Published : 02 Jul 2020 08:23 PM
Last Updated : 02 Jul 2020 08:23 PM
சிவகங்கை அருகே பனையூரில் உழவில்லா இயற்கை விவசாயம் மூலம் விவசாயி ஜெயலட்சுமி (48) சாதித்து வருகிறார்.
வறண்டு கிடந்த பூமியை இயற்கை விவசாயம் மூலம் பசுமையாக்கியுள்ளார். எம்.ஏ.,எம்.பில், முடித்த அவர் இரண்டு ஏக்கர் 60 சென்டில் கொய்யா, நாவல், பலா, வாழை, பூந்திக்கொட்டை, நெல், கடலை, சம்பங்கி பயிரிட்டுள்ளார். நம்மாழ்வார் மூலம் ஈர்க்கப்பட்ட அவர், செயற்கை உரங்களை பயன்படுத்துவதில்லை.
இவர் உழவில்லா விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். தினமும் வருமானம் கிடைக்கும் வகையில் நெல் அறுவடை முடிந்ததும் 30 சென்ட் இடத்தில் கையால் மேடு பகுதிகளை சரிசெய்துவிட்டு சம்பங்கி கிழங்கு நடவு செய்துள்ளார்.
சம்பங்கி கிழங்குகளை 20 நிமிடம் தசகாவ்யாமில் ஊறவைத்து நட்டுள்ளார். ஒவ்வொரு கிழங்கிற்கும் ஒரு ஜான் இடைவெளி விட்டுள்ளார். ஒவ்வொரு பாத்திக்கும் இடையிலும் மூடாக்கு போட்டுள்ளார்.
களை, கரும்புக் கழிவு, இளநீர் கூடு, தேவையில்லாத குச்சிகளை பயன்படுத்தி மூடாக்கு போட்டுள்ளார். இதன்மூலம் ஈரம் தக்க வைக்கப்படுகிறது. மண் பதமாக மாறி வேர்களுக்கு சுலபமாக தண்ணீர் கிடைக்கும்.
மாதம் ஒரு முறை தொழு உரமும், 5 நாளுக்கு ஒருமுறை அமிர்த கரைசலும் தெளிக்கிறார். பூச்சி பாதிப்பு இருந்தால் மூலிகை பூச்சிவிரட்டித் தெளிக்கிறார். 30 சென்ட்டில் 8 கிலோ வரை கிடைக்கிறது. சம்பங்கிக்கு இடையே முருங்கை நடவு செய்துள்ளார்.
இதுகுறித்து விவசாயி ஜெயலட்சுமி கூறியதாவது: எனது தோட்டத்தை ஒருங்கிணைந்த பண்ணையமாக மாற்றிவிட்டேன். மாடு, கோழிகள் வளர்க்கிறேன்.
நம்மாழ்வார் கூறியபடி நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்து வருகிறேன். தோட்டத்தை உயிர்வேலி மூலம் அடைத்து வருகிறேன், என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT