Published : 05 Jul 2020 11:49 AM
Last Updated : 05 Jul 2020 11:49 AM
காதலிப்பதும் அந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் என்கிற ஒன்லைனை வைத்துக்கொண்டு ஓராயிரம் படங்கள் வந்திருக்கின்றன. எத்தனையோ படங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன. காதலுக்கு ஜாதி வில்லன், மதம் வில்லன், பணம் வில்லன், முறைமாமன் வில்லன், ஊர்ப்பண்ணையார் வில்லன், அண்ணன் வில்லன், அப்பா வில்லன் என்றெல்லாம் விதம்விதமான வில்லன்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் காதலுக்கு வில்லனாக அவர்களின் வயதும் உணர்வுமே வில்லனாக இருப்பதை உணர்த்தியதில்தான் வித்தியாசப்படுகிறது ‘பன்னீர் புஷ்பங்கள்’.
இன்றைக்கு இயக்குநர் பி.வாசு. இன்றைக்கு நடிகர் சந்தானபாரதி. இவர்கள் இருவரும் பாரதி வாசு என்ற பெயரில் ஆரம்பகட்டத்தில் சேர்ந்து படம் இயக்கினார்கள். தமிழ் சினிமாவில் ஜேடி - ஜெர்ரி என பின்னர் இயக்குநர்கள் வந்தார்கள். கிருஷ்ணன் பஞ்சு அந்தக் காலத்தின் இரட்டை இயக்குநர். எண்பதுகளின் தொடக்கத்தில், பாரதி வாசுவை அடுத்து, ராபர் ராஜசேகர் வந்தார்கள். ‘பாலைவனச்சோலை’ கொடுத்தார்கள். அதேவருடத்தில் அதற்கு முந்தைய மாதத்தில், பாரதி வாசு இணைந்து வழங்கியதுதான் ‘பன்னீர் புஷ்பங்கள்’.
சுரேஷ் இந்தப் படத்தில்தான் அறிமுகம். அதேபோல் சாந்தி கிருஷ்ணாவும் இதில்தான் அறிமுகமானார். ஊட்டியில் உள்ள பள்ளி ஒன்றின் மாணவர்கள். இருவரும் சந்திக்கிறார்கள். நட்பாகிறார்கள். சாந்திகிருஷ்ணாவின் மீது சுரேஷிற்கு காதல் மலர்கிறது. இந்த சமயத்தில், அந்தப் பள்ளிக்கு ஆசிரியராக பிரதாப் வருகிறார். சாந்தி கிருஷ்ணாவின் அவுட் ஹவுஸில் தங்குகிறார்.
அதன் பிறகு, ஆசிரியருடன் பள்ளி வருகிறார் சாந்தி கிருஷ்ணா. பார்க், சினிமா என்று அவருடனேயே பொழுது கழிகிறது. இதைப் பார்த்து நொந்து போகிறார் சுரேஷ். காதலுக்கு ஆசிரியர்தான் வில்லனாக வந்துவிட்டார் என்று குமுறுகிறார்.
இதனிடையே, இடையிடையே சுரேஷும் சாந்திகிருஷ்ணாவும் எப்போதாவது சந்திக்கிறார்கள். ஆனாலும் ஆசிரியருடனே பொழுதைக் கழிக்கும் சாந்திகிருஷ்ணாவும் சுரேஷும் சேர, நண்பர்கள் ஐடியா கொடுக்கிறார்கள். ‘இருவரும் ஊரைவிட்டு ஓடிப்போய்விடுங்கள்’ என்கிறார்கள். அதன்படி, இருவரும் ஊரைவிட்டு ஓடுவதற்காக, ரயிலேறுகின்றனர்.
அந்த ரயிலை, ஊரே கட்டையைத் தூக்கிக் கொண்டு வந்து துரத்துவதாகத்தானே கற்பனை செய்கிறீர்கள். ஊரைவிட்டு ஓடுகிறவர்களுக்குக் கட்டையைக் கொடுக்க, ஜாதியோ மதமோ பணமோ அண்ணனோ அப்பாவோ முறைமாமனோ வில்லனாக வரவில்லை. ‘இதெல்லாம் காதலே இல்லை. விடலைப் பருவத்தின் உணர்வு, அவ்வளவுதான்’ என்று முகத்தில் அறைகிற மாதிரி சொல்லாமல், மனதில் புரியும்படி சொன்னதுதான் ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தின் பன்னீர் டிரீட்மெண்ட்.
‘இந்தப் பொண்ணை கூட்டிட்டுப் போறியே. அந்தப் பொண்ணை நாலுபேர் மறிச்சிக்கிட்டு ஏதோ பண்றதுக்கு முயற்சி பண்ணினா, நீ என்ன செய்வே? அவங்ககிட்டேருந்து அவளைக் காப்பாத்த முடியுமா?’ என்கிற ஆசிரியரின் கேள்விக்கு தலை குனிந்து நிற்கிறான் ஹீரோ. ‘இது காதல் இல்லைன்னு புரிஞ்சுக்கோ. இது விடலைப்பருவத்தின் உணர்ச்சி’ என்று சொல்ல, அவரவர்கள் படிப்பைத் தொடர, அவரவர் வீடுகளுக்குச் செல்லுகிறார்கள் என்பதாக படம் முடிகிறது.
சோமசுந்தரேஸ்வரரின் கதை. கதை பிடித்துப் போன கங்கை அமரன், பாரதிவாசுவிடம் சொல்லி, படத்தயாரிப்புக்கு பெரும்பங்காற்றியிருக்கிறார். படத்துக்குப் பக்கபலமாக இருந்ததன் நன்றியாக, கங்கை அமரன் வழங்கும் என்றுதான் டைட்டில் வருகிறது. சுரேஷின் பெயர் பிரபு. பிரதாப்பின் பெயர் பிரேம். இதுவும் நன்றியுணர்வு அடிப்பையால் (வெங்கட்பிரபு, பிரேம்ஜி) விளைந்தவையே! ஊட்டி, சுரேஷ், சாந்திகிருஷ்ணா என எல்லாமே இளமை.
முக்கியமாக, இளமை ததும்புகிற இளையராஜாவின் இசை. படத்தின் டைட்டிலில் இருந்தே வெஸ்டர்ன் இசையை தடதடக்க விட்டிருப்பார் இளையராஜா. ‘ஆனந்த ராகம்’, ‘பூந்தளிராட’, ‘கோடைகால காற்றே’ என பாடல்கள் ஒவ்வொன்றிலும் அத்தனை நேர்த்தி. மலேசியா வாசுதேவனுக்கு மிகச்சிறந்த மெலடியாக ‘கோடைகால காற்றே’ அமைந்திருக்கும். உமா ரமணனுக்கு ‘ஆனந்த ராகம்’ கொடுத்திருப்பார். ‘பூந்தளிராட’வில் எஸ்.பி.பி. இளமை கூட்டியிருப்பார்.
விடலைத் தனமான காதல்தான் என்றிருந்தாலும் ஒரு இடத்தில் விடலையின் எல்லையைத் தொட்டிருக்கமாட்டார்கள் இயக்குநர்கள். ரொம்ப டீஸண்டாகவே விடலையின் காதல் பக்கத்தை மட்டுமே காட்சிப்படுத்தியிருப்பார்கள். 90களில் வெளிவந்த ‘காதலுக்கு மரியாதை’ போலவே, எண்பதுகளில் வந்த ‘பன்னீர் புஷ்பங்கள்’ படமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.
விடலை வயது கொண்டவர்களை, அவர்களின் பெற்றோரும் ஆசிரியர்களும் எவ்விதம் கையாளவேண்டும் என்பதை மெசேஜ் சொல்கிறேன் என்றெல்லாம் இல்லாமல், மிக மிக யதார்த்தமாகச் சொல்லியிருப்பார்கள்.
மிகப்பெரிய ஹிட்டடிக்கும் பாடல்கள், பின்னணி இசையில் மாய்ஜாலம் என்று இசையில் இன்னொரு உயரம் தொட்டார் இளையராஜா. சொல்லப்போனால், இளையராஜா கிராமத்துப் படங்களுக்குத்தான் இசையமைப்பார் என்பதை ’சிகப்பு ரோஜாக்கள்; ’ப்ரியா’ மாதிரியான படங்களில் உடைத்துக் கொண்டே வந்தார். இதில், அப்படியொரு ஸ்டைலீஷ் இசையைக் கொடுத்திருப்பார். இந்தப் படத்துக்கு சம்பளமே வாங்கவில்லை என்பதுதான் கூடுதல் சிறப்பு.
ஸ்ரீதர் படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்பது இளையராஜாவின் ஆசை. ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்துக்கு இளையராஜாவை இசையமைக்கச் செய்யலாம் என்பது ஸ்ரீதரிடம் உதவியாளர்களாக இருந்த சந்தானபாரதி, வாசு ஆகியோரின் கருத்து. அதன்படி, ஸ்ரீதர் இளையராஜாவை அழைத்து இசையமைக்க வைத்தார். அந்த நன்றியால், அவர்களின் முதல் படத்துக்கு ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்துக்கு இளையராஜா சம்பளமே வாங்காமல் இசையமைத்துக் கொடுத்தார்.
1981ம் ஆண்டு, ஜூலை 3ம் தேதி வெளியானது ‘பன்னீர் புஷ்பங்கள்’. கிட்டத்தட்ட, 39 வருடங்களாகியும், பன்னீர் புஷ்பங்களின் மணம் நம் மன நாசிகளில் இன்னும் நிமிண்டி, நறுமணத்தை வழங்கிக் கொண்டே இருக்கிறது.
‘பன்னீர் புஷ்பங்கள்’ டீமிற்கு, மணக்க மணக்க பூங்கொத்துகள் பார்சல்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT