணின் நிறம்தான்"

பெண்கள் பாதுகாப்பற்ற தொழிலாளர்களாகப் பணியாற்றும் வாய்ப்புகள் அதிகம். கரோனா தொற்று விளைவுகளால் ஏற்பட்ட பொருளாதாரத் தாக்கங்களால் அவர்கள் பாதிக்கப்படுவதும் மிக அதிகம். உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 60% பெண்கள் அமைப்புசாரா துறையில் வேலை செய்கிறார்கள். இதனால் அவர்கள் வறுமைக்குத் தள்ளப்படும் அபாயத்திற்கு ஆளாகிறார்கள். பொது முடக்கத்தால் பள்ளிகள் மூடல் மற்றும் வயதானவர்களைக் கவனித்துக்கொள்ளுதல் ஆகியவற்றால் பெண்களின் ஊதியம் பெறாத பங்களிப்பு அதிகரித்துள்ளது.

பொது முடக்கத்தால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது. வருமான இழப்பு, வேலையிழப்பு ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக பெண்கள் இருக்கின்றனர். வேலை கொடுப்பதில் ஆண்களுக்குத்தான் முன்னுரிமை. பெண்கள் இரண்டாம்பட்சம்தான். உண்டு உயிர் வாழ்வதே பெண்களின் அடிப்படைத் தேவையாக மாறியிருக்கிறது. குடும்பத்தின் கடைசி உணவு பெண்களுக்குத்தான்" என்றார்

ஊரடங்கிலும் தொடரும் இந்த நிலைமையை "வறுமைக்கு எப்போதும் பெண்ணின் நிறம்தான் இருக்கும்" என விமர்சிக்கிறார் அஜிதா.

"நகர்ப்புற வணிகமயமான திட்டங்களைக் கைவிட்டு விவசாயம் சார்ந்த பொருளாதாரத் திட்டங்களை வகுக்க வேண்டும். கிராமங்கள் தன்னிறைவு அடைவதற்கான திட்டங்களை ஏற்படுத்த வேண்டும். எல்லாவற்றையும் சந்தை சார்ந்த பொருளாதாரமாக மாற்றியதன் விளைவு இது. ஏழை மக்கள், விவசாயம் சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கும்போதுதான் பெண்களின் பொருளாதார தேவைகளை நிவர்த்தி செய்ய முடியும்" என்பது அஜிதாவின் வாதம்.

உலக மக்கள்தொகை 1 பில்லியன் என்ற அளவை எட்ட நூறாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகின. பின்னர் வெறும் 200 ஆண்டுகளில் மக்கள்தொகை 7 மடங்காக அதிகரித்தது. 2011 ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை 7 பில்லியன் என்ற அளவை எட்டியது. இப்போது அது 7.7 பில்லியன் என்ற அளவாக உள்ளது. இது, 2030 ஆம் ஆண்டில் 8.5 பில்லியன், 2050 ஆம் ஆண்டில் 9.7 பில்லியன், 2100 ஆம் ஆண்டில் 10.9 பில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபகாலமாக, கருவுறுதல் விகிதங்கள், ஆயுட்காலம் ஆகியவற்றில் பெருத்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 1970-களில், பெண்கள் சராசரியாக நான்கைந்து குழந்தைகளைப் பெற்றனர். 2015-ல் இது ஒரு பெண்ணுக்கு 2,3 குழந்தைகள் என்ற அளவுக்குக் கீழ் குறைந்தது. அதேசமயம், 1990-களில் ஆயுட்காலம் 64.6 வயதாக இருந்தநிலையில், அது 2019-ம் ஆண்டில் 72.6 வயதாக அதிகரித்தது.

தற்போது உலகம் அதிக அளவிலான நகரமயமாக்கல், இடம்பெயர்வு ஆகியவற்றைச் சந்தித்து வருகிறது. 2007-ம் ஆண்டில் தான் முதன்முதலாக கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் அதிகமான மக்கள் வாழத்தொடங்கிய ஆண்டு. 2050-ம் ஆண்டுக்குள் உலகின் 66 சதவீத மக்கள்தொகை, நகரங்களில் வாழ்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, வருமானப் பகிர்வு, வறுமை, சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும். மேலும், சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி, வீட்டு வசதி, சுகாதாரம், தண்ணீர், உணவு, ஆற்றல் ஆகியவற்றுக்கான உலகளாவிய அணுகலை உறுதி செய்வதற்கான முயற்சிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கு கொள்கை வகுப்பாளர்கள், பாலின சமத்துவத்துடன் எல்லோருக்குமான நிலைத்த தேவைகளைக் கவனப்படுத்தும் கொள்கைகளை வகுக்க வேண்டும்.

தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x