Last Updated : 10 Jul, 2020 11:56 AM

 

Published : 10 Jul 2020 11:56 AM
Last Updated : 10 Jul 2020 11:56 AM

கரோனா நோயாளிகளுக்கு மூளை, நரம்பியல் பிரச்சினை ஏற்படுமா?- பிரிட்டன் ஆய்வு பற்றி மருத்துவர் விளக்கம்!

உலகம் முழுவதுமே கரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து, தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. அதேவேளையில் கரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மருத்துவ உலகம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றன. அந்த வகையில் பிரிட்டன் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு மூளை, நரம்பியல் சார்ந்த தொந்தரவுகள் ஏற்படலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவில் கரோனா வைரஸின் தாக்கம் உள்ளது. பொதுவாக எந்த வைரஸ் தொற்று ஏற்பட்டாலும், அதுதொடர்பான அறிகுறிகள் பாதிக்கப்பட்டவருக்குத் தலைகாட்டும். ஆனால், கரோனா வைரஸ் எந்தவித அறிகுறியும் காட்டாமல் மக்களைப் பாதிக்கிறது. இந்தச் சூழ்நிலையில் பிரிட்டன் மருத்துவ விஞ்ஞானிகள், எந்தவித அறிகுறியும் இல்லாமல் கரோனா தொற்று ஏற்பட்ட சிலரிலும் தொற்றிலிருந்து விடுபட்ட சிலரிலும் மூளை பாதிப்பை அதிகம் பார்க்க முடிவதாக ஆய்வறிக்கையில் சொல்லியிருக்கிறார்கள். அரிதாக, பிரிட்டனில் சிலருக்கு கரோனாவின் முதல் அறிகுறியாக மூளை பாதிப்பே இருந்ததாகவும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் முதல் கரோனா பாதிப்பு, ஜனவரி 31-ம் தேதி ஏற்பட்டது. அப்போது முதல் தற்போது வரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மூளை பாதிப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை 3 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு மேற்கொண்ட 40 பேரில், 12 பேருக்கு மூளை வீக்கம்; 10 பேருக்கு மயக்கம்; 8 பேருக்கு நரம்பு பாதிப்பு, 8 பேருக்குப் பக்கவாதம் வரக்கூடிய நரம்பு மண்டலப் பாதிப்பு இருந்ததையும் ஆய்வில் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், இந்தப் பாதிப்பு ஏற்பட்டவர்களில் 5 சதவீதத்தினர் உயிரிழந்துவிட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள் குறித்து திருச்சியைச் சேர்ந்த மூளை, நரம்பியல் நிபுணரும், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் மூளை, நரம்பியல் துறைத் தலைவருமான டாக்டர் எம்.ஏ. அலீமிடம் கேட்டோம். “சில வைரஸ்களுக்கு உடல் உறுப்புகள் எதிர்வினையாற்றும். அந்த வகையில் கரோனா வைரஸ் மூளையைப் பாதிக்கலாம். பொதுவாகவே வைரஸ் காய்ச்சல் வந்தால், எல்லா உறுப்புகளிலும் அது தாக்கத்தை ஏற்படுத்தும். அது மூளையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதன்படி கரோனா நோய் இருக்கும்போதும், வந்துசென்ற பிறகும் சிலருக்குப் பாதிப்பு வரலாம். கரோனா சிகிச்சையோடு, அதற்கான சிகிச்சையையும் சேர்த்துக் கொடுத்தால், அந்தப் பாதிப்பு சரியாகிவிடும்” என்று தெரிவித்தார் டாக்டர் அலீம்.

கரோனா வந்தவர்கள் தங்களுக்கு மூளை, நரம்பியல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்வது எப்படி? “ஒருவேளை பக்கவாதம் ஏற்பட்டால், கை, கால் செயலழிந்துபோகும். நரம்பியல் பாதிப்பு ஏற்பட்டால், உட்கார்ந்து எழுவதில் பிரச்சினை ஏற்பட்டு, போலியோ நோய் போல இருக்கும். சிலருக்கு மயக்கம் ஏற்படலாம். சீனாவில் கரோனா வந்தபோதே, இதுபோன்ற பாதிப்புகள் பற்றியும் சொல்லியிருந்தார்கள். குடல், இரைப்பை சார்ந்த பிரச்சினை ஏற்படும் என்று அப்போது சொன்னதுபோலவே மூளை, நரம்பியல் பாதிப்பும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

கரோனா தொற்று ஏற்பட்ட எல்லோருக்கும் இது ஏற்படும் என்று சொல்வதற்கில்லை. சிலருக்கு ஏற்படலாம். இதை நினைத்து அச்சப்படவும் தேவையில்லை. ஒருவேளை உடலில் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், உடனே மருத்துவமனைக்கு சென்றுவிட வேண்டும்” என்று டாக்டர் அலீம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x