Published : 04 Jul 2020 07:17 PM
Last Updated : 04 Jul 2020 07:17 PM
சாத்தான்குளம் சம்பவத்தில் இறந்தவர்களின் சாதியைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பெயரில் வெளியான விளம்பர அறிக்கையை விமர்சித்து கார்த்தி சிதம்பரம் ட்விட்டரில் கொளுத்திப் போட்ட தீ, இப்போதைக்கு ஓயாது போலிருக்கிறது.
சாத்தான்குளம் சம்பவத்திற்குக் கே.எஸ்.அழகிரி பெயரில் வெளியான விளம்பர அறிக்கையில், ‘ஜெயராஜ் நாடார், பென்னிக்ஸ் நாடார்’ என சாதியின் பெயர் பல இடங்களில் பிரதானமாகத் தெரிந்தது. ட்விட்டரில் இதை விமர்சித்த காங்கிரஸ் சார்பு அரசியல் விமர்சகரான சுமந்த் ஸ்ரீராமன், ‘பாரம்பரியமான கட்சி சாதி அரசியல் பண்ணலாமா... சாதியை முன்னிறுத்தலாமா?’ என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு ட்வீட் வழியே பதில் சொன்ன கார்த்தி சிதம்பரம், ‘நான் சாதி அரசியலுக்கு எதிரானவன்; சாதிக்கு எதிரானவன், இவ்வளவு முன்னேறிய காலத்தில் சாதியை முன்னிறுத்தக்கூடாது’ என்றார். இவர்கள் இருவருக்கும் பதில் சொல்ல வந்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா, ‘ராஜா சர் முத்தையா செட்டியார் (கார்த்தியின் உறவினர்) , ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர், ஷிவ்நாடார் என்று பெயர்களிலேயே சாதி இருப்பது போல்தான் இதுவும்’ என்று சொன்னார்.
இதைத் தொடர்ந்து கார்த்திக்கு சமூக வலைதளத்தில் நீளமான பதில் ஒன்றைக் கொடுத்தார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வலைதள விமர்சகர் திருச்சி ஜி.கே.முரளிதரன்.
''அன்புச் சகோதரர் இனியவர் இளையநிலா கார்த்திசார் கவனத்திற்கு...
ஜெயராஜ் நாடார் குடும்பத்தில் நடந்த கொலை பாதகத்தை நாடே வன்மையாகக் கண்டிக்கிறது. நீங்களும் நானும் உட்பட. சார், நான் பலமுறை உங்களோடு பயணிக்கும் கட்சிக்காரர்களோடு நீங்கள் பேசும் அறிவார்ந்த வாதங்களைப் பார்த்துப் பிரமித்திருக்கிறேன் உலகளாவிய அளவில் எந்த ஒரு நாளைச் சொன்னாலும் அந்த நாளில் உலகம் முழுவதும் நடந்த நிகழ்வுகளைச் சொல்லி, ஐ.நா. அதனால்தான் அந்த நாளுக்குப் பெயர்சூடி சிறப்பித்திருக்கிறது என்று உடனடியாகச் சொல்லும் திறமை நினைவாற்றல் இரண்டும் உங்களுக்கு அழகாய் அமைந்திருக்கிறது.
அது சரி... வம்சாவளி!
செட்டிநாட்டு அரச பரம்பரை என்றால் சும்மாவா? நுனிநாக்கு ஆங்கிலம், தமிழிலும் ஓரளவு பாண்டித்தியம். க்ரேட். சார்... ஜி.கே.வாசன் காங்கிரஸுக்கு துரோகம் செய்துவிட்டு வெளியேறிய பிறகு வெறியேறிய மனிதனாய்த் தலைவர் ஈவிகேஎஸ் தமிழகம் முழுக்கச் சுற்றிவந்து காங்கிரஸ் கரையாமல் காத்து நின்ற சமயம், சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்திலும் ஊடகங்களிலும் உட்லண்ட்ஸ் ஓட்டலிலும் ஜி-67 அன்றும் ஒரு கூட்டத்தைத் திரட்டி, ‘காமராஜரின் பெயரைச் சொல்லியெல்லாம் இனி தமிழகத்தில் காங்கிரஸ் ஓட்டுவாங்க முடியாது’ என்று நீங்கள் பேசினீர்கள்.
இது மக்களின் கவனத்தைக் காங்கிரஸ் மீதிருந்து திருப்புவதற்காக யாருக்காகவோ யாரோ செய்யும் முயற்சி என்று பலர் அப்போது சொன்னார்கள். ஆனால், நாங்கள் நம்பவில்லை. அதன்பிறகு அலை ஓய்ந்ததனால் அமைதியாகிவிட்டீர்கள்.
இது இரண்டாவது இன்னிங்ஸ்...
இப்போது கட்சியைக் கிராமம் வரை தனியொருவராகத் தூக்கிச் சுமந்து கட்சியைக் காப்பாற்றுபவர் தலைவர் அழகிரி. ஈவிகேஎஸ்ஸைக் காட்டிலும் கனிவாய்க் கண்ணியமாய், அழகாய் அற்புதமாய் உணர்ச்சி வசப்படாமல், உண்மையாய், நடிக்காமல் தொண்டர்களின் தோள்தொட்டு இயக்கம் சிறக்கச் செய்கிறார்.
சாத்தான்குளச் சங்கதியில் அரசியல் செய்யாமல் அந்தக் குடும்பத்தின் இன்றைய தேவையான நீதிக்காகவும் நாளைய தேவையான நிதிக்காகவும் நிஜமாகவே அக்கறைப்படுகிறார் அழகிரி. சாதிப் பெயரைச் சொல்லித் தானாக விளம்பரம் கொடுக்கவில்லை. விளம்பரம் கொடுத்தவர்கள் தலைவரை வரவேற்றுக் கொடுக்கவில்லை அந்த விளம்பரம் ஒரு அறிவிப்பு அவ்வளவுதான்.
விளம்பரம் கொடுத்தவர்கள் சம்பவத்தைச் சொல்லி மக்களைத் திரட்ட அழகான உத்தியோடு வார்த்தைகளைக் கோத்திருக்கிறார்கள். அரசியல் செய்கிற ஆற்றல் மிக்கவர்களைப் பாராட்டுங்கள். காங்கிரஸ் தென் மாவட்டங்களில் வலுவாய் இருப்பதற்கு சாதிப்பிடிப்பு மிக முக்கியக் காரணி. அப்பாவிடம் கேளுங்கள் அழகாய்ச் சொல்லுவார். இறந்து போனவர் ஜெயராஜ் நாடார்தான். அவர் மகன் பெனிக்ஸ் நாடார்தான். அதில் சந்தேகமில்லை!
அதுபோகட்டும். தமிழக அரசியலில் சாதியில்லாமல் எதுவும் இல்லை. நம் காங்கிரஸ் கட்சியில்கூட ஐந்து செயல் தலைவர்களை அறிவித்திருக்கிறார்களே... அவர்கள் கட்சிக்காக நெடுங்காலம் பாடுபட்டவர்கள் என்பதிலே எவருக்கும் சந்தேகமில்லை. இருந்தாலும் அந்த அளவுகோலிலா அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்? சாதிக்கொருவர் என்ற கோட்டாவில் வந்ததாகத்தானே அவர்களே சொன்னார்கள்! அது போகட்டும்...
பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் குருபூஜைக்கு திமுக அதிமுகவிலிருந்து ஆரம்பித்து நேற்று முளைத்த கட்சிகள் வரை வரிசையில் நின்று மரியாதை செய்வது எதற்காக? தேவர் சாதி வாக்குகளைப் பறிக்கத்தானே!
காமராஜரை நாம் மட்டுமல்ல தங்களின் குலப் பெருமை காக்க வந்த குணாளனாக நாடார்கள் கொண்டாடுகிறார்கள். அம்பேத்கரை ஹரிபுத்திரர்கள் ஆண்டவனாகவே வழிபடுகிறார்கள். இங்கு உலகமே இப்படி உருமாறிப்போயிருக்க... ஒரு சின்ன விளம்பரத்தை தூக்கிக் காட்டிக் கொண்டு காங்கிரஸ் போகும் பாதையில் கல் அடுக்கித் தடுக்கிறீர்களே நியாயமா?
அண்ணன் அழகிரியை அவர் இஷ்டம்போல செயல்பட விடுங்கள்... நீங்கள் விரும்பும் நாற்காலியை அவரே உங்களுக்கு வடிவமைத்துத் தருவார். ஒரு நல்ல தளபதி கிடைத்து விட்டால் எந்தப் போரிலும் தோல்வி வராது என்பது உலக சரித்திரம் உணர்த்தும் பாடம். ஆசியப் பொருளாதார மேதையின் வழித்தோன்றல் நீங்கள். கடல் கடந்து படித்துக் கரை கண்டவர். ஒன்று வளர்த்து விடுங்கள்; அல்லது வளரவிடுங்கள்''.
ஜி.கே.முரளிதரன் இவ்வாறு பொங்கியிருந்தார்.
இதையொட்டி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த காங்கிரஸ் செயல் தலைவர்களில் ஒருவரான ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம், ''கட்சியின் எந்தத் தலைவரும் கட்சியைவிட உயர்ந்த அந்தஸ்தில் இருக்க முடியாது. பொதுவெளியில் தன்னுடைய அந்தஸ்தை உயர்த்துவதற்கு அக்கட்சியின் தலைமையைப் பொதுவெளியில் விமர்சித்தால் அது கட்சிக்கு மட்டுமல்ல கட்சியின் ஒவ்வொரு தொண்டனுக்கும் துரோகம் செய்வதற்குச் சமமாகும். கட்டுப்பாடில்லாத கட்சி உப்பில்லாத சாப்பாட்டிற்குச் சமம்; காலில்லாத நாற்காலிக்குச் சமம், அதில் உட்கார முயற்சித்தால் விழுந்துவிடுவீர்கள்; சாப்பிட முயற்சித்தால் சாப்பிட முடியாமல் போவீர்கள்'' என்று குட்டினார்.
குமாரமங்கலத்துக்கு இன்று சமூக வலைதளத்தில் ‘கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்’ என்ற தலைப்பில் பதிலடி கொடுத்திருக்கும் கார்த்தியின் ஆதரவாளரான ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் காரைக்குடி ஒய்.பழனியப்பன், ''சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டது காங்கிரஸ் கட்சி. புதிய பாரதம் படைக்க விரும்பும் தலைவர் ராகுல் காந்தியின் கரங்களுக்கு வலு சேர்க்க வேண்டிய இவ்வேளையில் மாநிலக் கமிட்டியின் அறிக்கையில் சாதியைக் குறிப்பிட்டது தவறு என்றுதான் கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சியில் கருத்துச் சுதந்திரம் உண்டு. கட்சியின் கொள்கையை நினைவுபடுத்தியது தவறா?
ஜி-67 என்பது இளைஞர்களை ஒன்றிணைத்து தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் பலத்தைக் கூட்டிடச் செய்த முயற்சி. ஆனால், அதனைத் தவறாகப் பூதாகரப்படுத்தியது ஒரு கூட்டம். காங்கிரஸ் - பாஜக என மாறி மாறி ஆடுபுலி ஆட்டம் ஆடுகிற பச்சோந்திகள், சாதி கோட்டாவில் பதவிகளைப் பெற்றவர்கள் சேலத்தில் கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பைக் காக்கத் தவறியவர்கள் சிவகங்கையை நோக்கிச் சுட்டுவிரல் நீட்ட அருகதையற்றவர்கள்.
கட்சியில் ஆறு அல்லது ஏழு வருடங்கள் பணியாற்றி உச்ச பதவிகளைப் பெற்றுள்ள உங்களுக்கு, அடிமட்டம் தெரியாது. பல லட்சம் காங்கிரஸ் தொண்டர்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்சிக்காக கொட்டிய உழைப்பையும் வியர்வையையும் நீங்கள் அறுவடை செய்துள்ளீர்கள். நினைவிருக்கட்டும். வென்றாலும் தோற்றாலும் காங்கிரஸில்தான் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தேசியம்தான் நின்றாலும் நடந்தாலும் அது நேரு குடும்பத்துடன்தான்'' என்று சீறியிருக்கிறார்.
தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவராக வருவதற்கு கார்த்தி சிதம்பரம் காய் நகர்த்துகிறார் என்ற செய்திகள் நீண்ட நாட்களாகவே சிறகடிக்கும் நிலையில், கார்த்திக்கு ஆதரவாகவும் கே.எஸ்.அழகிரிக்கு ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் நடக்கும் அறிக்கைப் போர் எங்கு போய் நிற்கப் போகிறதோ தெரியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT