Last Updated : 07 Jul, 2020 08:05 PM

7  

Published : 07 Jul 2020 08:05 PM
Last Updated : 07 Jul 2020 08:05 PM

பழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி?- கல்வெட்டு ஆய்வாளர்கள் தரும் புதிய செய்தி

ஏகநாதன் கோயில்.

மதுரைக்கு 20 கிலோ மீட்டர் மேற்கில் உள்ள கிண்ணிமங்களம் கிராமத்தில் பழமையான ஏகநாதர் கோயிலும், அதையொட்டிய மடமும் இருக்கின்றன. கடந்த ஆண்டு புதிய கட்டிடம் கட்டுவதற்காக அந்தக் கோயில் அருகே நிலத்தைத் தோண்டியபோது பழங்காலப் பொருட்கள் கிடைத்தன. அவற்றை ஆய்வு செய்த கல்வெட்டு ஆய்வாளர் காந்திராஜன் குழுவினர், ஒரு சிறு தூணில் தமிழி எழுத்துகள் இருப்பதைக் கண்டறிந்ததோடு, அதில் ஏகன் ஆதன் கோட்டம் என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதையும் உறுதி செய்தனர்.

இந்தக் கல்வெட்டைத் தொடர்ந்து ஆய்வு செய்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக தொல்லறிவியல் முனைவர் பட்ட ஆய்வாளர் ஆ.மணிகண்டன், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத் தொல்லியல் முனைவர் பட்ட ஆய்வாளர் வே.ராஜகுரு ஆகியோர் புதிய செய்தி ஒன்றை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.

இதுகுறித்து அவர்கள் ’இந்து தமிழ்’ இணையதளப் பிரிவுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''கந்து (கல்தூண்) கல்வெட்டில் 'ஏகன் ஆதன் கோட்டம்' என்று எழுதப்பட்டு இருப்பதை, 'ஏகன் ஆதன் என்பவரின் கோட்டம்' என்று பொருள் கொள்ளலாம். கல்வெட்டில் கூறப்பட்டுள்ள 'ஏகன் ஆதன்' என்பவர், இந்த ஊரில் உள்ள மிகப் பழமையான குருகுலத்தின் முதல் சித்தராகக் கருதப்படுகிறார்.

'கோட்டம்' என்ற சொல்லுக்குக் 'கோவில்' என்பது பொருள். புறநானூறு 299-ம் பாடலில் 'முருகன் கோட்டம்' குறிப்பிடப்படுகிறது. தமிழர்களின் இறை வழிபாட்டில் 'கந்து' வழிபாடு மிகப் பழமையானது. 'கல் தூண்' என்ற சொல்லே 'கந்து' எனச் சுருங்கியுள்ளது. பழமையான கந்து வழிபாடு, பின்னர் லிங்க வழிபாடாக மாறியுள்ளதற்கு இக்கல்வெட்டும் கந்துவும் சான்றாக உள்ளன.

கீழடி, கொடுமணல், அரிக்கமேடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நடந்த அகழ்வாய்வுகளில் கிடைத்த பானை ஓடுகளில் 'ஆதன்' என்ற சொல் பயின்று வருகிறது. இதன் மூலம் குழுவின் தலைவர், மன்னன் இவர்களோடு கலைகளைக் கற்றுக்கொடுத்த சித்தரும், ஆதன் என அழைக்கப்பட்டிருப்பது உறுதியாகிறது. இக்கல்வெட்டில் சொல்லப்பட்ட 'ஏகன் ஆதன் கோட்டம்' என்பது பின்னாளில் 'ஏகநாதன் பள்ளிப்படை' என்றும், பிறகு 'ஏகநாதர் திருக்கோயில்' என்றும் மாறியிருக்கிறது. தமிழ் இலக்கணப் புணர்ச்சி விதியின்படி ஏகன் ஆதன் என்பது ஏகனாதன் என்றாகி பின்னாளில் ஏகநாதன் என்றானது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இதே அடிப்படையில் தமிழகத்தில் அமைந்திருக்கும் பிற கோயில் இறைவனின் பெயர்களை ஒப்புமை செய்யும்போது அதில் பழங்காலத் தமிழ்ச் சொற்களோடு 'ஆதன்' என்ற சொல் இணைந்து (னாதன்) 'நாதன்' என்ற சொல்லாகத் திரிபடைந்திருப்பதை அறியலாம். 'சொக்கன் ஆதன்' என்ற மதுரையை ஆண்ட மன்னனின் பெயர்தான் 'சொக்கநாதன்' என ஆகியிருக்கிறது. இதேபோல் 'நாகன் ஆதன்' என்ற பெயர் நாகநாதன் என்றும், 'கயிலாயன் ஆதன்' கயிலாயநாதன் என்றும், 'ராமன் ஆதன்' ராமநாதன் என்றும் நிறுவலாம். இந்தக் கல்வெட்டை அடிப்படையாகக்கொண்டு கோயில்களின் நாதன் என்ற சொல்லாடல் ஆதன் என்ற சொல்லிலிருந்து பிறந்தது என நிறுவலாம்.

தமிழ்ச் சொற்கள் எவ்வாறு பிற மொழிகளில் உள்வாங்கிக் கொள்ளப்பட்டன என்பதற்கான சான்றாக இக்கல்வெட்டு அமைந்திருப்பது தமிழ் மொழி வரலாற்றில் மிக முக்கிய மைல்கல் ஆகும். 'ஆதன்' என்று பெயரிடும் வழக்கம் சேரர்களிடையேயும், பாண்டியர்களிடையேயும் இருந்துள்ளது. உதாரணமாக, 'சேரல் ஆதன்' சேரலாதன் என்றும், 'வாழி ஆதன்' வாழியாதன் என்றும், 'ஆதன் உங்கன்' ஆதனுங்கன் என்றும் வழங்கி வந்துள்ளதைச் சான்றாகக் கொள்ளலாம்.

இப்படியாக இந்திய மொழியியல் வரலாற்றில் இக்கல்வெட்டு குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பிடிப்பதோடு, மனித வர்க்கவியல் ஆய்விலும் ஒரு சிறந்த பண்பாட்டுத் தொடர்ச்சி கொண்ட குருகுல நிறுவனத்தின் சித்தர் வழிக் கல்வி கற்கும் முறைக்கும் புதிய சான்றுகளைத் தரும் என்பதில் ஐயமில்லை. குருகுலக் கல்வி முறை தமிழ்நாட்டில் மிகப் பழங்காலம் முதல் இயங்கி வந்திருப்பதையும், குருகுலக் கல்வி அளித்த சித்தர்கள் தெய்வமாக வணங்கப்பட்டு வந்துள்ளதையும் இதன் மூலம் அறிய முடிகிறது’’.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x