Published : 13 Sep 2015 12:06 PM
Last Updated : 13 Sep 2015 12:06 PM

சையது முஜ்தபா அலி 10

வங்காள எழுத்தாளரும் பன்மொழி அறிஞருமான சையது முஜ்தபா அலி (Syed Mujtaba Ali) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* வங்காள மாகாணத்தின் சில்ஹட் மாவட்டம் கரீம்கஞ்ச் நகரில் (தற்போது அசாமில் உள்ளது) 1904-ல் பிறந்தார். தந்தை உதவிப் பதிவாளர். சில்ஹட் நகரில் இன்டர்மீடியட் படிப்பை முடித்தார். தாகூரின் படைப்புகளால் ஈர்க்கப்பட்ட இவர், கவிதைகள் எழுதி அவருக்கு அனுப்பிவைத்தார்.

* சாந்திநிகேதன் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் 1926-ல் பட்டப் படிப்பை முடித்தார். அங்கு முதல்முறையாகப் பட்டம் பெற்ற மாணவர்களில் இவரும் ஒருவர். தாகூரை தன் குருவாக ஏற்றார். ‘ஸிட்டு’ என்று செல்லப் பெயரிட்டு அழைத்த தாகூரும் இவரைத் தன் பிரியமான சீடராகக் கருதினார்.

* அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், ஜெர்மனியின் பெர்லின், போன் நகரப் பல்கலைக்கழகங்கள், எகிப்தின் கெய்ரோ நகரில் உள்ள அல்அஸார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயின்றவர். மதக் கோட்பாடுகள் குறித்து ஆராய்ச்சி செய்து போன் பல்கலைக்கழகத்தில் 1932-ல் முனைவர் பட்டம் பெற்றார்.

* ஆப்கனின் தலைநகர் காபூல், குஜராத் மாநிலம் பரோடா, வங்காளத்தின் போகுரா நகரங்களில் உள்ள கல்லூரிகள் மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். வங்காள மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட இவர் பிரெஞ்ச், அரபி, பாரசீகம், உருது, இந்தி, சமஸ்கிருதம், மராத்தி, குஜராத்தி ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் நிபுணராகத் திகழ்ந்தார்.

* ‘சத்யவீர்’ என்ற புனைப்பெயரில் ஆனந்தபாஸார் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதினார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு கிழக்கு பாகிஸ்தானில் குடியேறினார். அங்கு உருது மொழி திணிப்பை எதிர்த்தார். தேசிய மொழியாக வங்கமொழியை அறிவிக்க வலியுறுத்தி பத்திரிகைகளில் கட்டுரை எழுதினார்.

* அரசுக்கு எதிராக எழுதியது குறித்து பாகிஸ்தான் அரசு விளக்கம் கேட்டது. விளக்கம் அளிக்க விரும்பாமல், அங்கிருந்து வெளியேறி இந்தியா வந்தார். 1971-ல் வங்கதேசம் தனிநாடாக உருவானதும் அங்குத் திரும்பினார். இறுதிவரை அங்கேயே வாழ்ந்தார்.

* சொந்த வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு வங்காள மொழியில் பல கதைகளை எழுதினார். இவரது தனித்துவமான பாணியால் இக்கதைகள் மிகவும் பிரபலமடைந்தன. ‘தேஷெ பிதேஷெ’, ‘ரம்ய ரசனா’, ‘பஞ்சதந்த்ரா’ ஆகியவை இவரது சிறந்த படைப்புகள். தனது உலக சுற்றுப்பயண அனுபவம் குறித்து 1948-ல் ‘தேஷ்’ பத்திரிகையில் எழுதினார்.

* இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சிலின் செயலராகப் பணியாற்றினார். இந்த அமைப்பு நடத்திய ‘தகாஃபதுல் ஹிந்த்’ என்ற அரபுமொழி பத்திரிகையின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

* டெல்லி, கட்டாக், பாட்னா அகில இந்திய வானொலி நிலையங்களின் நிலைய இயக்குநராக 1952 முதல் 1956 வரை பணியாற்றினார். 1956-ல் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் முதலில் ஜெர்மன் மொழிப் பேராசிரியராகவும் பின்னர் இஸ்லாமிய கலாச்சாரப் பேராசியராகவும் பணியாற்றினார்.

* நரசிங்கதாஸ் விருது, ஆனந்த புரஸ்கார் உட்பட பல விருதுகளைப் பெற்றார். கால, தேச, மத, மொழி எல்லைகளுக்கு அப்பாற்பட்ட படைப்பாளியான சையத் முஜ்தபா அலி 70-வது வயதில் (1974) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x